Published : 12 Jun 2014 03:47 PM
Last Updated : 12 Jun 2014 03:47 PM
இவ்வுலக வாழ்க்கையைச் சிறப்பாக சீரமைத்துக் கொள்வதற்கு இரண்டுவிதமான வாழ்வாதாரங்கள் மனிதனுக்குத் தேவைப்படுகின்றன. ஒன்று தனிப்பட்ட வாழ்க்கையையையும் சமூக வாழ்க்கையையும் நடத்திச் செல்வதற்கும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவசியமான எண்ணற்ற சாதனங்கள். மற்றொன்று சமுதாயத்திலும் அதன் பண்பாட்டிலும் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காகத் தனிப்பட்ட மற்றும் கூட்டுவாழ்க்கை பற்றிய அறிவு.
மனிதனுடைய ஆன்மிகத் தேவைகளையும் சமுதாயப் பண்பாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக மனித இனத்தினரிடையே தன் தூதர்களை(நபிமார்களை) தோற்றுவித்து மனிதனை நேர்வழிக்கு இட்டுச் செல்லும் வாழ்க்கைத் திட்டங்களையும் அருளினான். இந்த வாழ்க்கைத் திட்டம்தான் இஸ்லாம்.
இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும், அல்லாஹ்வுக்கு அடிபணியவும், அவனுடைய பாதையில் வழிநடக்கவும் மனித சமுதாயத்தை அழைத்தார்கள்.
இஸ்லாம் என்பது ஒரு அரபிச் சொல். அதற்கு அடிபணிதல், சரணடைதல், கீழ்படிதல் என்றெல்லாம் பொருளுண்டு. இஸ்லாம் என்பதற்கு மற்றொரு பொருள் ‘சமாதானம்’ என்பதாகும். ஒருவர் இறைவனுக்கு அடிபணிவ தாலும் கட்டுப்பட்டு நடப்பதாலும் மட்டுமே அக -புற அமைதி அடிபணியும். இத்தகைய அடிபணியும் தன்மை வாய்ந்த வாழ்க்கை யானது தனிநபர் உள்ளத்தில் சாந்தியையும் சமுதாயத்தில் உண்மையான அமைதியையும் நிலைநாட்டுகிறது.
“நன்னம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் திருநாமத்தைச் செவியுற்றதும் அவர்களுடைய இதயங்கள் அமைதிபெறுகின்றன.”(குர் ஆன்: 13: 28)
இவ்வாறு இஸ்லாம் மார்க்கத்தில் இறைவனால் அனுப்பப்பட்ட அத்தனை வேதநூல்களும் மனித சமுதாயத்திற்குச் சமாதானத்தையும் நல்லுபதேசத்தையும் வழங்கியுள்ளன. அதனைக் கையிலெடுத்து ஒவ்வொரு மனிதனும் வழிநடத்துவது சிறந்த சமுதாயத்தை உருவாக்கும்.
இறைவன் ஒருவன். முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர். மறுவுலக வாழ்க்கை உண்டு ஆகிய நம்பிக்கைகளே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும். அதனுடைய அறிவுரைகள் அனைத்தும் மேற்சொன்ன மூன்று கொள்கைகளின் உட்பிரிவுகளே! அவையனைத்தும் பகுத்தறிவுக்கு பொருத்தமானவையாக இருப்பதோடு, தெளிவானவையாகவும் நேர்மையானவையாகவும் இருக்கின்றன. இதில் புரோகிதர்களின் ஆட்சியோ சிந்தனைக்கு எட்டாத கோட்பாடுகளோ சிக்கலான சடங்குகளோ இல்லை. ஒவ்வொருவரும் தாமாகவே இறைவனின் வேதத்தை அணுகி, அதன் சட்டங்களை தம் வாழ்க்கையில் மேற்கொள்ளும் முறையில் அது அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT