Published : 10 Aug 2024 06:43 PM
Last Updated : 10 Aug 2024 06:43 PM

வெண்கலம் வெல்லும் முன்பு அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்தது எப்படி?

பதக்கத்துடன் இந்திய வீரர் அமன் ஷெராவத்

வினேஷ் போகத் 100 கிராம் உடல் எடை அதிகம் காரணமாக தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பு பெற்றவர், ஒரு பதக்கமும் இல்லாமல் தகுதி இழப்பு செய்யப்பட்ட விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், 57 கிலோ உடல் எடைப் பிரிவில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் கூடுதலாக இருந்த 4.6 கிலோ எடையை 10 மணி நேரத்தில் குறைத்துக் காட்டி அசத்தியுள்ளார்.

ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டிக்கு முந்தைய நாள் அமன் ஷெராவத்தின் எடையை சரிபார்த்த போது 61.5 கிலோ எடை இருந்துள்ளார். அதாவது நிர்ணயிக்கப்பட்ட 57 கிலோ எடைப்பிரிவிற்குத் தகுதி பெற 4.5 கிலோ எடையை அவர் குறைத்தாக வேண்டிய நிலை. இன்னொரு வீரர் இப்படி உடல் எடை கூடுதல் காரணமாக பதக்க வாய்ப்பை இழந்து வெறுங்கையுடன் திரும்பினால் கடும் விமர்சனங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதால் அமன் ஷெராவத் பயிற்சியாளர்களின் உதவியுடன் பலதரப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டு மிகக் கடினமாக உழைத்து கூடுதல் எடையைக் குறைத்துள்ளார்.

எடையைக் குறைத்தது எப்படி? - உடல் எடையில் சமச்சீரற்ற தன்மையை சரி செய்யும் Muscle Activation Techniques அதாவது MAT எனப்படும் பயிற்சி உத்தியை பயிற்சியாளர்கள் மேற்கொண்டனர். இதன்படி இரண்டு மூத்த பயிற்சியாளர்கள் ஸ்டாண்டிங் ரெஸ்லிங், அதாவது மல்யுத்தப் போட்டியின் தொடக்கத்தில் வீரர்கள் நிற்கும் முறைப்படி அமன் ஷெராவத்தை ஒன்றரை மணி நேர அதே நிலையில் நிற்க வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் வெந்நீர்க் குளியல் எடுத்துக் கொண்டார் அமன். 12:30 மணிக்கு உடற்பயிற்சி சாலைக்குச் சென்றனர். இதில் அமன் ஷெராவது தொடர்ந்து, இடைநிறுத்தாமல் ஒரு மணி நேரம் ட்ரெட் மில்லில் ஓட்டப் பயிற்சி செய்தார். வியர்வை உடல் எடையைக் குறைக்கும். அதன் பிறகு அரை மணி நேரம் அவருக்கு இடைவேளை அளிக்கப்பட்டது.

பிறகு உலர் வெப்பத்தினால் ஆன அறை ஒன்றில் அவர் ஐந்தைந்து நிமிடங்களாக சானா குளியல் எடுத்துக்கொண்டார், அதாவது ஐந்து அமர்வுகளுக்கு இந்த சானாக் குளியல் தொடர்ந்தது. கடைசி பயிற்சி அமர்வு முடிந்தவுடன் கூட அமன் ஷெராத்தின் உடல் எடை 900 கிராம் அதிகமிருந்தது. பிறகு அமன் ஷெராவத் மசாஜ் செய்து கொண்டார். பிறகு பயிற்றுநர் ஒருவரின் உதவியுடன் மிதமான ஜாக்கிங் பயிற்சியை மேற்கொண்டார். இந்த பயிற்சி முடிந்தவுடன் 15 நிமிடம் ஓட்டப்பயிற்சியையும் செய்தார் அமன். காலை 4:30 மணியளவில் அமன் ஷெராவத்தின் உடல் எடை 56.9 கிலோவாகக் குறைந்திருந்தது, அதாவது 57 கிலோவுக்கு 100 கிராம் எடை குறைவாகவே அவர் இருந்தார்.

பயிற்சியாளர்களும் அமன் ஷெராவத்தும் நிம்மதியடைந்தனர். இந்த பயிற்சி அமர்வுகளுக்கு இடையிடையே வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் ஆகியவை கலந்து அருந்தினார். அவ்வப்போது கொஞ்சம் காபியும் குடித்தார். இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு அமன் தூங்கவில்லை. இது குறித்து பயிற்சியாளர் தாஹியா கூறும்போது, “ஒவ்வொரு மணி நேரமும் அவரது எடையை பரிசோதித்தோம்.

நாங்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை. பகலிலும் தூங்கவில்லை. உடல் எடைக்குறைப்பு என்பது எங்களுக்கு வழக்கமான ஒரு பணிதான். ஆனால் வினேஷ் போகத்திற்கு நிகழ்ந்தது போல் ஆகிவிடக்கூடாது என்பதால் நாங்கள் பதற்றமாகவே இருந்தோம். இன்னொரு பதக்கத்தை நழுவ விடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டினோம்” என்றார். அனைத்துக் கடின உழைப்பும் கடைசியில் பலனளித்தது என்பதுதான் முக்கியம். இந்தியாவின் இளைய பதக்கம் வென்ற வீரர் ஆனார் அமன் ஷெராவத்.

யார் இந்த அமன்? - அப்போது அந்தச் சிறுவனுக்கு 10 வயது இருக்கும். தன் தாயை பறிகொடுத்த சோகத்தில் இருந்த சிறுவனுக்கு தந்தை தான் ஆறுதல். அந்தி மாலை வேளையில் தந்தையின் விரலைப் பிடித்துக்கொண்டு நடந்து சென்ற சிறுவனிடம் ‘இதோ வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்ற தந்தை திரும்பி வரவே இல்லை. அடுத்தடுத்த இழப்புகளைச் சந்தித்த இந்தச் சிறுவன் 10 ஆண்டுகள் கழித்து இன்று உலக அரங்கில் ஒலிம்பிக்கில் போட்டியில் இந்தியாவின் பதக்க நாயகனாகத் திகழ்கிறார். அவர் தான் அமன் ஷெராவத்.

“என் பெற்றோரை இழந்த பின்பு என்னுடைய உலகம் முற்றிலுமாக முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன்” என அமன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். பெற்றோரை இழந்ததும், அமன் மற்றும் அவரது சகோதரி பூஜா இருவரும் மாமா வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்த அவரது தாத்தா மாங்கேரம் ஷெராவத் தான் பெற்றோரை இழந்த துக்கத்திலிருந்து அமனை மீட்க உதவியிருக்கிறார். “அந்த சமயத்தில் நான் மல்யுத்ததை கைவிட நினைத்தபோது, என்னுடைய தாத்தா தான் எனக்கு ஊக்கமளித்து தொடர வழிவகை செய்தார்” என்றார் அமன்.

மல்யுத்தத்தை தொடரும் வகையில் பல்வேறு தடைகளைத் தாண்டி நண்பர்களின் உதவியால் துரோணாச்சாரியா விருது பெற்ற பயிற்சியாளர் லலித் குமாரிடம் சேர்ந்தார். டெல்லியின் சத்ரசல் ஸ்டேடியத்தில் நுழையும்போது அவருக்கு 10 வயது தான். அதுதான் அமனுக்கு எல்லாமுமாக இருந்த இடம். குறிப்பாக அந்தக் காலக்கட்டத்தில் அவரின் அறைத் தோழராக இருந்த சாகர் அவருக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். மல்யுத்த வீரரான சாகர், இந்திய விமானப் படையில் பணியாற்றுகிறார். நண்பர், சகோதரர், ஏன் பெற்றோர் இடத்திலிருந்து அவருக்கு உதவி செய்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரவி தஹியாவை இன்ஸ்பிரேஷனாக கொண்டிருந்தார்.

அமன் தனது 18-ஆவது வயதில் அதாவது 2021-ம் ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தினார். அதன்பிறகு அமனின் வாழ்க்கை ஏற்றம் கண்டது. 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 57 கிலோ எடைப் பிரிவில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2022-ல் ஸ்பெயினில் நடைபெற்ற U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். அதைத் தொடர்ந்து கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற 2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் சீனாவின் ஜூவான்ஹாவோ-வை 10-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் பதக்கம் வென்றார்

“நான் களத்தில் இருக்கும்போது வெற்றி பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். நான் யாரை எதிர்க்கிறேன் என்பதை பொருட்படுத்துவதில்லை. மாறாக முழு உழைப்பையும் போட்டியில் செலுத்துகிறேன். மல்யுத்தம் எனக்கு ஒரு விளையாட்டு மட்டுமல்ல; இது எனது குடும்பத்தின் பாரம்பரியத்தை மதிக்கும் ஒரு வழி” என அமன் கூறியிருந்தார். தொடக்கத்தில் மணலில் வெற்றுத் தரையில் பயிற்சி மேற்கொண்டவர், இன்று ஒலிம்பிக் வரை முன்னேறி பதக்கம் வென்று சாதித்துள்ளார். இந்தியாவிலிருந்து பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் பிரிவில் பங்கேற்ற ஒரே ஒரு வீரரும் அமன் மட்டுமே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x