Published : 13 Sep 2024 01:27 PM
Last Updated : 13 Sep 2024 01:27 PM

“இந்தியா உடனான டெஸ்ட் தொடரில் டிராவிஸ் ஹெட் தான் ஆஸி.யின் ஓப்பனர்” - கவாஜா

டிராவிஸ் ஹெட் | உள்படம்: கவாஜா

சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் டிராவிஸ் ஹெட் தன்னுடன் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் மாற்று வீரரை தொடக்க ஆட்டக்காரராக களம் காண செய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் கவாஜா இதனை தெரிவித்துள்ளார்.

“ஆட்டத்தின் தொடக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எங்கள் தலைமுறையின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித். பேட்டிங் வரிசையில் நான்காவது பேட்ஸ்மேனாக விளையாட மிகவும் பொருத்தமானவர்.

என்னை பொறுத்தவரையில் யார் எங்கு பேட் செய்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. அணிக்கு எது சிறந்தது என்பது தான் முக்கியம். பேட்ஸ்மேன்கள் எந்த வரிசையில் களம் கண்டால் ரன் குவிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். வார்னர் தொடக்க ஆட்டக்காரராகவும், ஸ்மித் நான்காவது பேட்ஸ்மேனாகவும் ஆடிய போது அதிக ரன்களை நாங்கள் குவித்துள்ளோம்.

ஸ்மித், இன்னிங்ஸை ஓப்பன் செய்த போதும் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், வழக்கமாக நாங்கள் எடுக்கும் ரன்களை எடுக்க தவறினோம். அதே நேரத்தில் அவர் ஆட்டத்தில் செட் ஆகிவிட்டால் ரன் குவிப்பை எதிராணியால் தடுக்க முடியாது. எதிர்வரும் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரராக பேட் செய்ய வேண்டும். அவர் அந்த இடத்தில் திறம்பட செயல்பட்டு வருகிறார். மூன்றாவது இடத்தில் லபுஷேன், நான்காவது இடத்தில் ஸ்மித் விளையாட வேண்டும். எது எப்படி இருந்தாலும் தேர்வாளர்கள் தான் அது குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள்” என கவாஜா தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றதை அடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கு போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ஸ்மித் பேட் செய்துள்ளார். அதில் அவரது பேட்டிங் சராசரி 28.50 என உள்ளது. அவரது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 56.97 என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x