Published : 25 Dec 2023 02:16 PM
Last Updated : 25 Dec 2023 02:16 PM
மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள முதல் வெற்றியாக அமைந்துள்ளது.
மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 219 ரன்களும், இந்தியா 406 ரன்களும் எடுத்தன. 187 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது ஆஸி. அதில் 261 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதனால் 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. 18.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு இலக்கை எட்டியது இந்தியா.
46 வருட வரலாற்றில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள போதிலும் ஒன்றில் கூட வெற்றி பெற்றது இல்லை. கடைசியாக ஆஸ்திரேலிய அணி கடந்த 1984-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தது. இந்த ஆட்டமும் வான்கடே மைதானத்தில்தான் நடைபெற்றிருந்தது. 46 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி.
ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்: போட்டி முடிந்த பின் இந்திய அணி வெற்றி கோப்பையுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் அலிசா ஹீலி இந்திய அணியை புகைப்படம் எடுத்த செயல் இணையத்தில் 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' எனக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனென்றால், போட்டியின் நடந்துக் கொண்டிருக்கும் போது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கும், அலிசா ஹீலிக்கும் வாக்குவாதம் உண்டானது. இதனால், டெஸ்ட் போட்டி முழுவதும் இரு அணிகளுக்கும் இடையே ஒருவித ஆக்ரோஷத்துடனயே நடந்தது. இப்படியான நிலையில், இந்திய அணி வெற்றிபெற, தனது அணியின் தோல்வியையும் மறந்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் அலிசா ஹீலி இந்திய அணியை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதையடுத்தே இணையவாசிகள் அலிசா ஹீலியின் செயலை 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' எனப் புகழ்ந்துவருகின்றனர்.
முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய அணியை புகைப்படம் எடுத்தது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, "அது என்னுடைய கேமரா இல்லை. இந்திய வீராங்கனைகள் கேமராமேனை பின்னுக்குத் தள்ளியதால் அவரால் சரியாக புகைப்படம் எடுக்க முடியவில்லை. இதையடுத்தே அவர்களுக்கு உதவுவதற்காக புகைப்படம் எடுக்கச் சென்றேன். ஆனால், சரியாக நான் இந்திய அணியை புகைப்படம் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே அலிசா ஹீலி பதிலளித்தார்.
Spirit of Cricket
— BCCI Women (@BCCIWomen) December 24, 2023
Australia Captain Alyssa Healy on that gesture to click a special moment, ft. #TeamIndia #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/PJ6ZlIKGMb
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT