Published : 04 Aug 2024 05:22 PM
Last Updated : 04 Aug 2024 05:22 PM
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 9-வது நாளை எட்டியது. இன்றைய தினம் இந்திய வீரர்களுக்கு சோகமும், சந்தோஷமும் நிறைந்ததாக அமைந்தது.
லவ்லினா வெளியேற்றம்: பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், சீன வீராங்கனை லீ குயான் உடன் மோதினார். இந்தப் போட்டியில் லவ்லினா 1-4 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் இருந்து லவ்லினா வெளியேறினார். ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
லக்ஷயா சென் ஏமாற்றம்: இன்று நடந்த பாட்மிண்டன் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷயா சென், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள வரும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
ஒலிம்பிக்கில் முதன்முறையாக விளையாடி வரும் லக்ஷயா சென் தனது காலிறுதி சுற்றில் 12-ம் நிலை வீரரான சீனதைபேவின் தியன் ஷென்னை 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் தோற்கடித்திருந்தார். இதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர், படைத்திருந்தார். நடப்பு சாம்பியனான விக்டர் ஆக்சல்சென் உடனான இன்றைய ஆட்டம் லக்ஷயா சென்னுக்கு கடும் சவாலாக இருந்தது.
இன்றைய அரையிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் 20-22, 14-22 என்ற செட் கணக்கில் விக்டர் ஆக்சல்சனுக்கு எதிராக தோல்வி கண்டார். முதல் செட்டில் வெற்றியை நெருங்கிவந்த தோற்ற லக்சயா சென், இரண்டாவது செட்டில் பரிதாபமாக தோல்வி அடைந்தார்.
ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா: ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை சூட் அவுட்டில் 4-2 என வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அமித் ரோஹிதாஸ் ரெட் கார்ட் பெற்றதால் 42 நிமிடங்களுக்கு இந்திய அணி 10 வீரர்களுடனே ஆடியிருந்தது. எனினும், பல கோல்களை தடுத்து இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல முக்கியப் பங்காற்றினார் கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ்.
இங்கிலாந்தின் பல ஷாட்களை தடுத்து நிறுத்தி போட்டியை பெனால்டி ஷூட் அவுட்க்கு கொண்டு சென்றார். அதிலும் பல கோல்களை தடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் ஸ்ரீஜேஸ்.
மின்னல் வீராங்கனை: 2008, 2012, 2016, 2020 என தொடர்ந்து 4 ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா நாட்டு வீராங்கனைகளே தங்கம் வென்று வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் செயிண்ட் லூசியாவைச் சேர்ந்த ஜூலியன் ஆல்ஃபிரட். பாரிஸ் ஒலிம்பிக்கில் 10.72 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். அடுத்தபடியாக அமெரிக்க வீராங்கனைகள் ஷகாரி ரிச்சர்ட்சன் 10.87 நொடிகளிலும், மெலிஸ்ஸா ஜாஃபர்சன் 10.92 நொடிகளிலும் இலக்கை அடைந்தனர்.
காயத்தால் கதறிய கரோலினா மரின்: பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவுடன் மோதினார். இதில் கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார்.
இரண்டாவது செட்டிலும் 10 - 8 முன்னிலை பெற்றிருந்த நேரத்தில் கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து களத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுத அவர், போட்டியில் இருந்து விலகினார். இதன்மூலம் ஹி பிங்ஜியாவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT