Published : 26 Aug 2024 05:58 PM
Last Updated : 26 Aug 2024 05:58 PM

கோபத்தில் தன் ஹெல்மெட்டை சிக்சருக்கு ‘அடித்த’ கார்லோஸ் பிராத்வெய்ட்!

கோபத்தில் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். ஆனால், மே.இ.தீவுகளின் ஆல்ரவுண்டர் கார்லோஸ் பிராத்வெய்ட் நடுவர் தனக்குத் தவறாக அவுட் கொடுத்ததற்காக தன் ஹெல்மெட்டை மட்டையால் விளாசி பவுண்டரிக்கு வெளியே அடித்தது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

மாக்ஸ் 60 கரீபியன் 2024 தொடரின் குவாலிஃபையர் 1-ல் இந்தச் சம்பவம் நடந்தது. பிராத்வெய்ட்டின் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும் கிராண்ட் கேய்மென் ஜாகுவார்ஸ் அணிக்கும் இடையே ஜாஜ்டவுனில் நடைபெற்ற போட்டியில் ஜொஷுவா லிட்டில் வீசிய ஷார்ட் பிட்ச் பந்து பிராத்வெய்ட்டின் வலது தோள்பட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் செல்ல அவர் அதைப் பிடித்து அப்பீல் செய்ய நடுவர் அவுட் என்று நினைத்துக் விரலை உயர்த்தினார். மட்டைக்கும் பந்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதில் கடும் ஆத்திரமடைந்த பிராத்வெய்ட் பெவிலியனுக்கு திரும்பும் வழியில் தன் மட்டையால் ஹெல்மெட்டை ஒரே அடி அடித்து தூக்கி பவுண்டரிக்கு வெளியே அடித்தார். பிறகு தன் இடத்தை நெருங்கிய போது மட்டையையும் வீசி எறிந்தார். இந்த வீடியோதான் இப்போது வைரலாகியுள்ளது.

பிற்பாடு பிராத்வெய்ட் அணிதான் 8 ரன்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது என்பது வேறு கதை. முன்னதாக முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி மிட்செல் ஓவனின் 10 பந்து 22 ரன்களினாலும், பிராண்டன் மெக்முல்லனின் 8 பந்து 18 ரன்களினாலும் அதிரடி தொடக்கம் கண்டது. கடைசியில் 108/8 என்று முடிந்தது. சேஸிங்கில் இங்கிலாந்தில் ரிட்டையர்டு ஆகிவிட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்துகளில் 35 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தாலும், கேப்டன் ரசா 16 பந்துகளில் 27 என்று பிரமாதமாக ஆடிய போதும் கிராண்ட் கேய்மன் அணி 8 ரன்கள் குறைவாக எடுத்து தோல்வி கண்டது. அதாவது தங்களது 10 ஓவர்களில் 96/5 என்று முடிந்தது.

இந்தக் கார்லோஸ் பிராத்வெய்ட்டை நினைவில் இருக்கிறதா? - இவர்தான் மே.இ.தீவுகள் அணியை 2016-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸுக்கு வாங்கிக் கொடுத்தவர். அதாவது ஏப்ரல் 3, 2016 இரவு கொல்கத்தாவில் நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் 155/9 என்ற இலக்கை விரட்டும் போது மே.இ.தீவுகள் 19 ஓவர்கள் முடிவில் 137/6 என்று இருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை. பிராத்வெய்ட் 10 ரன்களில் கிரீசில் இருந்தார். பென் ஸ்டோக்ஸ் கடைசி ஒவரை வீச வந்தார்.

பென் ஸ்டோக்ஸ் முதல் பந்தை ஹாஃப் வாலியாக லெக் ஸ்டம்பில் வீச எளிதாக சிக்சருக்கு விரட்டினார் பிராத்வெய்ட், அடுத்த பந்து லாங் ஆனுக்கு மேல் சிக்ஸ், அடுத்த சிக்ஸ் லாங் ஆஃபில் பல வரிசைகள் தள்ளிப் போய் விழுந்தது பந்து. அடுத்த பந்து டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ், மே.இ.தீவுகள் டேரன் சேமி தலைமையில் 2வது முறையாக டி20 சாம்பியன்களாயினர். அந்த கார்லோஸ் பிராத்வெய்ட்தான் அந்தப் போட்டிக்குப் பிறகு இப்போது மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x