Published : 25 Sep 2024 05:44 PM
Last Updated : 25 Sep 2024 05:44 PM

2004 அதிசயம்: லாரா தலைமையில் மே.இ.தீவுகள் ‘த்ரில்’ ஆக வென்ற அரிதான ஐசிசி கோப்பை | மறக்குமா நெஞ்சம்

வெற்றிக் கொண்டாட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

புது டெல்லி: மே.இ.தீவுகள் அணியின் பிரபல்யம் வீழ்ந்து விட்டக் காலக்கட்டம். பிரையன் லாரா தன் இறுதிக் கட்டத்தில் இருந்தாலும் கேப்டனாகப் பொறுப்பில் இருந்தார். கிறிஸ் கெயில், ராம்நரேஷ் சர்வான், சந்தர்பால், டிவைன் பிராவோ, இவர்களோடு ரிக்கார்டோ போவல் என்னும் காட்டடி மன்னனும் அணியில் இருந்தார். பந்து வீச்சில் மெர்வின் டிலானைத் தாண்டி அதிகம் அறியப்படாத பவுலர்களாகவே இருந்த சமயம். அப்போதுதான் இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றது.

பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. அதில் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 259/9 என்ற ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய மைக்கேல் வான் தலைமையிலான இங்கிலாந்து அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ட்ரஸ்கோதிக் 88 பந்துகளில் 81 ரன்களையும், மைக்கேல் வான் 81 ரன்களையும், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 52 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கிளென் மெக்ரா, ஜேசன் கில்லஸ்பி, பிரெட் லீ, மைக்கேல் காஸ்பரோவிச் போன்ற சிறந்த பவுலிங் இருந்தும் இங்கிலாந்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.

மற்றொரு அரையிறுதி சவுத்தாம்ப்டனில் பாகிஸ்தான், மே.இ.தீவுகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் இன்சமாம் உல் ஹக் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணி 131 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 29-வது ஓவரில் 132/3 என்று அபார வெற்றி பெற்று இங்கிலாந்தை இறுதியில் எதிர்கொள்ளத் தயாரானது.

ஆனால் இந்தப் போட்டியில் ஷோயப் அக்தர் வீசிய அதிவேக மிரட்டல் பந்து வீச்சு மறக்க முடியாது. கிறிஸ் கெயில் 1 ரன்னில் எல்.பி., ஆனார். வேவல் ஹைண்ட்ஸ் 5 ரன்களில் அக்தர் பவுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சர்வாண் 56 ரன்கள் எடுக்க, லாரா 31 ரன்களில் ஷோயப் அக்தர் பந்தில் காயமடைந்தார். அக்தர் 7 ஒவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். 28.1 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் இன்றைய தினமான செப்டம்பர் 25-ல் ஓவலில் இங்கிலாந்தை எதிர்கொண்டது வெஸ்ட் இண்டீஸ். டாஸ் வென்ற பிரையன் லாரா முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். ஸ்விங் பவுலிங்கிற்குச் சாதகமான சூழ்நிலையில், டிரஸ்கோதிக் மட்டும் ஒரு முனையைத் தாங்கிப் பிடிக்க இங்கிலாந்தின் மற்ற பேட்டர்கள், பிராட் ஷா, ஹைண்ட்ஸிடம் விக்கெட்டுகளை இழந்து 23வது ஓவரில் 93/4 என்று சரிவு கண்டனர். மிடில் ஓவர்களில் பிராவோ, ஹைண்ட்ஸ் இங்கிலாந்தை முடக்கினர். டிரஸ்கோதிக் 124 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து சதம் கண்டிராவிட்டால், இங்கிலாந்து அணி 200 ரன்களை எட்டியிருக்க முடியாது. அது டிரெஸ்கோதிக்கின் 8வது ஒருநாள் சதம். ஆனால் இதுவே தோல்வி பயக்கும் 5வது சதம் என்று அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பீல்டிங் அற்புதம். குறிப்பாக லாரா 3 கேட்ச்களை எடுத்ததோடு சத நாயகன் டிரஸ்கோதிக் ரன் அவுட்டிலும் பங்களிப்பு செய்தார். ஆண்ட்ரூ பிளிண்டாஃப் என்னும் அபாய ஆல்ரவுண்டரை 3 ரன்களில் வீழ்த்த, லாரா பிடித்த கேட்ச் திகைப்பூட்டும் ரகம். மிட்விக்கெட்டில் இடது புறம் டைவ் அடித்து பந்து தரையில் படவிருக்கும் சில இஞ்ச்களுக்கு முன் பிடித்த அபார கேட்ச். அது லாராவின் 100வது ஒருநாள் கேட்ச் என்பதையும் குறிப்பிட வேண்டும். 217 ரன்கள் என்பது அந்தப் பிட்சில் அப்போது, அதுவும் பிளிண்டாஃப், ஸ்டீவ் ஹார்மிசன் இருக்கும் போது டீசண்டான ரன் எண்ணிக்கைதான். கிறிஸ் கெய்ல் 23 ரன்களில் ஹார்மிசனிடம் அவுட் ஆக, வேவல் ஹைண்ட்ஸையும் ஹார்மிசன் காலி செய்ய, ஆண்ட்ரூ பிளிண்டாஃப், ராம் நரேஷ் சர்வாண், பிரையன் லாரா இருவரையும் காலி செய்தார். டிவைன் பிராவோவையும் டக்கில் பிளிண்டாஃப் பெவிலியன் அனுப்ப அந்த 80/5 என்று சரிவு கண்டது.

மே.இ.தீவுகளின் சுவர் ஷிவ்நரைன் சந்தர்பால் மட்டும் ஒருமுனையில் உயிரைப் பிடித்துக் கொண்டு சென்றார். அவர் 47 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக அவுட் ஆகும் போது வெஸ்ட் இண்டீஸ் 147/8 என்று ஆனது. 16.2 ஓவர்களில் 71 ரன்கள் மே.இ.தீவுகளின் வெற்றிக்குத் தேவை. கார்ட்னி பிரவுன், இயன் பிராட்ஷா இணைந்தனர். ஸ்டீவ் ஹார்மிசனுக்கும் பிளிண்டாஃபுக்கும் இடையே இன்னும் 7 ஓவர்கள் பாக்கி இருந்தது. இங்கிலாந்து சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை ஏறக்குறைய கொண்டாடவே தொடங்கி விட்டது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

பிரவுனும் பிராட்ஷாவும் அற்புதமாக விளையாடினர். ஆட வேண்டிய பந்துகளை ஆடி விட, நிதானமாக சிங்கிள்களை எடுத்து மெதுவாக பார்ட்னர்ஷிப்பைப் பில்ட் செய்தனர். மைக்கேல் வான் ஏற்கெனவே ஒரு அகராதி, அதிநம்பிக்கை வாதி, அவர் ஹார்மிசன் வந்து வீசினால் அவ்வளவுதான் முடிந்தது கதை என்று நினைத்து கொஞ்சம் அலட்சியமாகவே இருந்தார். ஹார்மிசன் வந்தார் வந்து பவுன்சர் மாற்றி யார்க்கர் மாற்றி வீசியபடியே இருந்தார், ஆனால் கார்ட்னி பிரவுன், பிராட்ஷா உறுதியை உடைக்க முடியவில்லை. முதல் ஸ்பெல்லில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்த பிளிண்டாஃப் பந்துகளும் ஒன்றுமே ஆகவில்லை, அல்லது பிரவுனும் பிராட்ஷாவும் திறம்பட ஆடினர்.

அப்போதைய இங்கிலாந்து பந்து வீச்சில் பலவீனமானவர் என்றால் டேரன் காஃப் தான். ஏற்கெனவே அவர் 2 ஓவர்கள் வீசி 15 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இதுவே இவரது இறுதி ஒருநாள் போட்டியாகவும் அமைந்தது. 10 ஓவர்கள் முடிவில் 58 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். மைக்கேல் வான் தலைகீழாக நின்று தண்ணி குடித்துப் பார்த்தார். ஆனால் கார்ட்னி பிரவுனையும் பிராட்ஷாவையும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பிரவுன் 35 நாட் அவுட், பிராட் ஷா 34 நாட் அவுட், இருவரும் சேர்ந்து 71 ரன்களைச் சேர்ந்து 48.5 ஓவர்களில் 218/8 என்ற இலக்கை எட்டி வெற்றி பெறச் செய்ய மே.இ.தீவுகள் தலைவர் பிரையன் லாரா உட்பட அனைத்து வீரர்களும் பிரவுனையும் பிராட்ஷாவையும் மொய்த்தனர். மே.இ.தீவுகள் 1979-ற்குப் பிறகு ஒரு ஐசிசி கோப்பையை லாரா தலைமையில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x