Published : 29 Apr 2024 09:37 AM
Last Updated : 29 Apr 2024 09:37 AM
சென்னை சேப்பாக்கத்தில் எதிர்பார்த்தது போலவே நேற்று சிஎஸ்கே வென்றது. ஆனால் எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் சன் ரைசர்ஸ் அணி, அதுவும் உலகக் கோப்பை வென்ற பாட் கமின்ஸின் தலைமையில் சரணாகதி அடைந்தது ஐபிஎல் கிரிக்கெட்டுக்கென்றே உள்ள பிரத்யேக சூட்சுமங்களில் ஒன்று. அதுவும் 5-ம் இடத்திலிருந்த சிஎஸ்கே நேற்றைய வெற்றி மூலம் 3-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதுவும் நெட் ரன் ரேட் அதிகரிப்புடன் வெற்றி தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் சூட்சுமங்களைக் கண்டுப்பிடிப்பது ஒன்றும் ராக்கெட் சயன்ஸ் அல்ல. கொஞ்சம் கூர்ந்து பாயின்ட்ஸ் டேபிளைக் கவனித்து வந்து அதோடு ஆட்டத்தின் போக்கை கவனித்தால் போதும், அதை விடுத்து சிக்சர்களிலும் பவுண்டரிகளிலும் தோனிகளிலும் கோலிகளிலும் லயித்து நிற்கும் மயக்கத்திற்குச் சென்று விட்டால், அதில் சூட்சுமங்கள் தெரியாமல் போய்விடும்.
ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல் முன் தீர்மானங்கள், முன் கூட்டிய கணக்கீடு போன்றவை அல்லாமல் எந்த ஒரு ஐபிஎல் போட்டியும் நடக்காது என்று கூறிவிடலாம். உதாரணத்துக்கு அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், உண்மையில் லக்னோ ஜெயித்திருந்தால் சிஎஸ்கேவுக்கு இன்னும் கஷ்டமாகப் போயிருக்கும். ஆகவே, டாப்பில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ந்து வெற்றி பெறுவதன் மூலம் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு வருவதை ஒருவாறு மேனேஜ் செய்து விடலாம்.
ஆனால், அன்று லக்னோ தோற்றுவிட்டது. ராஜஸ்தான் சவுகரியமாக 16 புள்ளிகளுடன் மேலிடத்தில் இருப்பது சிஎஸ்கேவுக்கு சவுகரியமாகப் போய்விட்டது. ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு ஏறக்குறைய தகுதி பெற்றுவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அன்று லக்னோவுக்கு எதிராக தீவிரமாக ஆடி வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற அவசியமில்லை.
அன்று லக்னோ வெற்றி பெற்றிருந்தால் 12 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்குச் சென்றிருக்கும். சிஎஸ்கே 10 புள்ளிகள் பெற்ற அணிகள் பட்டியலில் போரடிக் கொண்டிருக்கும். அனைத்துக்கும் மேலாக சென்னை சேப்பாக்கத்தில் இறுதிப் போட்டி என்பது மிகவும் கவனத்திற்குரியது.
அதேபோல் சன் ரைசர்ஸ் அணி டாஸ் வென்று சிஎஸ்கேவை முதலில் பேட் செய்ய அழைத்தபோதே தெரிந்து விட்டது. ஏனெனில் முதலில் பேட் செய்து சன் ரைசர்ஸ் கிட்டத்தட்ட 270 - 280 ரன்களைக் குவித்து விட்டு அதை சிஎஸ்கே சேஸிங் செய்தது என்றால் அது நம்பகத்தன்மையைக் குறைத்து விடும். ஆகவே, முதலில் சிஎஸ்கேவை பேட் செய்ய அழைத்து அவர்கள் 200 ரன்களுக்கும் மேல் அடித்து விட்டால் சன் ரைசர்ஸ் சேசிங்கில் சொதப்பும் அணி என்று ஏற்கெனவே இருப்பதால் சன் ரைசர்ஸ் தோல்வி மிகவும் இயல்பாகவே தெரியும்.
நடந்து முடிந்த இந்தப் போட்டிகளின் சூட்சுமத் தர்க்கம் இப்படி என்றால், இனி வரும் போட்டிகளின் தர்க்கமும் விசேஷமானவையாகவே இருக்கும். இன்று டெல்லி அணிக்கும் கேகேஆர் அணிக்கும் இடையே நடைபெறும் போட்டியில் டெல்லி வென்றால் 12 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு செல்லும். சிஎஸ்கே 4-வது இடத்திலும் கேகேஆர் 3-வது இடத்திலும் இருக்கும். எஸ்.ஆர்.எச். 5-ம் இடத்துக்குச் செல்லும்.
லக்னோ அணி 10 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டி லக்னோவில் நடைபெறுகிறது, இதில் லக்னோ வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் பெற்று நெட் ரன் ரேட் படி 3-ம் இடத்துக்குச் செல்லும்; சிஎஸ்கே 4-வது இடத்துக்கு வந்து விடும். அதே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று விட்டால், புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே இடம் அப்படியே இருக்கும். ஆகவே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு.
மே 1-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் மோதுகிறது. இந்தப் போட்டி ஐபிஎல் சூட்சுமங்கள் எதுவும் இல்லாமல் பஞ்சாப் வெற்றி பெற்றாலும் சிஎஸ்கே 4-வது இடத்தில்தான் இருப்பார்கள். அடுத்தப் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் / சன் ரைசர்ஸ் போட்டி நடக்கவிருக்கிறது. இதில் சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றால் சன் ரைசர்ஸ் 4-ம் இடத்திற்குச் சென்று விடும்; சிஎஸ்கே பின்னடைவு கண்டு விடும். எனவே, இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி தொந்தரவுக்குள்ளாகாது என்று நம்பலாம்.
பஞ்சாபுடன் சிஎஸ்கே தோற்று விட்டார்களேயானால் 5-ம் தேதி நடைபெறும் பஞ்சாபுடானான இன்னொரு போட்டியில் ரன் ரேட்டுடன் சிஎஸ்கே வெல்ல வேண்டும், இது நடந்து விடும். ஆகவே பிளே ஆஃப் சுற்றில் சிஎஸ்கே இருப்பது உறுதி செய்யப்படும். அதற்கேற்ப மற்ற போட்டிகளின் போக்கும் தீர்மானிக்கப்படும் என்று சொல்லலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT