Last Updated : 20 May, 2016 02:13 PM

 

Published : 20 May 2016 02:13 PM
Last Updated : 20 May 2016 02:13 PM

ஓஷோ சொன்ன கதை: லாசரஸ் இன்னும் சிரிக்கிறான்

ஒரு நகரத்தின் பெரும் பணக்காரன் இறந்த அதே நாளில் அதே நகரத்தைச் சேர்ந்த யாசகனும் இறந்து போனான். அந்த யாசகனின் பெயர் லாசரஸ். பணக்காரன் நேரடியாக நரகத்துக்குச் சென்றான். லாசரஸோ சொர்க்கத்திற்குப் போனான். அந்தப் பணக்காரன் உயரத்தில் லாசரஸ் இருப்பதைப் பார்த்து கடுப்படைந்தான். லாசரஸோ கடவுளின் அருகில் அமர்ந்திருந்தான். உயரத்தில் வீற்றிருந்த கடவுளைப் பார்த்து, "தேவனே, ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. நான் அங்கே இருக்க வேண்டும். லாசரஸ்தான் இங்கே இருக்க வேண்டும்" என்று கூவினான்.

தேவனோ சிரித்தபடி, "யார் பூமியில் கடைக்கோடியில் இருந்தாரோ அவர் இங்கே முதலிடத்தில் இருப்பார். நீயோ பூமியில் எல்லாவற்றையும் முதன்மையாக இருந்து அனுபவித்துவிட்டாய். லாசரஸும் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே" என்றார்.

அந்தப் பணக்காரனால் நரகத்தின் வெம்மையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நரகத்தில் யாரும் குளிர்சாதன வசதியை இதுவரை செய்யவும் இல்லை. அவனுக்குத் தாகமாக இருந்தது. "தேவனே, கொஞ்சம் தண்ணீரையாவது லாசரஸிடம் இங்கே கொண்டுவரச் சொல்லி அனுப்புங்கள். நான் தாகித்திருக்கிறேன்" . கடவுள் பதிலளித்தார்.

"லாசரஸ் பல முறைகள் தாகித்திருந்தான். உனது வாசலுக்கு அருகேயே பசியால் இறந்து போகும் நிலையில் இருந்திருக்கிறான். உன் வீட்டிலோ விருந்துகள் நடந்தபடி இருக்கும். ஆனால் ஒருநாள்கூட அவனுக்கு நீ உணவளித்ததில்லை.

அவன் தொடர்ந்து துரத்தப்பட்டிருக்கிறான். ஏனெனில் உன் வீட்டுக்கு வரும் விருந்தினர்களோ அரசியல்வாதிகளாகவும், சக்திவாய்ந்தவர்களாகவும், சீமான்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தனர். அவர்களால் ஒரு யாசகனின் இருப்பைச் சகித்துக்கொள்ள முடியாதென்பதால் அவன் விரட்டப்பட்டான். அவனை ஒருநாள் கூட இரக்கத்துடன் நீ பார்த்ததேயில்லை. அதனால் உன் கோரிக்கை நிறைவேறாது " என்றார் கடவுள். தேவனின் அருகில் அமர்ந்திருந்த லாசரஸ் விழுந்து விழுந்து சிரித்தான்.

லாசரஸ் ஏன் சிரித்தான்? ஒரு யாசகனாக, சொர்க்கத்துக்குள் நுழைய முடியும் என்ற சாத்தியத்தை அவன், தனது வாழ்நாளில் அறிந்ததேயில்லை. அவனுக்கு சொர்க்கத்தில் கிடைத்த மரியாதையைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. ஒரு பணக்காரன் ஏன் நரகத்துக்குப் போகவேண்டும்? என்ற கேள்வியும் அவனுக்கு இருந்தது. லாசரஸ் இன்னும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறான். நீங்கள் இறக்கும்போதும் அவன் சிரிப்பான்: நீங்கள் ஒரு பிரமுகராக இருந்தாலும் சிரிப்பான். ஏனெனில் நீங்கள் நரகத்துக்குத் தூக்கியெறியப்படுவீர்கள்.

இந்த உலகில் மதிக்கப்படுபவை அனைத்தும் அகந்தையுடன் தொடர்பு கொண்டது. மேலுலகிலோ, எந்த மதிப்பும் அகந்தையின்மையுடனேயே தொடர்பு கொண்டிருக்கிறது. அதனால்தான் புத்தர் ‘அநத்தா’வை வலியுறுத்துகிறார். ‘நானற்ற’ தன்மை அது.

‘நான் ஒரு ஆன்மா’ என்றுகூட கருதவேண்டியதில்லை. ஏனெனில் அதிலும் கொஞ்சூண்டு அகந்தை உள்ளது. நான் என்பதே மிகச் சிக்கலானது. அது உங்களை ஏமாற்றக் கூடியது. அது பல உயிர்களை ஏற்கனவே ஏமாற்றியிருக்கிறது. ‘நான் இல்லை’ என்று சொல்லிப் பாருங்கள். அந்த காலியான தன்மையில் இருக்கப் பாருங்கள். சுயத்திலிருந்து காலியாகுங்கள். ஒருவர் தனது சுயத்திலிருந்து விடுபட்டாக வேண்டும். சுயம் தூக்கியெறியப்பட்டு விட்டால், எதற்கும் பற்றாக்குறை இல்லை. நீங்கள் நிறையவும் மலரவும் தொடங்குவீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x