Published : 13 Jan 2024 05:50 PM
Last Updated : 13 Jan 2024 05:50 PM
லக்னோ: இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் வீரர் துருவ் ஜுரல் தனது பெற்றோர்கள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்திய அணி சுழற்பந்து வீச்சை அதிகம் நம்பி களம் காண உள்ளது. அஸ்வின், ஜடேஜா, அக்சர் மற்றும் குல்தீப் என நான்கு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் அங்கம் வகிக்கின்றனர். அதேநேரம், முகமது ஷமி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் துருவ் ஜுரல் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார். 22 வயதான இவர், கடந்த ஆண்டு டிசம்பரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்தார். இதில் இரண்டாவது போட்டியில் விளையாடிய துருவ் ஜுரல் 69 ரன்களை எடுத்தார். சமீபத்தில் ஆலப்புழாவில் நடந்த ரஞ்சி டிராபி ஆட்டத்தில் கேரளாவுக்கு எதிராக 63 ரன்கள் எடுத்தார். கடந்த ஆண்டு விதர்பாவுக்கு எதிராக முதல்தர போட்டியில் அறிமுகமான துருவ் ஜூரல், இதுவரை 15 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் 790 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கே.எல்.ராகுல், கே.எஸ் பரத் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ள நிலையில் மூன்றாவது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் துருவ் ஜுரல். இந்நிலையில் தான் இந்திய அணிக்கு தேர்வானது குறித்து குடும்பத்திரிடம் தெரிவித்தபோது என்ன நடந்தது என்பது குறித்து துருவ் ஜுரல் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.
“நான் ராணுவப் பள்ளியில்தான் படித்தேன். விடுமுறை காலங்களில் ஆக்ராவில் உள்ள ஏக்லவ்யா ஸ்டேடியத்தில் கிரிக்கெட் முகாமில் சேர வேண்டும் என்று நினைத்து அதற்காக படிவத்தையும் அனுப்பி வைத்தேன். ஆனால், அதனை எனது அப்பாவிடம் சொல்லவில்லை. எப்படியோ அதை தெரிந்துகொண்ட அப்பா என்னைத் திட்டினார். திட்டினாலும் எனக்கு கிரிக்கெட் பேட் வாங்க ரூ.800 கடன் வாங்கினார். அப்போது, எனக்கு கிரிக்கெட் கிட் வேண்டும் என்று சொன்னபோது, அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ரூ.7 ஆயிரம் வரை செலவாகும் என்று சொன்னதும் கிரிக்கெட் விளையாடுவதையே நிறுத்த சொல்லிவிட்டார்.
அப்பா அப்படி சொன்னதும், குளியலறையில் என்னை நானே பூட்டிவைத்து கொண்டு கிரிக்கெட் விளையாடுவேன் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். அதன்பின்னர் எனது அம்மா அவரின் தங்கச் சங்கிலியை விற்று எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கித் தந்தார். அப்படிதான் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது.
நான் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அம்மா, அப்பாவிடம் சொன்னபோது அவர்கள், 'எந்த இந்திய அணியில்?' என்று அப்பாவியாக கேட்டனர். ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடும் இந்திய அணி என சொன்னதும் ஒட்டுமொத்த குடும்பமும் உணர்ச்சிவசப்பட்டது" என்று துருவ் ஜுரல் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT