Published : 10 Jul 2014 10:00 AM
Last Updated : 10 Jul 2014 10:00 AM
காரைக்கால் அம்மையார் தேவார மூவருக்கும் மூத்தவர். தமிழுக்கும் சைவத்துக்கும் அவர் ஆற்றியுள்ள தொண்டு அளப்பரியது. பெரிய புராணத்தில் சிறப்பித்துப் போற்றப்பெறும் காரைக்கால் நகரில் தனவந்தர் தனதத்தன் எனும் வணிகரின் தவத்தால் “திருமடந்தை அவதரித்தாள் என வந்து பொங்கிய பேர் அழகுமிகப் புனிதவதியார் பிறந்தார்.”
பிறந்து பேசக் கற்றுக் கொண்டதிலிருந்து சிவபெருமானின் மீது பேரன்பு கொண்டு வளர்ந்து பருவம் அடைந்தபோது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிதிபதி எனும் புகழ்மிகு வணிகரின் மகனாகிய பரமதத்தனுக்கு மணம்முடித்துக் கொடுக்கப்பட்டார்.
தனது பெறற்கரிய மகளைப் பிரிய மனமில்லாத தனதத்தன் தனது இல்லத்திற்கு அருகிலேயே ஓர் இல்லம் அமைத்து தனது மகளும் மருமகனும் இல்லற வாழ்க்கையை இனிது தொடங்க ஏற்பாடுகள் அனைத்தும் செய்து கொடுத்தார்.
இல்லறம் நல்லறமாக நடந்து கொண்டிருந்தது. சிவனடியார்கள் வந்தால், அவர்கட்கு இன்னமுது படைத்து செம்பொன், நவமணிகளுடன் உடையும் கொடுத்து சிவபெருமானை உள்ளத் தூய்மையோடு புனிதவதியார் வணங்கிவந்தார்.
ஒருநாள் பரமதத்தனுக்கு, இரண்டு மாங்கனிகளை அவரிடம் வந்த சிலர் கொடுக்க, பரமதத்தன் அவற்றைத் தன் இல்லத்தில் கொடுக்கச் செய்தார். கணவன் கொடுத்தனுப்பிய மாங்கனிகளைப் பெற்றுக்கொண்ட புனிதவதியார் அவற்றைப் பத்திரப்படுத்திவிட்டு சமையல் வேலையைத் தொடங்குகிறார். அப்போது சிவனடியார் ஒருவர் மிகுந்த பசியுடன் புனிதவதியாரின் இல்லத்தை வந்தடைகிறார்.
சிவனடியாரின் வரவைக் கண்டு புனிதவதியார், “நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன்” என்று அவரை வரவேற்று பாதபூசை செய்து, உண்கலத்தில் உணவு இட முயலும்போது, கறி அமுது இன்னும் தயாராகாத நிலையில் தயிரன்னத்துடன் தமது கணவர் அனுப்பியிருந்த இரு மாங்கனிகளுள் ஒன்றினைச் சிவனடியாருக்குப் படைத்தார். அடியார் தம் பசி தீர்ந்து மகிழ்ந்து புனிதவதியாரின் விருந்தோம்பலைப் போற்றிவிட்டுத் தம் வழிபோயினர்.
சற்று நேரத்தில் தம் இல்லம் ஏகிய பரமதத்தனுக்குப் புனிதவதியார் உணவு படைத்தார். கறி அமுது அன்னம் ஆகிய இட்டபின் இரு மாங்கனிகளுள் அடியாருக்கு அளித்ததுபோக மீதமிருந்த ஒரு கனியைப் புனிதவதியார் தம் கணவரது உண்கலத்தில் வைத்தார்.
அந்த மாங்கனியைச் சுவைத்த பரமதத்தன் மற்றுமொரு மாங்கனியையும் கொண்டுவரச் சொன்னவுடன் திகைத்த புனிதவதியார், அறைக்கு உள்ளே சென்று இறைவனை வேண்ட, அவரது கையில் ஒரு மாங்கனி வந்து சேர்ந்தது.
இறைவனின் கருணையை எண்ணி வியந்துகொண்டே புனிதவதியார் அதனைக் கணவனிடம் கொடுக்க, அதனை உண்ட பரமதத்தன் அதன் சுவையைக் கண்டு அதிசயித்து, அக்கனி தான் கொடுத்தனுப்பிய கனி அல்லவென்றும் தெய்வீகக் கனிபோல் உள்ளதே என்றும் தன் மனைவியிடம் கூறி எங்கிருந்து அக்கனி கிடைத்தது என வினவுகிறான்.
கணவனிடம் உண்மையை மறைக்கலாகாது என்று கருதிய புனிதவதியார் நடந்தவற்றைக் கணவனிடம் கூறுகிறார். சிவபெருமானின் திருவருளால் இக்கனியைப் பெற்றிருப்பின் மற்றுமொரு கனியை வேண்டிப் பெறுக என்று மனைவியிடம் பரமதத்தன் வேண்டுகிறான்.
புனிதவதியார் இறைவனை வேண்டி,“ஈங்கு இது அளித்த அருளீரேல் எனுரை பொய் ஆம்” எனச் சொல்ல அவரிடம் மாங்கனி ஒன்று இறையருளால் வந்து சேர்கிறது. அம்மாங்கனியைப் புனிதவதியாரிடமிருந்து பெறும் பரமதத்தன் அதிர்ச்சியுறும் வண்ணம் அக்கனி மறைந்துவிடுகிறது.
தமது மனைவியாக இதுவரை புனிதவதியாரைப் பார்த்த பரமதத்தன், இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் சாதாரணப் பெண்மணியல்ல, தெய்வீகத் தன்மை வாய்ந்தவர் என்பதை உணர்ந்து அவரைத் தவிர்க்கும் பொருட்டு வணிகம் செய்ய விரும்பிச் செல்வதாகக் கூறி பயணம் மேற்கொண்டு பாண்டிய நாடு செல்கிறான்.
புதிய இடத்தில் வேறொரு பெண்மணியை மணந்து, ஒரு பெண்மகவைப் பெற்றெடுக்கிறான். இந்நிலையில் புனிதவதியின் சுற்றத்தினர் பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருப்பதை அறிந்து, புனிதவதியாரைப் பரமதத்தனுடன் சேர்த்துவைக்கக் கருதி அவரையும் அழைத்துக்கொண்டு பாண்டிய நாடு செல்கின்றனர்.
இவர்கள் வருவதையறிந்த பரமதத்தன் தன் மனைவி, மகள் ஆகியோருடன் வந்து புனிதவதியாரை எதிர்கொண்டு வணங்கி தனது மகளுக்குப் புனிதவதி என்று பெயரிட்டிருப்பதாகக் கூறிப் புனிதவதியாரின் காலில் விழுந்து வ்ணங்குகிறான்.
இதனைக் கண்ட சுற்றத்தினர் வியந்து, “ஈதென்ன மனைவியின் காலில் விழுந்து வணங்குவது?” என்று கேட்க, “மானுடம் இவர் அல்லர் /நல்பெருந்தெய்வம்/ ஆதலாலே பொன்பதம் பணிந்தேன்’ என்று பரமதத்தன் சொல்ல உறவினர் திகைக்கின்றனர். புனிதவதியார் சிவபெருமானது திருவடிகளைப் போற்றி வேண்டுகின்றார்,“...நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும்”.
வேண்டியபடி பேய் உருவம் பெற்ற புனிதவதியாரை விட்டுச் சுற்றத்தினர் தொழுது அஞ்சி அகன்று போயினர். பேய் வடிவம் பெற்ற புனிதவதியார் ‘அற்புதத் திருவந்தாதி’ அருளிச் செய்தார். சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாயமலை நோக்கிப் பயணித்தார். தலையால் நடந்து சென்றார். பேய் வடிவான புனிதவதியாரை ‘அம்மை’ என்றழைக்கும் சிவபெருமான், ‘நம்பால் இங்கு வேண்டுவது என்?’ என்று கேட்க, “பிறவாமை வேண்டும், உன்னை என்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா, நீ ஆடும்போது உன் அடியின் கீழிருக்க” என்று வேண்டுகிறார் அம்மையார் (ஆம், இனி அவரை காரைக்கால் அம்மையார் என்றே அழைப்போம்).
சிவனும் வரம் அருள்கிறார்.திருவாலங்காடு இரத்தின சபைக்குத் தலையால் நடந்து சென்று இறைவனின் சேவடிக்குக் கீழ் அமர்ந்து அவனின் தாண்டவத்தைக்க் கண்டபடியே இருக்கிறார். இதனை நிகழ்த்திக் காட்டும் திருவிழாதான் மாங்கனித் திருவிழா.
அரசலாற்றின் வடகரையிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் மாப்பிள்ளை அழைப்பும், காரைக்கால் அம்மையார் கோவிலில் திருக்கல்யாணமும் நடைபெறும். சாதி, இன வேறுபாடின்றி மக்கள் கூடி திருக்கல்யாணம் காண்பர். மறுநாள் காலை பிச்சாண்டவர் ஊர்வலத்தில் வாத்திய இசை, திருமுறைப் பாராயணம், வேத பாராயணம் ஆகியன ஒலிக்கும்.
பிச்சாண்டவருக்கு ஒரு பட்டுத் துண்டும் ஒரு மாம்பழமும் படைப்பார்கள்.தொடர்ந்து கூடைகூடையாக மாம்பழங்களை இறைக்கும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாக இருக்கும். மாடிகளிலிருந்து இறைக்கப்படும் கனிகளைப் போட்டிபோட்டுக்கொண்டு பிடிப்பார்கள்.
ஊர்வலம் முடிந்ததும் சோமநாதர் ஆலயத்தில் அமுது படையல் நடைபெறும். மறுநாள் அதிகாலை காரைக்கால் பாரதியார் தெருவிலுள்ள் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்ட நிலையில் பேய் வடிவுடன் தீவட்டி வெளிச்சத்தில் அம்மையார் வரும் காட்சி நெஞ்சை நெகிழவைக்கும். அங்கு அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் எதிரில் கைலாயநாதனும் உமையம்மையும் காட்சி கொடுப்பர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT