Published : 06 May 2023 04:02 AM
Last Updated : 06 May 2023 04:02 AM
மதுரை: பக்தர்களின் ‘கோவிந்தா.. கோவிந்தா...’ முழக்கம் விண்ணதிர பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகையாற்றில் கள்ளழகர் நேற்று அதிகாலை இறங்கினார். சுமார் 5 லட்சத்துத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். இதில் தமிழகம் முழுவதுமிருந்து பல லட்சம் மக்கள் ஒன்றுகூடி சுவாமி தரிசனம் செய்வார்கள். இதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ஏற்பாடுகள் நடப்பது வழக்கம். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவுபெற்றது. இந்நிலையில், மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடங்கியது.
மே 3-ல் அழகர்மலையிலிருந்து கள்ளழகர் மதுரைக்குப் புறப்பட்டார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் என வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளினார். மண்டகப்படிகளில் கள்ளழகருக்கு பூஜைக்குப் பின் பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மே 4-ம் தேதி காலை மதுரை மாநகருக்குள் நுழைந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்று இரவு 9 மணியளவில் அலங்காரம் களைதல் முடிந்து திருமஞ்சனம் நடைபெற்றது.
இதற்கிடையே, கள்ளழகர் வேடம் பூண்ட பக்தர்கள் நகர் முழுவதும் வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். நகரில் ஆங்காங்கே ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்றனர். இதனால், மதுரை மாநகர் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாக் கொண்டாட்டம் களை கட்டி இருந்தது.
நேற்றிரவு 10.30 மணி முதல் 11.30 வரை கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் அலங்காரமாகி இரவு 11.30 முதல் 12 மணிக்குள் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தங்க குதிரை வாகனம்: அதிகாலை 12 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு கள்ளழகர் புறப்பட்டார். அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்றார்.
அதிகாலை முதல் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்ய மதுரை வைகை ஆற்றை நோக்கிக் குவிந்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே, இரவு தொடங்கிய சாரல் மழை காலை வரை நீடித்ததது.
பின்னர் கள்ளழகர் தல்லாகுளம் ஆயிரம் பொன் சப்பரத்தேரில் எழுந்தருளி கோரிப்பாளையம் வழியாக ஆழ்வார்புரம், வைகை வடகரை வழியாக வைகை ஆற்றுக்குச் சென்றார். அப்போது அங்கு தயாராக இருந்த வீரராகவப்பெருமாள் 5.47 மணிக்கு கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றார்.
அதிகாலை 5.52 மணியளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ்ந்து கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார். வைகை ஆறு முழுவதும் மனிதத் தலைகளால் நிரம்பியிருந்தது. ஆற்றில் அழகர் இறங்கும்போது சாரல் பெய்ய கள்ளழகரை வருண பகவானே வாழ்த்துவது போல் இருந்தது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கியபோது ஆற்றுத் தண்ணீருக்குள் இருந்தவாறு பக்தர்கள் தண்ணீரை கைகளால் அள்ளித்தெளித்து ஆர்ப்பரித்து ஆட்டம் போட்டனர். அப்போது ‘வாராரு வாராரு, அழகர் வாராரு’ என்ற திரையிசைப் பாடல் ஒலிக்க பக்தர்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர்.
பின்னர் கள்ளழகரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேங்காய், சர்க்கரை வைத்து சூடமேற்றி வழிபட்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டனர். கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வந்ததால் இந்த ஆண்டு நன்கு மழை பொழிந்து சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
பின்னர் வைகை ஆற்றின் சந்திப்பு மண்டபத்தில் வீரராகவப் பெருமாளுக்கு கள்ளழகர் மாலை சாற்றி, மண்டகப்படியை 3 முறை வலம் வந்தார். இந்து சமய அறநிலையத் துறை மண்டகப்படியில் எழுந்தருளினார். அங்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
அதன்பின் கள்ளழகர் வைகை ஆற்றிலிருந்து காலை 7.22 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்குப் புறப்பட்டார். அப்போது சாரல் மழையும் நின்றது. அங்கு காலை 10.30 மணியளவில் தண்ணீர் பீச்சு நடைபெற்றது. இதில் அழகர் வேடமிட்டிருந்த பக்தர்கள் போட்டி போட்டிக்கொண்டு கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.
பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், நேற்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார்.
மண்டூகருக்கு சாபவிமோசனம்: இன்று (மே 6) தேனூர் மண்டபத்தில் இருந்து சேஷ வாகனத்தில் காலையில் புறப்பாடாகிறார். காலை 11.30 மணிக்கு திருமஞ்சனமாகி கருட வாகனத்தில் புறப்பாடாகி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். மே 7-ம் தேதி ராமராயர் மண்டபத்தில் இரவு தொடங்கி விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மே 8-ல் தல்லாகுளத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர் பின்னர் அழகர்மலைக்குப் புறப்பட்டு மே 9-ல் கோயிலைச் சென்றடைகிறார். மே 10-ல் உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
இவ்விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், துணை மேயர் நாகராஜன், எம்எல்ஏக்கள் தளபதி (மதுரை வடக்கு), ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்), அய்யப்பன் (உசிலம்பட்டி) உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT