Last Updated : 09 Nov, 2016 05:52 PM

 

Published : 09 Nov 2016 05:52 PM
Last Updated : 09 Nov 2016 05:52 PM

ஆன்மிகச் சுற்றுலா: ஒடிசாவின் தங்க முக்கோணம்

“இங்கே கல்லின் மொழி மனிதனின் மொழியைத் தாண்டி நிற்கிறது”. கொனார்க் சூரியக் கோயிலையும், பிரம்மாண்டமான தேர் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் அதன் கட்டுமானத்தையும், சிற்பக்கலையழகையும் பார்த்து ரவீந்திரநாத் தாகூர் வியந்து கூறிய வார்த்தைகள் இவை.

இந்தக் கோயிலில் வழிபாடு எதுவும் கிடையாது. முழுமையான கோயிலாகவும் இல்லை. கருவறை மற்றும் பல பகுதிகள் மனிதனாலும், இயற்கையாலும் சிதைக்கப்பட்டிருக்க, சில பகுதிகளே நின்று கொண்டிருக்கின்றன. ஆனாலும் பல்லாயிரக்கணக்கான கலை ரசிகர்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் இத்தலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கருப்பு பகோடா கொனார்க்

கல்லிலே கலைவண்ணம் காட்டும் கொனார்க், ஒடிசா மாநிலத்தில் தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், புகழ்பெற்ற ஜெகந்நாத் கோயில் அமைந்துள்ள பூரியிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இம்மூன்றும் சேர்ந்து “ஒடிசாவின் தங்கமுக்கோணம்” என்று அழைக்கப்படுகிறது. அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை இங்கு வருவதற்கு உகந்த காலமாகும். மார்ச் முதல் ஜுன் வரை 36 முதல் 46 டிகிரியில் வெப்பம் கடுமையாக இருக்கும்.

பண்டைக் காலத்தில் அயல் நாட்டு வணிகர்களால் “கருப்பு பகோடா” என்றும், அர்க்க சேத்திரா என்றும் அழைக்கப்பட்ட கொனார்க், தனது பிரம்மாண்டமான சிற்ப வேலைப்பாடுகளால் அனைத்து மக்களையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இக்கோயிலில் வடிக்கப்பட்டுள்ள எண்ணற்ற ஆண் பெண் போகச் சிற்பங்களும் ஒரு கூடுதல் ஈர்ப்பாகும்.

முதலாம் நரசிம்மதேவா என்ற கிழக்கு கங்க வம்சத்தைச் சார்ந்த மன்னன், 13-ம் நூற்றாண்டில் சூரிய பகவானுக்காக இக்கோயிலைக் கட்டியிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், ஆதிசங்கரர் வகுத்த அறுவகைச் சமயத்தில் ஒன்றான சூரிய வழிபாடு ஒடிசாவில் தழைத்து இருந்திருக்க வேண்டும். வேதத்தில் சூரியன், மும்மூர்த்திகளான பிரம்மன், விஷ்ணு, மகேஸ்வரன் ஆகியோர் இணைந்த, காணும் வடிவமாகப் போற்றப் படுகிறான்.

ஒடிசாவின் கலிங்க பாணி கட்டிடக் கலை அமைப்பில் விமானம், ஜெகமோஹனா என்னும் முக மண்டபம், நடனமண்டபம், போகா மண்டபம் என்று கி.பி. 1243 முதல் கி.பி. 1255க்குள் பன்னிரெண்டே ஆண்டுகளில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருவறை அமைந்திருக்கும் விமானப் பகுதி, நீண்ட, குறுகிய கோபுரமாக, 200அடிக்கும் மேல் உயரமாக, ஒருபக்கத்தில் ஏழு மடிப்புகளுடன் சப்தரத அமைப்பில் இருந்திருக்கிறது. 1837-ம் வருடத்தில் இந்தப் பகுதி விழுந்து, சில அடிப்புற அலங்கார அமைப்புகளும், கற்களும்தான் தற்பொழுது எஞ்சியிருக்கின்றன.

கருவறையின் தெற்கு, மேற்கு,வடக்குப் பகுதிகளில் மூன்று சூரியன் சிலைகள் இடிபாடுகளுக்கிடையே நிற்கின்றன. காலைக் கதிரவனின் கதிர்கள், தெற்குப் புறத்தில் உள்ள “மித்ரன்”(Mitra) என்ற உதயசூரியன் சிற்பத்தில் பாயும் வண்ணமும், மதிய வேளையில், மேற்கில் உள்ள “புன்சன்” (Punsan) என்னும் நண்பகல் சூரியன் சிற்பத்திலும், மாலைக் கதிர்கள், வடக்கில் உள்ள “ஹரித்ஸ்வா” (Haritasva) என்னும் மறையும் சூரியன் சிற்பத்தின் மீதும் படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

தெற்குச் சூரியன் படைப்புக் கடவுளான பிரம்மாவாகவும், எரிக்கும் மேற்குச் சூரியன் அழிக்கும் கடவுளான மகேஸ்வரனாகவும், இனிய மாலைக்கதிர்படும் வடக்குச்சூரியன், காக்கும் கடவுளான விஷ்ணுவாகவும் உருவகம் செய்யப்பட்டிருக்கலாம். பச்சை நிற குளோரைட் கல்லினால் அமைக்கப்பட்ட இந்த மூன்று சிலைகளும் கொனார்க்கின் மிகச் சிறந்த பொக்கிஷம் என்று கூறலாம்.

ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்

கருவறை அமைந்திருக்கும் விமானமும், முன் மண்டபமும் ஏழு குதிரைகள் இழுக்க, சுமார் பத்து அடி விட்டமுள்ள பன்னிரண்டு ஜோடி சக்கரங்களுடன், தேர் போன்ற அமைப்பில், சுமார் 12அடி உயரமான பீடத்தின் மேல் பிரம்மாண்டமாய்க் கட்டியிருக்கிறார்கள். முகமண்டபத்தின் மேற்கூரை பிரமிடு வடிவத்தில், அடுக்கடுக்காய்க் கற்கள் குறுக்குவாட்டிலும், நடுவில் ஊடுகற்கள் கொடுக்கப்பட்டு, மூன்று பிரிவாய் அமைந்து, மேலே வட்டமாய்ச் சிகரம் அமைந்துள்ளது. மண்டபத்தின் பக்கச் சுவர்களில் யானை மேல் நிற்கும் யாளிகள், ஆண் பெண் இணைச்சிற்பங்கள், நுண்ணிய அழகிய வேலைப்பாடுகள் அழகுக்கு அழகு செய்கின்றன. முன்புறம் தேரை இழுக்கும் குதிரைகளில் இரண்டு மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

அப்படியே பீடத்தைச் சுற்றி வந்தால், மேற்புறமும், கீழ்ப்புறமும் யானைகள், பறவைகள் வரிசை வரிசையாய்ச் செல்கின்றன. குதிரைப்படை செல்கின்றது. பழகிய யானைகளைக் கொண்டு யானைகள் பிடிக்கப்படுகின்றன.

கல் சொல்லும் காலம்

எங்கு பார்த்தாலும் பெண்கள் பலவித வடிவங்களில் நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அலங்காரம் செய்து கொண்டிருக்கின்றனர். இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு பெண் வாசலில் நின்று, கணவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு வீரன் புலியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான். தலை கீழாகத் தொங்க விடுதல், முடியை அரிதல் போன்ற தண்டனைகள் நிகழ்கின்றன.

யானை மேல் அரசன் அமர்ந்திருக்க, வணிகர்கள் பரிசுப் பொருட்களுடன் வருகின்றனர்.அதில் ஒரு ஒட்டகச்சிவிங்கியும் நிற்கிறது. அப்போதைய கலிங்கம் ஆப்பிரிக்காவுடனும் வணிகத் தொடர்பில் இருந்திருக்கிறது.

கொனார்க்கின் புகழ் பெற்ற சக்கரங்கள், காலத்தைத் துல்லியமாகக் காட்டும் சூரியக் கடிகாரமாகவும் உள்ளன. 12 சக்கரங்கள் 12 மாதங்களையும், ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களையும் குறிப்பிடுகின்றன. சக்கரத்தின் நடுவில் உள்ள எட்டு கால்கள், ஒரு நாளின் எட்டு “பிரஹார்”-ஐக் ( மூன்று மணி சேர்ந்த ஒரு பிரிவு) குறிக்கின்றன.

கொனார்க்கைப் பற்றிப் பல சுவையான தகவல்களும், கதைகளும் உள்ளன. மூலவரின் மார்பில் இருந்த பெரிய வைரத்தில் சூரியனின் கதிர்கள் பட்டுப் பிரதிபலித்து, அந்த இடமே ஔி வெள்ளத்தில் மூழ்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பெரும் பகுதி சிதைந்திருந்தாலும், பெரிய பிரமிட் வடிவக் கூரை அமைப்புடன் கூடிய முக மண்டபம், பிரம்மாண்ட பீடம், மூன்று சூரியன் சிற்பங்கள், கதிர்கள் விழும்படி அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பு, சூரியக் கடிகாரமாய் விளங்கும் சக்கரங்கள், எங்கும் நிறைந்திருக்கும் நுண்ணிய சிற்ப அழகுகள் இன்றும் அதிசயமாய் நின்று மலைக்க வைக்கின்றன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x