Published : 04 Aug 2024 09:25 AM
Last Updated : 04 Aug 2024 09:25 AM
பதக்கத்தை தவறவிட்டார் மனு பாகர்: துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனு பாகர் 4-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். மனு பாகரும், ஹங்கேரியின் வெரோனிகாவும் தலா 28 புள்ளிகளை சேர்த்து 3-வது இடத்தில் இருந்தனர்.
இதனால் வெண்கலப் பதக்கம் யாருக்கு என்பதை தீர்மானிக்க ஷுட் ஆஃப் சுற்று நடத்தப்பட்டது. இதில் வெரோனிகா 3 புள்ளிகளை சேர்த்த நிலையில் மனு பாகர் சிறப்பாக செயல்படத் தவறினார். இதனால் வெரோனிகா வெண்கலப் பதக்கம் வென்றார்.
4-வது இடம் பிடித்ததன் மூலம் ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதனை படைக்க நினைத்த மனு பாகரின் எண்ணம் நிறைவேறாமல் போனது. அவர், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
கொரியாவின் ஜின் யங், பிரான்ஸின் கமிலி ஜெட்ரிஜெவ்ஸ்கி ஆகியோர் தலா 37 புள்ளிகள் சேர்த்து முதலிடத்தில் இருந்தனர். இதையடுத்து ஷுட் ஆஃப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜின் யங் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். கமிலி ஜெட்ரிஜெவ்ஸ்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
‘பதற்றமாக இருந்தேன்’ - பதக்கத்தை தவறவிட்டது குறித்து மனு பாகர் கூறும்போது,“ இறுதிப் போட்டியின் போது நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். ஒவ்வொரு ஷாட்டிலும் சிறப்பான பங்களிப்பை வழங்க முயற்சித்தேன். ஆனால், அது நினைத்தபடி நடக்கவில்லை. இருப்பினும் அடுத்த வாய்ப்பு என்பது எப்போதும் இருக்கும். ஆகவே அடுத்த முறை என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வேன்” என்றார்.
கால் இறுதியில் தீபிகா தோல்வி: மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியின் மிச்செல்லி க்ரோப்பனுடன் மோதினார். இதில் தீபிகா குமாரி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கால் இறுதி சுற்றில் தீபிகா குமாரி, கொரியாவின் சுஹ்யோன் நாமுடன் மோதினார். இதில் தீபிகா குமாரி 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். 4 செட்களின் முடிவில் போட்டி 4-4 என சமநிலையில் இருந்தது. ஆனால் கடைசி செட்டில் தீபிகா குமாரி உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினார்.
ஹாக்கி கால் இறுதியில் ‘இந்தியா - இங்கிலாந்து’ பலப்பரீட்சை: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கிஅணி லீக் சுற்றில் ‘பி’ பிரிவில் 2-வது இடம் பிடித்திருந்தது. இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் 52 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணி அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
இங்கிலாந்து அணி லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் 3-வது இடம் பிடித்திருந்தது. உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அந்த அணி இந்தியாவுக்கு கடும் சவாலாக திகழக்கூடும். இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
பஜன் கவுர் ஏமாற்றம்: மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் பஜன் கவுர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தோனேஷியாவின் தியானந்த கொய்ருனிசாவுடன் மோதினார். இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷுட் ஆஃப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தியானந்த கொய்ருனிசா சிறப்பாக செயல்பட்டு 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதி சுற்றில் கால்பதிப்பாரா லக்ஷயா சென்? - பாட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன. இதில் உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷயா சென், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள வரும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இந்த ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஒலிம்பிக்கில் முதன்முறையாக விளையாடி வரும் லக்ஷயா சென் தனது கால் இறுதி சுற்றில் 12-ம் நிலை வீரரான சீனதைபேவின் தியன் ஷென்னை 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் தோற்கடித்திருந்தார். இதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர், படைத்திருந்தார். இன்றைய ஆட்டம் லக்ஷயா சென்னுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும்.
ஏனெனில் 30 வயதான விக்டர் ஆக்சல்சென் நடப்பு சாம்பியனாக திகழ்கிறார்.
விக்டர் ஆக்சல்சென்னுடன், லக்ஷயா சென் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளார். இதில் விக்டர் ஆக்சல்சென் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார். லக்ஷயா சென் ஒரே ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளார். எனினும் இந்த சீசனில் விக்டர் ஆக்சல்சென் ஒரே ஒரு பட்டம் மட்டுமே வென்றிருந்தார். ஜூன் மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் ஓபன் போட்டியின் போது கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட விக்டர் ஆக்சல்சென் இந்தோனேசியா ஓபனில் இருந்து விலகியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT