Published : 19 Aug 2024 07:27 AM
Last Updated : 19 Aug 2024 07:27 AM
கயானா: மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகளில் தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் கயானாவில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது.
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 160 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 144 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. கைல் வெர்ரைன் 59, வியான் முல்டர் 34, கேசவ் மகராஜ் 0, ரபாடா 6 , டேன் பையட் 7 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 262 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை மேற்கு இந்தியத் தீவுகள் அணி விளையாடியது. கிரெய்க் பிராத்வெயிட் 25, மைக்கிள் லூயிஸ் 4, கியாசி கார்ட்டி 17, அலிக் அத்தானஸ் 15, கேவம் ஹாட்ஜ் 29, ஜேசன் ஹோல்டர் 0, ஜோஷுவா டி சில்வா 27 ரன்கள் சேர்த்தனர். ஆனால் கடைசி நேரத்தில் குடகேஷ் மோதியும், ஜோமர்வாரிகனும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர்.
ஆனால் கேசவ் மகராஜ், ரபாடா ஆகியோரின் அபார பந்துவீச்சால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதையடுத்து தொடரை 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT