Published : 04 Sep 2024 06:13 AM
Last Updated : 04 Sep 2024 06:13 AM
காஞ்சிபுரம்: பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள காஞ்சிபுரம் மாணவி துளசிமதி, அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி(24). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். கை ஊனமுற்ற இவர் பேட்மிண்டன் போட்டியில் ஆர்வம் கொண்டவர். இவரதுதந்தை முருகேசன் விளையாட்டுக்கு பயிற்சி அளிப்பவர்.
தனதுமகளுக்கு பேட்மிண்டன் போட்டிகளில் ஆர்வம் இருப்பதை அறிந்து விளையாட்டில் பயிற்சி அளித்தார். பள்ளி படிப்பு முடியும் வரை அவரே பயிற்சி அளித்தார். பின்னர் சிறப்பு பயிற்சி தேவைப்படுவதால் ஹைதராபாத் சென்று துளசிமதி முறையான பயிற்சி பெற்றார். அங்கு தமிழ்நாட்டை சேர்ந்த முகமது இர்பான் என்பவர் பயிற்சி அளித்துள்ளார்.
துளசிமதி ஏற்கெனவே பல்வேறு ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் காங்சூ பகுதியில் நடந்த ஆசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி,வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றார்.
இதேபோல் இரட்டையர் விளையாட்டு போட்டி, தனிப்பட்ட விளையாட்டு போட்டி என இறகுப்பந்துப் போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றார். இவர் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இது குறித்து துளசிமதியின் தந்தை முருகேசன் கூறும்போது, “துளசிமதி சிறுவயதில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். அவர் மாற்றுத் திறனாளியாக இருந்தும் அவருக்கு பயிற்சி அளித்தேன். பலர் இது வேண்டாத வேலை என்றே எங்களிடம் தெரிவித்தனர்.
ஆனால் இதையெல்லாம் மீறி அவருக்கு பயிற்சிஅளித்தேன். பல்வேறு இடையூறுகளை தாண்டியே அவரை இந்த நிலைக்கு கொண்டு சென்றோம். அவரை இந்த இடத்துக்கு வர விடாமல் தடுக்க பல்வேறு இடையூறுகளை செய்தனர். நாங்கள் சாதாரண கூரை வீட்டில்தான் வசித்தோம். இந்த நிலைக்கு வர அவர் மிகவும் சிரமப்பட்டார்” என்றார்.
இது குறித்து துளசிமதி கூறும்போது, “இந்தப் போட்டியில் சீனாவின் யாங்கை வீழ்த்தி தங்கம் வெல்வது இலக்காக இருந்தது. இந்த முறை அது முடியாவிட்டாலும் அந்த பாராலிம்பிக்கில் நிச்சயம்தங்கம் வெல்வேன். ஆசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்ப் பதே என் லட்சியம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT