Published : 04 Apr 2014 11:41 AM
Last Updated : 04 Apr 2014 11:41 AM

ஈகிள்ஸை வீழ்த்தியது தெற்கு ரயில்வே

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ரயில்வே அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஹிந்துஸ்தான் ஈகிள்ஸை தோற்கடித்தது.

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணியும், ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணியும் மோதின.

ரயில்வே அணியில் ஸ்டிரைக்கர் ரிஜூ, இளமுருகன் மற்றும் வலது மிட்பீல்டர் சிராஜுதீன் ஆகியோர் ஆரம்பம் முதலே வேகமாக ஆடினர். ஹிந்துஸ்தான் அணியில் ஸ்டிரைக்கர் அமீருதீன் அசத்தலாக ஆடியபோதும், மற்றொரு ஸ்டிரைக்கர் ஜெரிஷ் சரியாக ஆடாததால் சில கோல் வாய்ப்புகள் நழுவின.

ரிஜூ, இளமுருகன் ஆகியோருக்கு அவ்வப்போது மிட்பீல்டில் இருந்து பந்தை “பாஸ்” செய்த சிராஜுதீன், ஒரு கட்டத்தில் மிட்பீல்டில் இருந்து நேரடியாக கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைத்தார். ஆனால் கோல் கம்பத்தின் மேல்பகுதியில் பட்ட பந்து வெளியில் செல்ல, நூலிழையில் கோல் வாய்ப்பு நழுவியது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோல் விழவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் இடது எல்லையில் இருந்த ரிஜூ, கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைக்க, அதை சரியாகப் பயன்படுத்தி தலையால் முட்டி கோலடித்தார் இளமுருகன். ஹிந்துஸ்தான் வீரர் ஜெர்ரி தொடர்ந்து சொதப்பியதால் வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ஸ்டீபன் களமிறங்கினார்.

இதன்பிறகு ஸ்டீபனும், அமீருதீனும் அசத்தலாக ஆட, ஹிந்துஸ்தான் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. எனினும் சில கோல் வாய்ப்புகள் நழுவின. தொடர்ந்து அபாரமாக ஆடிய ஸ்டீபன், கோல் ஏரியாவுக்குள் பந்தை எடுத்துச் சென்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே தடுப்பாட்டக்காரர் பாலசுப்பிரமணியன், ஸ்டீபனை கீழே தள்ளினார்.

ஆனால் அதற்கு நடுவர் பெனால்டி கிக் வாய்ப்பு கொடுக்காததால் ஹிந்துஸ்தான் அணியினர் பெரும் ஏமாற்றமடைந்தனர். இதன்பிறகு ஹிந்துஸ்தான் தொடர்ந்து போராடினாலும், அதற்கு கடைசி வரை பலன் கிடைக்காமல் போகவே, ரயில்வே 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. ரிஜூ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மூன்று நாட்கள் போட்டியில்லை

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் எவ்வித லீக் போட்டியும் கிடையாது. திங்கள்கிழமை நடைபெறும் சீனியர் டிவிசன் லீக் போட்டியில் ரிசர்வ் வங்கி அணியும், இந்திய உணவுக் கழக அணியும் சந்திக்கின்றன. முதல் டிவிசன் லீக்கில் ஸ்டேட் வங்கி அணியும், வருமான வரித்துறை அணியும் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x