Published : 17 Sep 2024 07:51 AM
Last Updated : 17 Sep 2024 07:51 AM
புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி தனது 5-வது சுற்றில், அஜர்பைஜானுடன் மோதியது.
முதல் ஆட்டத்தில் இந்தியாவின் டி.குகேஷ், அஜர்பைஜானின் அய்டின் சுலைமான்லியுடன் மோதினார். இதில் குகேஷ் 38-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, அஜர்பைஜானின் நிஜாத் அபசோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 34-வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது.
3-வது ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, அஜர்பைஜானின் ரவூப் மமேடோவுடன் மோதினார். இதில் அர்ஜுன் எரிகைசி 44-வது காய் நகர்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினார். கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் விதித் குஜராத்தி, அஜர்பைஜானின் சக்ரியார் மமேட்யாரோவுடன் மோதிய ஆட்டம் 83-வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது. 5 சுற்றுகளின் முடிவில் இந்திய ஆடவர் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.
வியட்நாம், சீனா, ஹங்கேரி ஆகிய அணிகளும் 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. இன்னும் 6 சுற்றுகள் உள்ளநிலையில் மேக்னஸ் கார்ல்சனை உள்ளடக்கிய நார்வே, ஈரான் அணிகள் தலா 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.
மகளிர் பிரிவில் இந்திய அணி, கஜகஸ்தானுடன் மோதியது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லி, கஜகஸ்தானின் பிபிசாரா அசவுபயேவாவுடன் மோதினார். இதில் 51-வது காய் நகர்த்தலின் போது ஹரிகா துரோணவல்லி தோல்வி அடைந்தார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் ஆர்.வைஷாலி, கஜகஸ்தானின் மெருர்ட் கமாலிடெனோவாவை வென்றார்.
இந்தியாவின் திவ்யா தேஷ்முக், கஜகஸ்தானின் செனியா மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 4-வது ஆட்டத்தில் இந்தியாவின் வந்திகா அகர்வால், கஜகஸ்தானின் ஆலுவா நுர்மனை வீழ்த்தினார். முடிவில் இந்திய மகளிர் அணி 2.5-1.5 என்ற கணக்கில் கஜகஸ்தானை வென்றது. 5 சுற்றுகளின் முடிவில் இந்திய மகளிர் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT