Published : 20 Oct 2016 10:46 AM
Last Updated : 20 Oct 2016 10:46 AM

ஆன்ம தூய்மை தரும் - ஐப்பசி மாதம்: துலா ஸ்நானம்

ஸ்நானம் என்னும் நீராடல் உடல் தூய்மைக்காக மட்டுமல்ல புறக்கண்களுக்குப் புரிபடாத ஆன்ம தூய்மைக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.

புண்ணியத் தலங்களுக்குச் செல்லும்போது தவறாமல், அங்குள்ள புண்ணிய நதி, கிணறு, குளம் ஆகியவற்றில் ஸ்நானம் செய்வது அவசியம் என்கிறது சாஸ்திரம். இதனால் அந்நீர்நிலைகளைத் தூய்மையுடன் பாதுகாப்பது பக்தர்களின் கடமையாகிறது.

கும்பகோணம் மகாமகம் கும்பமேளா ஆகியவை முதன்மையானது என்றாலும், காவிரி துலா ஸ்நானம் அதிமுக்கியமானது. பாரத தேசத்தில் உள்ள புண்ணிய நதிகள் எல்லாம் தங்கள் பாவத்தைத் தீர்த்துக் கொள்ள காவிரியில் ஐப்பசி மாதம் ஸ்நானம் செய்ய வருவதாக நம்பிக்கை.

ஐப்பசி மாதத்தைத் தமிழில் துலா மாதம் என்பார்கள். துலா என்றால் தராசு. தராசு எவ்வாறு நடுநிலையைத் தன் முள் காட்டி நிற்கிறதோ, துலா மாதமும் பகலையும் இரவையும் சமமாகத் துல்லியமாகக் கொண்டுள்ளது என்று அதன் பெயர்க் காரணம் தெரிவிக்கிறது.

துலா ஸ்நானம் என்றால் என்ன?

ஐப்பசி மாதம் முதல் தேதி அதாவது இந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம் என்கிறது புராணங்கள். அதனையொட்டி இந்நீர்நிலைக்கு வரும் கங்கா, யமுனா, சரஸ்வதி, கிருஷ்ணா ஆகிய நதிகள் தங்களிடம் பக்தர்கள் கரைத்துவிட்டுச் சென்ற பாவங்களை காவிரியில் நீராடி தூய்மைப்படுத்திக் கொள்வதாக நம்பிக்கை உள்ளது. இன்றைய தினம் காவிரியில் ஸ்நானம் செய்தால், அப்புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் மகாவிஷ்ணு அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, சங்கமேஸ்வரர் கோயில் படித்துறை, திருவையாறு திருவிடைமருதூர், பூம்புகார், பவானி, கும்பகோணம், மாயூரம், குணசீலம், தலைக்காவிரி, திருச்சி முக்கொம்பு ஆகிய இடங்கள் புனித ஸ்நான கட்டங்களாகக் கருதப்படுகிறது. ஸ்நானத்திற்குப் பின் அன்னதானம் செய்துவிட்டு, பெருமாளை தரிசித்தல் பெரும் புண்ணியம் என்பது ஐதீகம்.

புண்ணிய நீராடல்

புண்ணிய நதிகளில் நீராடுவது என்பது நம் பாவங்களை நீக்கிக்கொள்ளும் வழிமுறையாகும். இந்தியாவில் எத்தனையோ புண்ணிய நதிகள் இருக்கின்றன.

கங்கை, கோதாவரி, நர்மதா, சிந்து, சரஸ்வதி, கோமதி, வாரணாசி, பிரயாகை, துங்கபத்ரா, தண்ட காரண்யம், சித்ரகூடம், அவந்தி, சரயூ, ஹரி, கேதாரம், நேபாளம், கிருஷ்ணா, மதுரா, காவேரி, நர்மதா, தாமிரபரணி முதலியன.

தீர்த்தங்களை அசுத்தப்படுத்துவது என்பது நூறுமுறை பாவம் செய்வதற்குச் சமமான தோஷத்தைக் கொடுக்கும்.

பொதுவாக சூரியன் உதிப்பதற்கு முன் அருணோதய வேளையில் நீராடவேண்டும். நீராடுவதற்கு முன் திதி, வாரம், முதலியவற்றையும் புனித நதிகளாக இருப்பின் அதன் பெயரையும் குறிப்பிட்டுச் சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.

எப்படி நீராட வேண்டும்?

நீராடும்போது பிரவாகங்களுக்கு எதிராகவும், குளங்களில் நீராடும்போது, சூரியன் இருக்கும் திசையை நோக்கியும் நின்று கொண்டு நீராட வேண்டும்.

நீராடிக் கரையேறும்போது இருகைகளில் நீரை நிரப்பிக் கொண்டு, என் உடலிலுள்ள அழுக்குகளை இந்நீரில் கழுவி, தோஷம் செய்திருக்கிறேன். அந்தத் தோஷம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இரண்டு கைகளில் உள்ள நீரையும் கரையில் விட்டு ஏறவேண்டும்.

உடலினை உடனே துடைத்துவிடக் கூடாது. உடலில் வடியும் நீரை தேவர்களும், பித்ருக்களும், ஏனைய உயிரினங்களும் பெறுவதாகச் சாத்திரம் கூறுகிறது.

நீராட்ட வகைகள்

பொதுவாக நீராடுதல் ஆறு வகைப்படும். நித்தியம், நைமித்திகம், காம்யம், க்ரியாங்கம், மலாப கர்க்ஷணம், க்ரியா ஸ்நானம்.

தினசரி செய்ய வேண்டிய எந்தவிதக் கடமைகளையும் குளித்துவிட்டே தொடங்க வேண்டும். காலைக் கடன்களில் முக்கியமான கடன் நீராடுதல். தினசரிக் கடமைகளில் ஒன்றாக இந்தக் குளியல் வருவதால் இதை நித்தியம் என்று சொல்கிறோம். தீட்டுகளால் ஏற்படும் அசுத்தியைப் போக்கிக் கொள்ள நீராடுவதை நைமித்திகம் என்கிறோம்.

சில விழாக்களுக்காகப் பிரத்தியேகமாக நீராடுதல் காமியமாகும். சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றிற்காக நீராடுதல் கிரியாங்கமாகும். அதாவது ஒரு கிரியைக்கு அங்கமாக இது அமைந்திருக்கிறது.

உடம்பின் சுத்திக்காக நீராடுவது மலாபகர்ஷணமாகும். புண்ணிய நதிகளில் நீராடுவது க்ரியா ஸ்நானமாகும்.

நீராட வேண்டிய நீர்நிலைகள்

எல்லா நீர்நிலைகளும் ஸ்நானத்திற்கு ஏற்றவையல்ல. ஸ்நானம் செய்ய ஏற்ற நீர்நிலைகள் மலையில் தோன்றிக் கடலில் கலக்கும் நதிகள் (கங்கை, காவிரி), ஊற்றாக வெளியில் வந்து பூமியில் மறைகின்ற நீர்நிலை, ஓடை அல்லது நீர்தேக்கம் (சரஸ்), மனிதர்களால் அமைக்கப்படாமல் தானே அமைந்த புஷ்கரணிகள், தடாகங்கள், நல்ல படிகளால் முறையாகக் கட்டப்பட்ட குளம், மலையின் பிளப்பிலிருந்து தாரையாக ஊற்றும் நீர், கிணறு அல்லது கூபம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x