Published : 24 Sep 2024 08:09 AM
Last Updated : 24 Sep 2024 08:09 AM

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்றதன் மூலம் எங்களது கனவு நனவாகி உள்ளது: மனம் திறக்கும் குகேஷ்

குகேஷ்

புதுடெல்லி: ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்டாலா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய ஆடவர் அணியும், ஹரிகா துரேணாவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணியும் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் செஸ் விளையாட்டின் வலிமையான மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்திய ஆடவர் அணி 11 சுற்றுகளில் 10 வெற்றிகளை குவித்தது. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை மட்டும் இந்திய அணி டிராவில் முடித்திருந்தது. இதனால் 22- க்கு 21 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய ஆடவர் அணியின் வெற்றியில் குகேஷ். அர்ஜுன் எரிகைசி ஆகியோரது செயல்திறன் முக்கிய பங்கு வகித்தது.

டாப் போர்டில் விளையாடிய குகேஷ் 10 சுற்றுகளில் விளையாடி 8 வெற்றிகளை குவித்த நிலையில் 2 ஆட்டத்தை டிரா செய்திருந்தார். இதன் மூலம் அவர் 9 புள்ளிகளை குவித்திருந்தார். குகேஷ் கூறும்போது, “நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். செஸ் ஒலிம்பியாட் தொடர் தனிப்பட்ட முறையில் எனக்கும் அணிக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. எங்களது கனவு நனவாகி உள்ளது. நாங்கள் கடைசி சுற்றில் தோற்றாலும், டை பிரேக்கில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். எனினும் முதலில் வெற்றி பெற விரும்பினோம். இதனால் அனைவரும் மிகவும் நிதானமாக இருந்தோம்.

நானும், அர்ஜுன் எரிகைசியும் வெற்றியை வசப்படுத்தியதில் மகிழ்ச்சி. இலக்கை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் தனிப்பட்ட செயல்திறனைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. இந்த முறை அணி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது” என்றார்.

அர்ஜுன் எரிகைசி 11 ஆட்டங்களிலும் விளையாடி 10 புள்ளிகளை அள்ளி அணிக்கு பலம் சேர்த்தார். தனது உயர்மட்ட செயல்திறனால் அர்ஜுன் எரிகைசி உலக தரவரிசை பட்டியலில் 2.797 புள்ளிகளை குவித்து 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். 2800 புள்ளிகளை எட்டுவதற்கு அவருக்கு இன்னும் 3 புள்ளிகளே தேவையாக உள்ளன. இந்த வகையில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சள் 2830 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 2802 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

அர்ஜுன் எரிகைசி கூறும்போது, “தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பது சிறப்பான உணர்வாக உள்ளது. ஆனால் இதே போன்ற வலிமையுடன் சுமார் 10 முதல் 15 வீரர்கள் உள்ளனர், எனவே நான் 3-வது அல்லது 4-வது இடத்தில் இருப்பதைப் பற்றி அதிகம் கவலைப்பட விரும்பவில்லை” என்றார்.

இந்திய அணியில் அதிக ரேட்டிங்குடன் அர்ஜுன் எரிகைசி இருந்த போதிலும், செஸ் ஒலிம்பியாட்டில் 3-வது போர்டில்தான் விளையாடினார். இதுகுறித்து அவர் கூறும்போது, “குகேஷ் முதல் போர்டில் சிறப்பாக செயல்படுவார் என நாங்கள் கருதினோம். இதனாலேயே நான் 3-வது போர்டில் விளையாடினேன். இந்த திட்டங்கள் நன்கு வேலை செய்தன. இதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இது நாங்கள் ஏற்கெனவே அமைத்த திட்டம்தான்” என்றார்.

குகேஷ் மற்றும் எரிகைசி ஆகியோர் முறையே ஒன்று மற்றும் 3-வது போர்டுகளில் தங்கள் சிறந்த செயல்திறனுக்காக தங்கப் பதக்கம் வென்றனர். இந்த வகையில் பதக்கத்தை தவறவிட்டவர் விதித் குஜ்ராத்தி ஆவார். அவர் தனது 10 ஆட்டங்களில் 7.5 புள்ளிகளைப் பெற்றார். இதனால் 4-வது போர்டில் விளையாடிய அவரால் 4-வது இடத்தை பிடிக்க முடிந்தது. பிரக்ஞானந்தாவின் செயல்திறனும் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தபடி அமையாமல் போனது. எனினும், அவர் 9-வது சுற்றில் தனது சிறப்பான செயல்திறனால் அணிக்கு தேவையான ஸ்திரத்தன்மையை அளித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x