Published : 21 Sep 2024 10:52 PM
Last Updated : 21 Sep 2024 10:52 PM
சென்னை: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார் ரிஷப் பந்த். சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் தான் தோனியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
கடந்த 2022 டிசம்பரில் கார் விபத்தில் சிக்கிய பிறகு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பந்த் விளையாடும் டெஸ்ட் போட்டியாக இது அமைந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 124 பந்துகளில் அவர் சதம் பதிவு செய்தார். 12 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் அவரது ஆட்டத்தில் அடங்கும்.
முன்னதாக, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை அவர் வழிநடத்தி இருந்தார். விபத்துக்கு பிறகு அவர் விளையாடிய முதல் தொழில்முறை தொடராக அது அமைந்தது. தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியிலும் முக்கிய வீரராக விளங்கினார்.
போட்டியை பொறுத்தவரையில் இரண்டாவது இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேசம்.
சேட்டையன் பந்த: இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் உடன் இணைந்து 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதில் அவர் பேட் செய்த போது வங்கதேச அணியின் ஃபீல்ட் செட்டிங் குறித்து பரிந்துரை மேற்கொண்டார். அது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அதையடுத்து வங்கதேச அணியும் அந்த மாற்றத்தை மேற்கொண்டது.
Always in the captain’s ear, even when it’s the opposition’s!
— JioCinema (@JioCinema) September 21, 2024
Never change, Rishabh Pant! #INDvBAN #IDFCFirstBankTestSeries #JioCinemaSports pic.twitter.com/PgEr1DyhmE
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT