Published : 20 May 2016 02:08 PM
Last Updated : 20 May 2016 02:08 PM

கலியுக வரதன் கருணையில் முதல்வன்

மே 20: நரசிம்ம ஜெயந்தி

சைவர் உள்பட ஆறு சமயத்தவரும் விரும்பும் அவதாரம் நரசிம்மம். எல்லாரும் போற்றித் துதிக்கும் நரசிம்மருக்கு நாடு முழுவதும் ஆலயங்கள் அமைந்துள்ளன. இதில் தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூர் பல்வேறு சிறப்புகள் கொண்ட முதன்மையான நரசிம்மர் ஷேத்திரமாக விளங்குகிறது.

புராணப் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் ஒருங்கே கொண்ட இவ்வாலயம் முர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய சிறப்பம்சங்களையும் கொண்டது. இத்தலத்தின் நாயகனான நரசிங்கப் பெருமாளின் சொரூபத்தை ‘விசித்திர வடிவம்’ என்று கூறுகிறார்கள்.

16 கரங்களுடன் கிருதயுக அவதாரம்

இங்கு மேற்கு நோக்கிய மிகச் சிறிய கருவறையில் முலவர் நரசிங்கப் பெருமாள் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள .இந்த பெருமாள் 16 திருக்கரங்களுடன் கிருதயுக அவதார சொரூபத்தில் சேவை சாதிக்கிறார்.

தன்னைத் தாக்க வந்த ஹிரண்யனைப் பிடித்துத் தன் இடது மடியில் கிடத்தி வதம் செய்கிறார். தன் பிடியிலிருந்து ஹிரண்யன் எழ முடியாதபடி அவன் மகுடத்தை இடக்கரம் ஒன்றால் அழுத்திக்கொண்டு வலக்கரம் ஒன்றால் இரண்டு கால்களையும் பற்றியபடி உள்ளார். நன்கு அகப்பட்டுக்கொண்ட அசுரன் பெருமாளை முறைத்துப் பார்க்க, நரசிங்கப்பெருமாளின் உக்கிரப்பார்வை (அதோ முகம்) அவனை வதைக்கிறது. பெருமாளின் இரு கரங்கள் ஹிரண்யன் வயிற்றைக் கிழிக்கின்றன. இரு கரங்கள் குடலை உருவுகின்றன. உருவிய குடலை இரு கரங்கள் கீழே விழுந்துவிடாதபடி மேலே தூக்கிப் பிடித்திருக்கின்றன.

துஷ்டர்களுக்கு எச்சரிக்கை

தன் பக்தர்களை யார் துன்புறுத்தி னாலும் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன் என்று துஷ்டர்களை எச்சரிப்பதுபோல் உள்ளது நரசிம்மரின் இந்தச்செயல். பகவானாக, போர்வீரனாக, மகாவிஷ்ணு இவ்வாறு இறங்கி வந்திருப்பது பக்தனைக் காப்பதற்கு மட்டுமே. வலக்கரம் ஒன்றில் சக்கரம் ஏந்தி அதற்கிணையான இடக்கரத்தில் சங்கு தாங்கிப் பெருமாளாகவும் மற்றொரு வலக்கரத்தில் வாள், அதற்கிணையான இடக்கரத்தில் கேடயம் கொண்டு போர்வீரனாகவும் இன்னொரு வலக்கரத்தில் அம்பு அதற்கிணையான இடக்கரத்தில் வில் எனப் பலவித ஆயுதங்களை தாங்கி, விரோதியை அழிக்கத் தயார் நிலையில் வீற்றிருக்கிறார்.

சரணடைந்தோருக்கு அடைக்கலம்

இவ்வளவு ஆவேசமான மனநிலையிலும் சூழ்நிலையிலும் தன்னைச் சரணடைந்தால் காப்பேன் என்று பக்தர்களுக்கு சரணாகதி தத்துவத்தை மெய்ப்பிக்கிறார். எம்பெருமானின் இடதுகரம் ஒன்று பக்தர்களை வா என்றழைக்கும் பாவத்துடன் அமைந்துள்ளது.. தலையில் கிரீடத்துடனும் தலைக்குமேல் வெண்கொற்றக் குடையுடனும் சிங்கப் பெருமாள் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

தத்ரூபத் தோற்றம்

சிங்கப் பெருமாளின் ஒட்டிய வயிறும் விசாலமான மார்பும் கொண்ட மனித உடலும் வரிவரியாகத் தொங்கும் பிடரி மயிறும் நேர்த்தியாக வாரிவிடப்பட்டது போல் தொங்கும் அழகுடன் அமைந்துள்ளது. வாள் போன்ற கூரான சிவந்த பெருநாக்கு, அழகான, கூர்மையான கண்கள், கம்பீரமான சிங்க முகம், கேரள பாணியில் அமைந்த குழந்தை போன்ற கன்னங்கள் ஆகியவை தத்ரூபமாக அமைந்து தரிசிப்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.

அடியார்களுக்கு அச்சமில்லை

இந்த ஷேத்திரத்தில் உக்கிர நரசிம்மராக எழுந்தருள்வது துஷ்டர்களுக்கு அச்சம் ஏற்படுத்தவும் அதேசமயம் அடியார்களுக்கு அச்சம் நீக்கி அபயம் தருவதற்கும்தான். .நரசிம்மருக்கு பக்த வத்ஸலன் என்ற திருநாமமும் உண்டு. ‘அகல கில்லேன் இறையும்’ என்று பெரியபிராட்டியார் அனவரதமும் திருமார்பில் எழுந்தருளியுள்ளார். அதனால் பக்தர்கள் அச்சமின்றி பெருமாளை அணுகலாம்.

பிரார்த்தனை செய்தவுடன் அருள்வதில் ஹரிக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை.நாளை என்பதில்லை நரஸிம்ஹனிடம் என்பது பழமொழி. பக்தர்களுக்கு 16 வகை செல்வங்களையும் தந்து பெருவாழ்வு வாழ வைப்பதற்கே 16 திருக்கரங்களுடன் இத்தலத்தில் சிங்கப்பெருமாள் எழுந்தருளியுள்ளார்

சுலப முக்தி

பிரகலாதனை மகனாகப் பெற்றதாலேயே நரசிம்மன், ஹிரண்ய னுக்கும் அருள்புரியவே செய்தான். ஒருவன் முக்தி பெற்றதால் அவனது 21 தலைமுறை முன்னோர்கள் முக்தி பெறுகிறார்கள் என்பது தத்துவமாகும்.

ஷேத்திர வழிபாடு

காசியப மஹரிஷி, வருண பகவான், சுகோஷன முனிவர் முதலானோருக்கு இத்திருத்தலத்தில் மகாவிஷ்ணு, தேவி, பூதேவி சமேதராக 16 திருக்கரங்களுடன் காட்சி கொடுத்தாராம். பின்னர் காட்சியளித்த இந்தப் பூமியிலேயே அர்ச்சாவதாரத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டார் என்கிறது தலபுராணம்.

சிறப்புமிக்க இவ்வாலயத்தில்19.5.2016 அன்று 4வது வருஷாபிஷேகம் நடக்கிறது. 20.5.2016 நரசிம்ம ஜெயந்தி. அன்றைய தினம் 16 வகை முலிகைகளால் நரசிங்கப் பெருமாளுக்கு மூலமந்திர ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து விஷ்ணு சூக்த ஹோமம், மஹாலஷ்மி சூக்த ஹோமம், புருஷ சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம் ஆகியன நடக்கின்றன. மாலை 4.30 மணிக்கு பால், இளநீர் உட்பட பன்னிரெண்டு வகையான திரவியப் பொடிகளால் விசேஷ அபிஷேகமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆராதனையும் தீர்த்த வலமும் நடைபெறுகிறது.

செல்லும் வழி

தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையில் தென்காசியில் இருந்து கிழக்காக 10 கிலோமீட்டர் தூரத்திலும் திருநெல்வேலியில் இருந்து மேற்காக 44 கிலோமீட்டர் தூரத்திலும் பாவூர்சத்திரம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் கீழப்பாவூர் அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x