Published : 21 Apr 2016 11:50 AM
Last Updated : 21 Apr 2016 11:50 AM
வேதத்தில், உலகத்தின் சிருஷ்டியானது வர்ணிக்கப்படுகிறது. பகவானுடைய நாபிக் கமலத்தில் பிரம்மா உண்டானார்.`புஷ்கர பர்ணே ஸமபவத்` என்று (புஷ்கரபர்ணம் = தாமரை இதழ், ஸமபவத் = உண்டானார்) முதல் சிருஷ்டியாகத் தாமரை மலர் சொல்லப்படுகிறது. அந்தத் தாமரை மலரிலே அமர்ந்துதான் நான்முகன், படைப்புத் தொழிலை தொடங்கினார். அவ்வாறு முதன் முதலில் தோன்றிய தாமரை மலரின் பெயராலேயே `புஷ்கரம்` என்னும் தலம் வடநாட்டிலே இன்றும் போற்றப்படுகின்றது.
ஆக உலகின் ஆதியான பகவானுக்கு அடுத்த வரிசையில் வருவது மலர்கள் எனலாம். இந்த மலர்களின் மணம் எதனால் மேன்மை அடைகிறது என்பதை நம்மாழ்வார் அழகாகத் தன்னுடைய பாசுரத்திலே விளக்குகிறார்.
தேவும் எப்பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கல்லால்
பூவும் பூசனையும் தகுமே.
பகவான் ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகின் சகல ஜீவராசிகளைப் படைக்க வேண்டி, தாமரை மலரிலே பிரம்மாவைப் படைத்தான். அவ்வாறு பெருமை வாய்ந்த தேவனான, பகவானுக்கே மலரின் மணமும், அத்தகைய மலரின் மூலமாகச் செய்யப்படும் பூசையும் தகும் என்பதே.
பகவானுடைய கல்யாண குணங்களின் அனுபவத்திலும், வடிவழகிலும், அருளிலும் ஆனந்தம் அடைந்த அடியார்களைக் காட்டிலும், மலர் வனம் வைத்து `புஷ்ப கைங்கர்யம்’ என்னும் சேவையைச் செய்த அடியவர்கள் அநேகம். பெரியோர்கள் பகவானுக்குப் பூந்தோட்டம் செய்து, புஷ்ப கைங்கரியம் செய்வதை உயர்ந்த தொண்டு என்பதால், பல கோயில்களுக்கு நந்தவனம் என்னும் பூமியை தானமாகக் கொடுத்துள்ளனர்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
வைணவ ஆசார்யர்களின் திருக்கச்சி நம்பி என்பவர் திருமழிசை என்னும் தலத்திலிருந்து திருக்கச்சி என்னும் காஞ்சி மாநகரத்திற்கு புஷ்பங்களைக் கொணர்ந்து, வரதராஜ பெருமாளுக்குச் சமர்ப்பித்து அழகு பார்த்தவர்.
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான கோதை நாச்சியாரின் தகப்பனார் பெரியாழ்வார் பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்து, ஸ்ரீரங்கநாதனையே மாப்பிள்ளையாகப் பெற்றுவிட்டார். மேலும் பெரியாழ்வார் என்றும், பகவானுக்கே மாமனாராகவும் ஆனது மலர் செய்த மகிமைதான்.
மேலும் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் அனைவரும் “நாடாத மலர் நாடி” என்றும், “தூமநல்விரை மலர்கள்” என்றும், “எண்டிசையும் உள்ள பூக்கொண்டு” என்றும், “இனமலர் - கந்தமலர்” என்றெல்லாம் புஷ்பார்ச்சனையைப் புகழ்கிறார்கள். கீதாச்சார்யனான பார்த்தசாரதியும் கீதையிலே “பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி” (எவன் ஒருவன் துளசி இலையோ, புஷ்பமோ, கனியோ, துளி நீரோ கொண்டு என்னை பக்தியுடன் பூஜிக்கிறானோ அதனை விருப்பத்துடன் ஏற்கிறேன்) என்கிறான்.
அனந்தாழ்வான் என்னும் அடியவர், திருமலையிலே திருவேங்கடமுடையானுக்குக் காடு திருத்தி பூங்காடு புகுத்தி சேவை செய்ததால் திருமலைக்கு “புஷ்ப மண்டபம்” என்னும் பெயர் வந்தது. பாமாலை செய்த தொண்டரடிப்பொடியாழ்வார் ஸ்ரீரங்கனை ஆட்கொண்டது பூமாலையினாலேதான். இவை எல்லாம் புஷ்பக் கைங்கரியத்தை விளக்கும் சில உதாரணங்களே.
புஷ்பங்கள் மூன்று வகைப்படலாம். மானஸ புஷ்பம், மந்த்ர புஷ்பம், தந்த்ர புஷ்பம்.
மானஸ புஷ்பம்
இது எட்டு வகையானது. அகிம்சை, புலனடக்கம், இரக்கம், பொறுமை, ஞானம், தவம், தியாகம், சத்யம். மானஸ புஷ்பம் என்றால் “இதயத் தாமரை” என்பதும் பொருள். இதயத்தைக் குறித்து விவரிக்கும் பொழுது “பத்மகோச ப்ரதீகாசம் ச அதோமுகம்” என்று கவிழ்ந்த தாமரை மொட்டைப் போன்றது இதயம் என்று சாத்திரங்களும், வேதமும் சொல்கின்றன.
மந்திர புஷ்பம்
வேத மந்திரங்களைக் கொண்டும், புராண இதிகாச சுலோகங்களைக் கொண்டும், ஆழ்வார்களின், ஆசார்யர்களின் மங்களாசாசனப் பாசுரங்களைக் கொண்டும் மலர்களைத் தூவி பகவானை துதித்து பூசனை செய்வது மந்த்ரபுஷ்பம்.
தந்திரபுஷ்பம்
பகவானுக்காக ஒரு நந்தவனம் அமைத்து, பெரியாழ்வார் போன்று “செண்பகம், மல்லிகை, பச்சை, தமனகம், பாதிரி, செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை போன்ற புஷ்பங்களை வளர்த்து பகவானுக்குச் செய்யும் கைங்கரியமே தந்திரபுஷ்பம் எனலாம்.
பகவானுக்குப் பூ சேவை செய்வது பலவகையாகச் சொல்லப்படுகிறது. அர்ச்சனை, பூச்சொரிதல், பூவங்கி, பூமாலை, பூ விதானம் (பூபந்தல்) முதலியவைகள் ஆகும். மகாபாரதத்தில் புஷ்பத்தின் பெருமை அனுசாஸன பர்வத்தில் சுக்ராசாரியார் பலி சக்ரவர்த்திக்கு உபதேசித்ததும், ஸ்வயம்புவ மநு ஸுவர்ணருக்கு எடுத்துச் சொன்னதும் விவரிக்கப்படுகின்றது.
வைணவ ஆசார்யர், ஸ்வாமி வேதாந்த தேசிகர் பாதுகா ஸஹஸ்ரம் என்னும் நூலில் பெருமாளுக்கும், பாதுகைக்கும் புஷ்பார்ச்சனை எவர் செய்கிறார்களோ, அவர்கள் தர்ம, அர்த்த, காம்ய, மோஷ என்னும் நான்கு வித புருஷார்த்தங்களை, மனிதன் அடைய வேண்டிய பலனை அடைகிறார்கள் என்கிறார்.
சைவ சமயக் குரவரான ஞான சம்பந்தரும் தமது திருவாடனை (திருவானைக்கா) தேவாரம் பதிகத்தில் “கடவுளுக்குச் செய்யும் பூசைகளில் மலர்ப் பூசையே மிகவும் சிறந்தது” என்கிறார்.
மலரின் மணம் நாம் அதைத் தெரிந்து உணர்ந்து பறித்து பகவானுக்கு அர்ப்பணிப்பதே. இதனை அறிந்து செய்தால் நம்முடைய வாழ்விலும் மலரைப் போன்ற மணம் வீசுவது திண்ணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT