Published : 07 May 2023 04:26 AM
Last Updated : 07 May 2023 04:26 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பூண்டி மாதா சொரூபம் சிறிய சப்பரத்தில் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் இறைபாடல்களுடன் வர, மாதாவின் திருஉருவம் வரையப்பட்ட வண்ணக் கொடியுடன் பக்தர்கள் முன் சென்றனர். தொடர்ந்து, பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், உதவி பங்குத் தந்தைகள், ஆன்மிக தந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஊர்வலம் பேராலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தை அடைந்தது.
அங்கு அந்த மான் ஆயர் விசுவாசம் செல்வராஜ் கொடியை புனிதப்படுத்தி கொடிமரத்தில் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ‘மரியா- ஆறுதலின் அன்னை’ என்ற தலைப்பில் அந்தமான் ஆயர் விசுவாசம் செல்வராஜ் மறையுரையாற்றினார். தொடர்ந்து, இன்று (மே 7) ‘மரியா- திருஅவையை, இல்லத்தை ஒருங்கிணைப்பவர்’ என்ற தலைப்பில் திருச்சி புனித கிளைவ் இல்ல ஆன்மிக தந்தை ஜெரோம்,
நாளை(மே 8) ‘இறை வார்த்தையை வாழ்வாக்கியவர்’ என்ற தலைப்பில் மயிலை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஸ்டான்லி செபாஸ்டின், 9-ம் தேதி ‘எளியோரின் காவலர்’ என்ற தலைப்பில் திருச்சி மறை மாவட்ட முதன்மை குரு அந்துவான், 10-ம் தேதி ‘தூய்மையின் ஆலயம்’ என்ற தலைப்பில் சேலம் மறை மாவட்ட முதன்மை குரு மைக்கேல் ராஜ் செல்வம், 11-ம் தேதி ‘உறவுக்கான வழிகாட்டி’ என்ற தலைப்பில் திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மை குரு சகாயராஜ்,
12-ம் தேதி ‘பாவிகளின் அடைக்கலம்’ என்ற தலைப்பில் கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்டெனிஸ், 13-ம் தேதி ‘மன்னிப்பின் சிகரம்’ என்ற தலைப்பில் செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு ஜான் போஸ்கோ ஆகியோர் சிறப்பு திருப்பலி மேற்கொள்கின்றனர். தினமும் திருப்பலிக்குப் பின் ஜெபமாலையுடன், தேர்பவனி, நற்கருணை ஆராதனை மற்றும் குணமளிக்கும் நற்செய்தி கூட்டம் நடைபெறும்.
மே 14-ம் தேதி காலை 6 மணிக்கு பூண்டி மாதா பேராலயத்தின் முன்னாள் பங்குத் தந்தை லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோரின் நினைவு திருப்பலி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு ‘மரியா- அருளின் ஊற்று’ என்ற தலைப்பில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி மறையுரையாற்றி ஆசி வழங்குகிறார்.
இரவு 9.30 மணிக்கு மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர் பவனியை குடந்தை ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார். மே 15-ம் தேதி காலை 6 மணிக்கு ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 5.15-க்கு திருப்பலி, வேண்டுதல் சப்பரம் மற்றும் கொடியிறக்கம் நடக்கவுள்ளது.
விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத் தந்தை சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், உதவி பங்குத் தந்தைகள், ஆன்மிக தந்தைகள், தியான இல்ல இயக்குநர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT