Published : 16 Aug 2014 11:16 AM
Last Updated : 16 Aug 2014 11:16 AM
நார்வேயின் டிராம்சோ நகரில் நடைபெற்ற 41-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதன்மூலம் செஸ் ஒலிம்பியாடில் முதல்முறையாக பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறது இந்திய அணி.
171 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற கடைசி மற்றும் 11-வது சுற்றில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றில் இந்தியாவின் பரிமராஜன் நெகி, முன்னாள் உலக சாம்பிய னான ரஸ்டம் காசிம்தனோவையும், சேதுராமன், ஆண்டன் ஃபிலிப் போவையும், சசிகிரண், மராட் துமேவையும் தோற்கடித்தனர். கடைசி ஆட்டத்தில் அதிபன் பெரும் சரிவிலிருந்து மீண்டு ஜகாங்கிர் வகிடோவுடன் டிரா செய்தார்.
11 சுற்றுகளின் முடிவில் சீனா 19 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை சீனா பெற்றது. இந்தியா, ஹங்கேரி, ரஷியா, அஜர்பைஜான் ஆகிய 4 அணிகளும் 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தன.
இதையடுத்து 2 முதல் 5 வரையிலான இடங்களை தீர்மானிப்பதற்கு டைபிரேக்கர் முறை கணக்கிடப்பட்டது. அதனடிப்படையில் ஹங்கேரிக்கு வெள்ளிப் பதக்கமும், இந்தி யாவுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன. இந்த முறை தங்கப் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய அணி 4-வது இடத்தையும், அஜர்பைஜான் 5-வது இடத்தையும் பிடித்தன.
இந்திய அணி 11 சுற்றுகளில் மொத்தம் 44 ஆட்டங்களில் விளை யாடியது. அதில் 2 ஆட்டங்களில் மட்டுமே தோற்றது. 19-ல் வெற்றி கண்டது. எஞ்சிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இந்திய அணி இந்த முறை பலம் வாய்ந்த சீனா, உக்ரைன், அஜர்பைஜான், ஹங்கேரி, ரஷ்யா, பல்கேரியா ஆகிய அணிகளை சந்திக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சதமடித்தார் சசிகிரண்
இந்திய வீரர் சசிகிரண் 11-வது சுற்றோடு சேர்த்து செஸ் ஒலிம்பியாடில் 100 போட்டிகளை விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். இந்தியாவின் 3-வது கிராண்ட்மாஸ்டரான சசிகிரண் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2006-ல் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஆனந்த் தலைமையிலான இந்திய அணி 30-வது இடத்தைப் பிடித்தது. ஆனால் ஆனந்த், ஹரிகிருஷ்ணா போன்ற ஜாம்பவான்கள் இல்லாத நிலையில், ரமேஷ் தலைமை யிலான இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது. இந்த முறை இந்திய அணியின் போட்டித் தரவரிசை 19-ஆக இருந்தது.
மகளிர் பிரிவில் ரஷ்ய 19 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளது. சீனா வெள்ளிப் பதக்கத்தையும், உக்ரைன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. இந்திய அணி 15 புள்ளிகளுடன் 10-வது இடத்தைப் பிடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT