Published : 11 Sep 2024 10:33 AM
Last Updated : 11 Sep 2024 10:33 AM

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.75 லட்சம் பரிசு

புதுடெல்லி: பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.75 லட்சம் பரிசுத் தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார். மேலும் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும் வழங்கப்பட்டது.

பாரிஸ் நகரில் கடந்த 8-ம் தேதி முடிவடைந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை வென்று சாதனை படைத்ததுடன் பதக்கப் பட்டியலில் 18-வதுஇடத்தைப் பிடித்தது. இந்நிலையில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பெரும்பாலானோர் நேற்று தாயகம் திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர் பிரமாண்டமான அளவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசும்போது, “பாராலிம்பிக்ஸ் மற்றும் பாரா ஸ்போர்ட்ஸில் நாடு வளர்ந்துவருகிறது.

2016-ல் 4 பதக்கங்களை வென்ற இந்தியா, டோக்கியோவில் 19 பதக்கங்களையும், பாரிஸில் 29 பதக்கங்களையும் வென்று 18-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2028-ம்ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா இன்னும் அதிகமான பதக்கங்களை வெல்லும். அதற்கான அனைத்து வசதிகளும் வீரர், வீராங்கனைகளுக்கு செய்து கொடுக்கப்படும்” என்றார்.

நிகழ்ச்சியில், பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.75 லட்சம் பரிசுத் தொகையையும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சத்தையும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x