Published : 08 May 2023 05:30 AM
Last Updated : 08 May 2023 05:30 AM

மதுரையில் விடிய விடிய தசாவதாரம்: இன்று மலைக்கு புறப்படுகிறார் கள்ளழகர்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் நேற்று முன்தினம் இரவு ராமராயர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதாரக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பின்னர் பூப்பல்லக்கு அலங்காரத்தில் இன்றுகாலை மதுரையில் இருந்து அழகர்கோயிலுக்குப் புறப்படுகிறார்.

மதுரை சித்திரைத் திருவிழாவில் கடந்த 5-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். அதிகாலை பக்தர்கள் வெள்ளத்தில் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் ராமராயர் மண்டபம் வந்தடைந்தார். அங்கு கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி யடித்தனர்.

தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள மண்டகப் படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார்.

மறுநாள் மே 6-ம் தேதி காலை சேஷ வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திரு மஞ்சனம் முடிந்து தேனூர் மண்டபம் முன் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.

அதன் பிறகு நாரைக்கு முக்தி அளித்து விட்டு அங்கிருந்து இரவில் மீண்டும் ராமராயர் மண்டபத்தை வந்தடைந்த கள்ளழகர், அங்கு விடிய, விடிய தசாவதாரக் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திவான் ராமராயர்
மண்ட பத்தில் நடைபெற்ற தசாவதார நிகழ்வில்
முத்தங்கி சேவை , மச்ச , கூர்ம , வாமன, இராம, கிருஷ்ண, மோகினி அவதாரம்
அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர். படங்கள்: நா.தங்கரத்தினம்.

மச்சம், கூர்மம், வராகம், வாமனன், நரசிம்மம், உள்ளிட்ட பத்து வித அலங்காரங்களில் காட்சி அளித்த கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரைமோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார். இரவு 8 மணியளவில் கள்ளழகர் தல்லாகுளம் வந்தார். அங்கு கருப்பசாமி கோயில் அருகே பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன.

இன்று அதிகாலை மதுரையில் இருந்து அழகர் மலையை நோக்கி புறப்பாடானார். தொடர்ந்து அவுட் போஸ்ட் அம்பலகாரர் மண்டபம், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில், புதூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் எழுந்தருளி மூன்று மாவடி, கடச்சனேந்தல், சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபம் சென்றடைகிறார்.

இன்று இரவு 7 மணியளவில் சர்வேயர் காலனி சென்றடைகிறார். அங்கு கள்ளழகரை அழகர்கோவில் மலைக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் அங்கிருந்து பக்தர்களிடம் விடைபெற்று சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபம் செல்லும் அவர் மறுநாள் மே 9-ம் தேதி காலை அங்கிருந்து புறப்பாடாகி அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி சென்று அங்கிருந்து அழகர்கோவில் சென்றடைகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x