Published : 03 Apr 2014 01:33 PM
Last Updated : 03 Apr 2014 01:33 PM
பரிபாஷை என்றால் ரகசிய மொழியில் பேசுவது. பாண்டவர்களில் ஒருவரான நகுலனால் ஏற்படுத்தப்பட்டது. நகுலன் குதிரைகளைப் பராமரிப்பதில் வல்லவர். குதிரைகளின் மொழி அறிந்தவர். அத்ற்குப் பரிபாஷை என்று பெயர்.
ஒவ்வொரு கனைப்புக்கும் ஒரு செய்தியைக் குதிரைகள் சொல்வதை நன்கு அறிந்தவர். குதிரைகளுக்கு மோப்பசக்தி அதிகம். தன் எஜமானன் அரைகாத தூரத்தில் வரும் போதே வருகையை உணரும்.
சாரதி சாட்டையால் முதுகில் வருடுவதையும், தட்டுவதையும் பிரித்துணர்ந்து செயல்படும். கடிவாளத்தினை சாரதி லேசாகச் சுண்டும்போதே எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என அறிந்து கொள்ளும். எவ்வளவு வேகமாகச் சென்றாலும் கடிவாளைத்தினை இறுக்கிப் பிடித்து இழுத்தால் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி முன்னங்கால்களைத் தூக்கியபடி உடனே நிற்கும்.
நகுலன் குதிரைகளிடம் சென்று அதிகம் பேசுவதில்லை. ஆனால் அவர் முதுகைத் தடவிக்கொடுத்தால் இன்று வெகு தூரப் பயணம் என அவை அறியும். கண்களுக்கு நடுவில் நெற்றியில் தடவி ஒரு தட்டு தட்டினால் ஓய்வெடுங்கள் என அர்த்தம்.
பாண்டவர்கள் 13 வருடம் வனவாசம் சென்ற போது ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் இருக்க விராட தேசத்தில் மாறுவேடத்தில் இருந்தனர்.
ஒரு முறை தேரில் விராட மன்னன் பயணம் செய்தபோது சாரதியாக நகுலன் இருந்தார். வேகமாகக் காட்டு வழியே சென்ற போது ஒரு இடத்தில் குதிரைகள் ஓடாமல் நின்றன. நகுலன் ஏதோ அவை சொல்ல நினைப்பதை அறிந்து இறங்கி அருகில் சென்றார். தலையை மேலும் கீழுமாக அவை ஆட்டின. புரிந்து கொண்ட நகுலன் “மன்னா.. ஒரு காட்டாற்று வெள்ளம் வந்து கோண்டிருக்கிறது. உடனே தேரை விட்டு இறங்கி மரத்தில் நாம் ஏறிக் கொள்வோம்” என்றான்.
விராட மன்னன் “என் கண்ணுக்கு அப்படி எதுவும் தெரியவில்லையே” என்றான். இருந்தாலும் நகுலனிடம் நன்மதிப்பு கொண்ட மன்னன் மரத்தில் ஏறினார். நகுலன், குதிரைகளை அவிழ்த்துவிட்டுத் தானும் ஏறிக்கொண்டார். திடீர் எனக் காட்டாற்றுப் பெரு வெள்ளம் ஹோவென்ற இரைச்சலுடன் மூன்று ஆள் உயரத்துக்கு அடித்துக்கொண்டு வந்தது. குதிரைகள் நீந்திச் சென்றன.
ரதம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சுக்கு நூறாக உடைந்தது. வெள்ளம் வடிந்ததும் இருவரும் கீழே இறங்கினர். நகுலனிடம் மன்னன்
“இதை எப்படி முன்னமே அறிந்தீர்கள்” என்று கேட்டார். குதிரைகள் சொல்லின என்றார் நகுலன்.
சிறிது நேரத்தில் குதிரைகள் திரும்பிவர அவை மீது ஏறி அரண்மனை திரும்பினர். விராட மன்னன் அன்று முதல் நகுலனிடம் பெரு மதிப்புக் கொண்டு குதிரை லாயங்கள் பராமரிப்புக்கு நகுலனிடம் பெரும் பொருள் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT