Published : 11 Sep 2024 08:17 AM
Last Updated : 11 Sep 2024 08:17 AM
சென்னை: புரோ கபடி 11-வது சீசன் போட்டி வரும் அக்டோபர் 18-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. இம்முறை புரோ கபடி தொடர்கேரவன் மாடலில் நடத்தப்படுகிறது. இதனால் போட்டிகள் ஹைதராபாத், நொய்டா, புனே ஆகிய 3 நகரங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெற உள்ளன.
12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 19-ம் தேதி தெலுகு டைட்ன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8மணிக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த சீசனுக்கான கேப்டனை அறிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கடந்த சீசனில் அணியை வழிநடத்திய சாஹர்ரதியே இம்முறையும் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் துணை கேப்டன்களாக சாஹில் குலியா, சச்சின் தன்வார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் தலைவாஸ் அணியின் களவியூக பயிற்சியாளர் சேரலாதன் தர்மராஜ் கூறும்போது, “இந்த சீசனில் எங்கள் அணியில் தமிழக வீரராக அபிஷேக் இடம் பெற்றுள்ளார்.
மேலும் 2 தமிழக வீரர்களை சேர்ப்பதற்கு போட்டி அமைப்பாளர்களிடம் அனுமதி கோரியுள்ளோம். இதுவரை தமிழ் தலைவாஸ் அணி கோப்பையை வென்றது இல்லை. இம்முறை கோப்பையை வெல்வதையே இலக்காக கொண்டுள்ளோம்.
அதை நோக்கி அணியை வலுவாக கட்டமைத்துள்ளோம். கடந்த சீசனில் இருந்த பலவீனங்களை சரிசெய்துள்ளோம். வலது, இடது பக்க ரைடர்களை பலப்படுத்தியுள்ளோம். இதற்காகவே வலது பக்க ரைடரான சச்சின் தன்வாரை கொண்டுவந்துள்ளோம். கவர் பகுதியிலும் கடந்த ஆண்டு பலவீனத்துடன் இருந்தோம். இதையும் சரி செய்துள்ளோம்” என்றார்.
சமநிலையில் அணி: தலைமை பயிற்சியாளர் உதயகுமார் கூறும்போது, “எல்லா அணியிலும் சிறிய குறைகள் இருக்கும். எனினும் பலமான பகுதியை கொண்டு அரை இறுதி வரை செல்ல முடியும். ஆனால் இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை வெல்ல வேண்டுமானால் அணி சமநிலை பொருந்தியதாக இருக்க வேண்டும். அந்த வகையிலேயே இம்முறை நாங்கள் அணியை கட்டமைத்துள்ளோம். அனைத்து பகுதிக்கும் தேவையான சரியான வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். நிச்சயம் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. சச்சின் தன்வார் மிகச்சிறந்த ரைடர். இந்த சீசனில் அவர், மட்டும் 200 புள்ளிகளுக்கு மேல் குவிப்பார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT