Published : 14 Aug 2014 07:08 PM
Last Updated : 14 Aug 2014 07:08 PM

இந்திய பேட்ஸ்மென்கள் எனது பந்தை சுலபமாக அடிக்கலாம் என்று மனக்கோட்டை கட்டினர்: மொயீன் அலி

இந்தியாவுக்கு எதிராக நடப்பு டெஸ்ட் தொடரில் கலக்கி வரும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி, இந்திய பேட்ஸ்மென்கள் தனது பந்தை எளிதில் அடித்து விடலாம் என்று நினைத்ததாகக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக மொயீன் அலி இதுவரை 19 விக்கெட்டுகளை 22.94 என்ற சராசரி விகிதத்தில் கைப்பற்றியுள்ளார்.

"இந்திய பேட்ஸ்மென்கள் என்னை எளிதான இலக்காக எண்ணினர். எனது பந்து வீச்சில் சுலப ரன்களை எடுத்து விடலாம் என்று நினைத்தனர். அவர்களது இந்த எண்ணம் எனக்கு உதவிகரமாக அமைந்தது.

இப்போது அவர்கள் என்னை அடித்து ஆடினால் எனக்கு இன்னும் விக்கெட்டுகளை எடுக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்திய வீரர்கள் ஸ்பின் பந்து வீச்சை சிறப்பாக ஆடக்கூடியவர்கள், எனக்கு இந்த விக்கெட்டுகள் எப்படிக் கிடைத்தன என்று தெரியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறேன், என்னாலும் பேட்ஸ்மென்களை அவுட் ஆக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

இப்போதைக்கு தூஸ்ரா போன்ற பரிசோதனை முயற்சியில் இறங்கப்போவதில்லை, இப்போதைக்கு ஸ்டம்ப்பைக் குறிவைக்கும் பந்து வீச்சே எனது குறிக்கோள்.

நான் அதிநம்பிக்கையில் இல்லை, ஆனால் ஒரு நல்ல டெஸ்ட் ஸ்பின்னராக விளங்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது” என்ற மொயீன் அலிக்கு தற்போதைய ஐசிசி நடுவரும் முன்னாள் இலங்கை ஸ்பின்னருமான குமார் தர்மசேனா சில அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

வெறுமனே ஃபிளாட்டாக ரன் கட்டுப்படுத்தும் விதமாக வீசாமல், நேராகவும் வேகமாகவும் வீச முடிவதற்கு தர்மசேனாவின் ஆலோசனை உதவியது என்கிறார் மொயீன் அலி.

இந்திய ஸ்பின்னர்கள் மிகவும் ஃபிளாட்டாக வீசுகின்றனர். இத்தகைய பிட்ச்களில் ஃபிளைட்டை அவ்வப்போது வீசி, மற்ற நேரங்களில் வேகமாகவும் நேராகவும் வீச வேண்டும். அது அஸ்வினுக்கும் கைகூடாமலே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x