Published : 16 Aug 2024 07:36 AM
Last Updated : 16 Aug 2024 07:36 AM
சிங்கப்பூர்: இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ், நடப்பு உலக சாம்பியனான 31 வயதான சீனாவின் டிங் லிரென் ஆகியோர் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது. இந்த போட்டி வரும் நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறும் என சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது.
எனினும் சிங்கப்பூரில் எந்த இடத்தில் போட்டி நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே போட்டியை நடத்துவதற்காக சிங்கப்பூரில் உள்ள 4 நகரங்களை ஃபிடே குழுவினர் ஆய்வு செய்திருந்தனர். இந்நிலையில் டிங் லிரென் - குகேஷ் மோதும் ஆட்டம் சிங்கப்பூரில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் நடைபெறும் என சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 138 ஆண்டுகால வரலாற்றில் தென்கிழக்கு ஆசியாவில் இப்போட்டி நடைபெறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 1978-ல் இந்தத் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகுயோ நகரில் நடத்தப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT