Published : 02 Aug 2024 07:55 AM
Last Updated : 02 Aug 2024 07:55 AM
கால் இறுதியில் லக்ஷயா சென்: பாட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷயா சென், சக நாட்டைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பிரனாயுடன் மோதினார். 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக் ஷயா சென் 21-12, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஆடவர் பிரிவில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் லக் ஷயா சென்.
இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பாருபள்ளி காஷ்யப், 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் கிடாம்பிஸ்ரீகாந்த் ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தனர். கால் இறுதி சுற்றில் லக் ஷயா சென், 12-ம் நிலை வீரரான சீன தைபேவின் தியென் சென்னுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
பிரவீன் ஜாதவ் வெளியேற்றம்: வில்வித்தையில் ஆடவருக்கான ரீகர்வ் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், சீனாவின் காவ் வென்சாவுடன் மோதினார். இதில் பிரவீன் ஜாதவ் 0-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
நிகத் ஜரீன் தோல்வி: மகளிருக்கான குத்துச்சண்டை 50 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இரு முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகத் ஜரீன், ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற சீனாவின் யூ வூவை எதிர்த்து விளையாடினார். இதில் நிகத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
அஞ்சும், சிப்ட் ஏமாற்றம்: மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் தகுதி சுற்றில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் 584 புள்ளிகள் பெற்று 18-வது இடத்தையும், சிப்ட் கவுர் சம்ரா 575 புள்ளிகள் பெற்று 31-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அஞ்சும் மவுத்கில்லும், சிப்ட் கவுர் சம்ராவும் வெளியேறினர்.
சாட்விக்-ஷிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பாட்மிண்டனில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா, வூய் யிக் சோ ஜோடியுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாட்விக்-ஷிராக் ஜோடி முதல் செட்டை 21-13 என கைப்பற்றியது.
2-வது செட்டில் ஒரு கட்டத்தில் 11-10 என முன்னிலை பெற்ற மலேசிய ஜோடி அதன் பின்னர் சீராக புள்ளிகள் பெற்று 16-12 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்த மலேசிய ஜோடி 2-வது செட்டை 21-14 என தன் வசப்படுத்தியது. இதனால் வெற்றியை தீர்மானித்த 3-வது செட் ஆட்டம் பரபரப்பானது.
இதிலும் ஆரோன் சியா, வூய் யிக் சோ ஜோடி நெருக்கடி கொடுத்தது. இதனால் சாட்விக்-ஷிராக் ஜோடி 16-21 என கடைசி செட்டை பறிகொடுத்தது. முடிவில் 64 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-13, 14-21, 16-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பதக்கம் வெல்லக்கூடிய ஜோடியாக கருதப்பட்ட இவர்கள் கால் இறுதியுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
பிரியங்கா 41-வது இடம்: மகளிருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஷ்வாமி பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் 55 விநாடிகளில் கடந்து 41-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் இந்திய வீரர்களான விகாஷ் சிங் பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் 36 விநாடிகளில் கடந்து 30-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். பரம்ஜீத் சிங் 1:23:48 விநாடிகளில் இலக்கை கடந்து 37-வது இடத்தை பிடித்தார். அதேவேளையில் ஆகாஷ்தீப் சிங் 6 கிலோ மீட்டரை கடந்த நிலையில் உடல்நிலை பாதிப்பால் விலகினார்.
ஹாக்கியில் தோல்வி: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கெனவே கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் நேற்று நடப்பு சாம்பியனான பெல்ஜியத்துடன் மோதியது.இதில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி தரப்பில் 18-வது நிமிடத்தில் அபிஷேக் கோல் அடித்தார். பெல்ஜியம் அணி சார்பில் 33-வது நிமிடத்தில் திபியூ ஸ்டாக்ப்ரோக்ஸும் 44-வது நிமிடத்தில் ஜான் டோமனும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்திய அணி.
ஸ்ரீஜா அகுலா தோல்வி: மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் யிங்ஷா சன்னுடன் மோதினார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 10-12, 10-12, 8-11, 3-11 என்ற செட் கணக்கில் தோல்விஅடைந்து வெளியேறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT