Published : 25 Sep 2024 07:49 AM
Last Updated : 25 Sep 2024 07:49 AM
சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர்அணியும், மகளிர் அணியும் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தன. இதில் ஆடவர் அணியில் இடம் பெற்றிருந்த ஆர்.பிரக்ஞானந்தா, மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த அவரது சகோதரி ஆர்.வைஷாலி மற்றும் இந்திய அணியின் கேப்டன் நாத் ஆகியோர் ஹங்கேரியில் இருந்து ஜெர்மனிவழியாக விமானம் மூலம் செவ்வாய் கிழமை அதிகாலை 12.20 மணி அளவில் சென்னை திரும்பி வந்தனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வைஷாலி கூறும்போது, “கடந்த முறை சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில், வெண்கலப் பதக்கம் வென்று இருந்தோம், அப்போது தங்கப் பதக்கம் வெல்ல முடியாதது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது தங்கப் பதக்கம் வென்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இரு போட்டிகளை வென்று ஆக வேண்டிய நேரத்தில், இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, பதக்கத்தை வென்று உள்ளோம்” என்றார்.
இவர்கள் இருவரையும் தொடர்ந்து இந்திய ஆடவர் அணியில் பிரதான பங்கு வகித்த குகேஷ் காலை 8.15 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தார். அவருக்கும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. குகேஷ் கூறும்போது, “நடப்பு உலக சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரென், என்னுடன் விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் விளையாடவில்லை. என்னை முதல் போர்டில் விளையாட வைத்து கேப்டன் நாத் வியூகம் வகுத்தார்.
அதனால் தான் தொடர்ந்து நானும், அர்ஜுன் எரிகைசியும் வெற்றி பெற முடிந்தது. சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில், கடைசி சுற்று போட்டிகளில் கோட்டைவிட்டோம். அதை உணர்ந்து, இம்முறை அமெரிக்காவுடன் வெற்றியை நோக்கி விளையாடினோம். அதனால் தான் அமெரிக்காவை வீழ்த்த முடிந்தது. இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தது தான் இந்த தங்கப் பதக்கம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT