Published : 17 Jul 2014 10:20 AM
Last Updated : 17 Jul 2014 10:20 AM
வேலூர் மாவட்டத்தில் சிறியதும் பெரியதுமாகப் பல்வேறு பெயர்களில் சுமார் 2 ஆயிரம் அம்மன் கோயில்கள் உள்ளன. ஆடி மாதம் என்றால் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
திருவிழா நாளில் பொங்கல் வைத்துக் கூழ்வார்த்தல், கும்பச் சோறு படைத்தல் மிகவும் பிரபலம். அதிலும், அம்மனுக்கு மிகவும் பிரியமான பச்சரிசி சாதம், கத்தரிக்காய் காரக்குழம்பு, கருவாட்டுக் குழம்பு, முட்டை, முருங்கைக்கீரை என பக்தர்களின் படையல் வழிபாட்டுக்கு அம்மன் வரம் தருவாள் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறும் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து வழிபடுவதும், தீக்குண்டத்தில் இறங்குவதும் இங்கே நடக்கின்றன. நோய்கள் தீர்ந்தால் கை, கால், கண் என பொம்மை உருவங்களை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பழக்கமும் இங்கே இருக்கிறது.
வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் நடைபெறும் ஆடித் திருவிழா 9 வாரங்கள் கடந்து நடைபெறும். ஆடி மாதம் 9 வெள்ளிக்கிழமையும் இங்கு நடக்கும் சிறப்பு அலங்காரங்கள், 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, தெப்ப உற்சவத்தைக் காண பக்தர்கள் கூட்டம் கட்டுக்குள் அடங்காது.
தாயின் தலையைக் கொய்த பரசுராமன்
ஜமதக்னி-ரேணுகா தேவியின் மகனாகப் பிறந்த பரசுராமர் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற வாக்கிற்கு ஏற்பத் தாயின் தலையை வெட்டிச் சாய்க்கப் புறப்பட்ட கதை நம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அந்தக் கதையில் வரும் தாய் ரேணுகாம்பாளின் தலையைக் கொய்த இடம்தான் வெட்டுவாணம் என புராணங்களில் கூறப்படுகிறது.
ஒரு சமயம் விவசாயி ஒருவர் வெட்டுவாணத்தில் உள்ள கசக்கால்வாயைச் சீர்படுத்தியபோது சிலை ஒன்று தென்பட்டுள்ளது. அந்தச் சிலை மீது தவறி மண்வெட்டி பட்டதில் ரத்தம் வழிந்தது. அப்போது, அம்மன் அருள் வந்த ஒருவர் வாக்கின்படி ரேணுகாம்பாளுக்கு அந்த இடத்திலேயே கோயில் எழுப்பி வழிபாடு செய்யப்படுகிறது.
தலவிருட்சம் வேம்பு
நூறு ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் கோயிலின் தல விருட்சமாக இருக்கிறது. அம்மை நோய் தாக்கியவர்கள் இன்றும் கோயிலில் படுத்துறங்கி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் வேம்பு கலந்த புனித நீரைக் குடித்துவந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு பவுர்ணமி பூஜை அன்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அபிஷேகங்கள் உண்டு.
ஆடி மாதம் மட்டுமின்றி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இங்கு நடைபெறும் பூஜைகள் வெகு விசேஷம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT