Published : 09 May 2023 06:06 AM
Last Updated : 09 May 2023 06:06 AM

சித்திரை மாத பிரம்மோற்சவ விழா: பார்த்தசாரதி கோயிலில் நாளை தேரோட்டம்

சென்னை: சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நாளை தேரோட்டம் நடக்கிறது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நின்ற திருக்கோலத்தில் வேங்கடகிருஷ்ணன்என்ற திருநாமத்துடன், தனது தேவியார் ருக்மணி பிராட்டி,மகன் பிருத்யும்னன், பேரன் அநிருத்தன், தம்பி சாத்யகி ஆகியோருடன் இக்கோயிலில் சேவை சாதிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் குருசேத்திரப் போரில் தன் முகத்தில் ஏந்திய வடுக்களுடன் இங்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் சித்திரை மாதம் பார்த்தசாரதி பெருமாளுக்கான பிரம்மோற்சவமும், இதே கோயிலில் மேற்கு பார்த்து எழுந்தருளிஇருக்கும் நரசிம்ம பெருமாளுக்கு ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவமும் புகழ்பெற்றவை. அந்த வகையில், இக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் மே 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல் நாளில் புன்னைமர வாகன வீதி உலாவும், 2-ம் நாள் விழாவில் பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் நடைபெற்றன. 3-ம் நாள் விழாவில் கருட வாகனத்தில் வலம் வந்து பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சென்னை மெரினா கடற்கரை வரை கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி சேவை சாதித்தார். நேற்று 5-ம் நாள் விழாவில் பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் சேவை நடந்தது. 6-ம் நாள் விழாவான இன்று அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடைபெறும். இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் வீதி உலாவும் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பின்னர், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 7-ம் நாளான நாளை (மே 10) நடக்கிறது. காலை 5 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். பின்னர், 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

8-ம் நாள் திருவிழாவான வரும் 11-ம் தேதி வெண்ணெய்த் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை, 12-ம் தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், அன்று இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. 13-ம் தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x