Published : 02 Aug 2024 12:19 AM
Last Updated : 02 Aug 2024 12:19 AM

ஏர் பிஸ்டல் பிரிவில் டிசர்ட், கண்ணாடியுடன் ‘கூல்’ ஆக பதக்கம் வென்ற துருக்கி வீரர் | பாரிஸ் ஒலிம்பிக்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் துருக்கியைச் சேர்ந்த 51 வயது வீரர் டிசர்ட், கண்ணாடி சகிதம் அலட்சியமான உடல்மொழியுடன் கலந்து கொண்டு பதக்கம் வென்ற சம்பவம் இணையத்தை கலக்கி வருகிறது.

பொதுவாக துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் என்றாலே அதில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் ஏராளமான பாதுகாப்புக் கவசங்கள், கணகளுக்கான பிரத்யேக லென்ஸ் பொருத்தப்பட்ட கண்ணாடி, பெரிய ஹெட்போன் வடிவிலான காதுகளை பாதுகாக்கும் கருவி ஆகியவற்றுடன் கலந்து கொள்வர்.

ஆனால் நடப்பு பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் கலப்பு 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த வீரரான யூசுப் டிகெக் (Yusuf Dikeç) எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் டிசர்ட், கண்ணாடி சகிதம் பாக்கெட்டில் ஒருகையை விட்ட படி ‘கூல்’ ஆக கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

யூசுப்பின் இந்த ‘ஸ்வாக்’ ஆன செயல் ஒலிம்பிக் பார்வையாளர்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவர்ந்துவிட்டது. ஒரே நாளில் உலகம் முழுவதும் ஹீரோவாக ட்ரெண்ட் ஆகிவிட்டார் யூசுப்.

துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் போட்டியாளர்கள் தங்களுக்கு வசதியான எந்தவித ஆடையையும் அணிந்து கொள்ள அனுமதி உண்டு. இதன் அடிப்படையிலேயே ஏதோ பார்க்கில் வாக்கிங் செல்பவர் போல வந்து அலட்சியமான உடல்மொழியுடன் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்றிருக்கிறார் யூசுப்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் யூசுப் டிகெக் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x