Published : 05 Apr 2014 12:00 AM
Last Updated : 05 Apr 2014 12:00 AM

டி20 உலகக் கோப்பை சாதனை துளிகள்

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது நடைபெறுவது 5-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியாகும்.



முதல் 4 உலகக் கோப்பையை முறையே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் வென்றுள்ளன.



இருபது ஓவர் உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற பெருமை தோனிக்கு உரியது. இதுவரை 26 போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 16 போட்டிகளில் அவர் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.



தோனிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் பால் கோலிங்வுட் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிகபோட்டிக்கு தலைமை வகித்துள்ளார். அவர் 17 போட்டிகளில் கேப்டனாக இருந்து 8 வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.



இருபது ஓவர் உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர், அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர்களே பெற்றுள்ளனர்.



இலங்கை வீரர் ஜெயவர்த்தனா இப்போது 4-வது உலகக் கோப்பை

போட்டியில் விளையாடி வருகிறார். இதுவரை 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 992 ரன்கள் எடுத்துள்ளார். இதுவே இருபது ஓவர் உலகக் கோப்பையில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன் ஆகும். இதில் ஒரு சதம், 6 அரைசதங்கள் அடங்கும். சராசரி 39.68.



இதற்கு அடுத்தபடியாக மேற்கிந்தியத்தீவுகளின் கிறிஸ் கெயில் 23 போட்டிகளில் பங்கேற்று 807 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 1 சதம், 7 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 40.35.



அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கையின் லசித் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். 30 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் உள்ளார். 23 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 36 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.



அணிகளின் சாதனையிலும் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பையில் அதிகபட்சமாக அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. 2007-ம்

ஆண்டில் கென்யா அணிக்கு எதிராக இலங்கை இந்த சாதனையை படைத்தது.



இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 2007-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களை எடுத்தது.



20 ஓவர் உலகக் கோப்பையில் மிகக் குறைந்த ரன்கள் எடுத்த மோசமான சாதனை இந்த உலகக் கோப்பையில்தான் படைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணி இலங்கைக்கு எதிராக 10.3 ஓவர்களில் 39 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். இதற்கு அடுத்தபடியாக இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்து 15.3 ஓவர்களில் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x