Published : 10 Aug 2024 11:55 AM
Last Updated : 10 Aug 2024 11:55 AM
பாரிஸ்: 33 தங்கம், 39 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கங்களை வென்று அமெரிக்கா, பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனாவை முந்தி முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்காவின் அதே எண்ணிக்கையான 33 தங்கப் பதக்கங்களை சீனா வென்றிருந்தாலும் மொத்தம் 82 பதக்கங்களுடன் 2-ம் இடத்திலும், 18 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 48 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3-ம் இடத்திலும் உள்ளன. ஆடவர் மல்யுத்தப் போட்டியில் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றும் இந்தியா பதக்கப் பட்டியலில் 69-வது இடத்துக்கு இறங்கியுள்ளது.
ஆடவர் 400 மீ தடை ஓட்டம்: அமெரிக்காவின் ராய் பெஞ்சமின் இந்த சீசனின் சிறந்த நேரமான 46.46 விநாடிகளில் இலக்கைக் கடந்து முதல் முறையாக தங்கம் வென்றார். நார்வேயின் கர்ஸ்டன் வார்ஹோம் 47.06 விநாடிகளுடன் வெள்ளிப் பதக்கமும் பிரேசிலின் அலிசன் டாஸ் சாண்டோஸ் 47.26 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றார்.
ஆடவர் டிரிபிள் ஜம்ப்: ஆடவர் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் ஸ்பெயினைச் சேர்ந்த ஜோர்டான் அலியாண்ட்ரோ டயஸ் ஃபோர்டம் 17.86 மீ தாண்டி தங்கம் வென்றார். இவருக்கு நெருக்கமாக வந்த போர்ச்சுகல் வீரர் பெட்ரோ பிகார்டோ 17.81 மீ தாண்டி வெள்ளியும் இத்தாலியின் ஆண்டி டயஸ் 17.64 மீ உடன் வெண்கலமும் வென்றனர்.
மகளிர் 10000 மீ ஓட்டம்: இந்தப் பிரிவில் தாதாக்களான கென்யா நாட்டின் பீட்ரிஸ் கெபெட் 30 நிமிடம் 43 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கத்தைத் தட்டிச் செல்ல, இத்தாலி வீராங்கனை நாடியா பாட்டோகிளெட்டி வெள்ளியும் நெதர்லாந்து வீராங்கனை சிஃபான் ஹசன் வெண்கலமும் வென்றனர்.
மகளிர் ஷாட் புட்: ஜெர்மனியின் யீமிஸ் ஆகுன்லியி 20 மீ தூரம் குண்டு எறிந்து தங்கம் வென்றார். நியூஸிலாந்தின் மேடிசன் லீ வெஸ்கி 19.86 தூரத்துடன் வெள்ளியும் சீனாவின் யாயுன் சொங் வெண்கலமும் வென்றனர்.
ஹெப்டத்லான் மகளிர்: பெல்ஜியம் வீராங்கனை நஃபிசடோ தியம் தங்கம் வெல்ல, இங்கிலாந்தின் காத்தரீனா ஜான்சன் வெள்ளியும், மற்றொரு பெல்ஜியம் வீராங்கனை விட்ஸ் நூர் வெண்கலமும் வென்றனர்.
மகளிர் 400 மீ ஓட்டம் ஃபைனல்: டொமினிக்கன் ரிபப்ளிக் மரிலெய்டி பாலீனோ 48.17 விநாடிகளில் இலகை எட்டி தங்கம் வென்றார். 48.53 விநாடிகளுடன் பஹ்ரைன் வீராங்கனை சல்வா ஈத் நாசர் வெள்ளியும் போலந்து வீராங்கனை நடாலியா காஷ்மாரெக் வெண்கலமும் வென்றனர்.
ஆடவர் 4X100 மீ ரிலே ஓட்டம்: 37.50 விநாடிகளில் இலக்கை அடைந்து கனடா வீரர் ஆந்த்ரே டி கிராஸ் தங்கம் வென்றார். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெள்ளியும் இங்கிலாந்துக்கு வெண்கலமும் கிடைத்துள்ளது.
மகளிர் 4X100 மீ ரிலே ஓட்டம்: அமெரிக்கா தங்கம் வென்றது, கடைசி லெக் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஷா காரி ரிச்சர்ட்சன் முதலிடம் வென்றார். இதில் இங்கிலாந்து வெள்ளியும் ஜெர்மனி வெண்கலமும் வென்றன.
போட்ஸ்வானா வீரர் லெட்சில் டிபாகோ 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றதை அடுத்து போட்ஸ்வானா அரசு அரைநாள் பொது விடுமுறை அறிவித்தது.
ஆடவர் 110 மீ ஹர்டில்ஸ்: அமெரிக்க வீரர் கிராண்ட் ஹாலோவே தங்கம் வென்றார். இவர் 3 முறை உலக சாம்பியன் ஆனவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் இவர் வெள்ளி வென்றார். பாரிசில் 12.99 விநாடிகளில் இலக்கை அடைந்து சாதனை புரிந்தார். சக அமெரிக்க வீரர் டேனியல் ராபர்ட்ஸ் இவருக்கு வெகு நெருக்கமாக ஓடி 13.09 விநாடிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும் ஜமைக்காவின் ரஷீத் பிராட்பெல் இவருக்குச் சரிசம நேரத்தில் இலக்கை அடைந்தாலும் வெண்கலப் பதக்கம்தான் கிடைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT