Published : 18 Feb 2016 12:02 PM
Last Updated : 18 Feb 2016 12:02 PM
மணக்கால் நம்பி திருநட்சத்திரம்: பிப்.22
வைணவ குரு பரம்பரையில் நாதமுனிகளின் குமாரரான ஈஸ்வரமுனிகளின் குமாரர் ஆளவந்தாரை வைணவ சீடராக்கிய பெருமை மணக்கால் நம்பியையே சாரும். நாதமுனிகளின் சீடரான இவர் நாதமுனிகளின் பேரரான ஆளவந்தாரை இறைவன் கைங்கர்யத்தில் ஈடுபட வைக்க பெருமுயற்சி எடுத்தார்.
அப்போது ஆளவந்தார் அரசனாக இருந்தபடியால் அவரைச் சந்திக்க முடியவில்லை. எனினும் ஆளவந்தாரின் அந்தரங்க சமையல்காரர் மூலம் தூதுவளைக் கீரையைச் சில நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தார். அக்கீரையை ஆளவந்தாருக்கு மிகவும் பிடித்துப்போனதையும் அறிந்தார். பின்னர் சில நாட்கள் கீரையைக் கொடுக்காமல் இருந்தார். இதனால் உணவில் தூதுவளைக் கீரை சில நாட்கள் இல்லாமல்போனது. சமையல்காரரைக் காரணம் கேட்டார். அவரும் யரோ ஓருவர் சில நாட்கள் கொண்டுவந்து கொடுத்தார், அவரைச் சில நாட்களாகக் காணவில்லை என்று கூற, ஆளவந்தாரும் அவர் மறுபடி வந்தால் தம்மிடம் அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.
தூது போன தூதுவளை
இதைத் தெரிந்துகொண்ட மணக்கால் நம்பி மீண்டும் ஒரு நாள் தூதுவளைக் கீரையுடன் சமையல்காரரைச் சந்திக்க, அவரும் விவரத்தைக் கூறினார். பின்னர் அவருடன் சென்று ஆளவந்தாரைக் கண்டு மகிழ்ந்தார். அவரைத் தனியாக அடிக்கடி சந்திக்க அனுமதி கொடுத்தால் பல நல்ல விஷயங்களையும் அரசு பதவியை விட ஆனந்தம் அளிக்கும் விஷயங்களையும் தெரிவிப்பதாகக் கூறினார்.
அரங்கனின் அடிமை
அதன்படி இருவரின் சந்திப்புகள் பலமுறை நிகழ்ந்தன. அந்தச் சந்திப்புகளில் ஆளவந்தாருக்கு ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் ரகசிய அர்த்தத்தையும் உபதேசித்து திருவரங்கத்துக்கு அழைத்துச் சென்று அரங்கனை தரிசனம் செய்துவைத்தார். மேலும் அவரிடம் நம்மாழ்வார் மூலம் கிடைத்த ராமானுஜர் திருமேனியையும் தந்திட, ஆளவந்தாரும் மனம் மாறி அரங்கனுக்கு அடிமையாகி வைணவ ஆசார்யாராக விளங்கினார்.
உய்யக்கொண்டாரது சிறந்த சீடர் மணக்கால் நம்பி.இவருக்கு ராமமிடஸ்ரர் என்ற பெயரும் உண்டு. இவர் உய்யக் கொண்டார் அவதரித்து 43 ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி.929-ல் லால்குடி அருகே இப்போழுது மணற்கால் என்று கூறப்படும் கிராமத்தில் அந்தணர் குலத்தில் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் அவதரித்தார். உய்யக்கொண்டாருக்குச் சீடர்கள் ஐந்து பேர் உண்டு. அவர்களில் ஒருவரே மணற்கால் நம்பி. இவரது இயற்பெயர் ராமன்.
ஆச்சார்ய பக்திக்கு உதாரணம்
ஒரு நாள் உய்யக்கொண்டாரது சிறுமிகள் இருவரையும் இவர் நீராட்டி அழைத்து வந்தார். வரும் வழியில் வாய்க்கால் சேறாக இருப்பதைக் கண்டார். அவர்கள் திகைத்து நிற்க, தாம் படியாய்க் கிடந்து அவர்களைத் தன் முதுகிலே கால் வைத்துத் தாண்டுமாறு செய்தார். உய்யக்கொண்டார் தம் புதல்விகளின் கால் சுவடுகள் (மணற்கால்) தன் சீடனின் முதுகில் பொலிய இருப்பதைப் பார்த்தார். அன்று முதல் அவரை மணற்கால் நம்பி என்று அழைத்தார்.
ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியார், திருவரங்கப் பெருமாளாரையைர், தெய்வயத்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சிறுபுள்ளூடையார் பிள்ளை, திருமாலிருஞ்சோலை தாசர், வங்கிபுரத்தாச்சி முதலியோர் இவரது சீடர்கள் மணக்கால் நம்பி 105 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது இவரையும் எம்பெருமானார் சீடர் வடுக நம்பியையும் ஆச்சார்ய பக்திக்கு உதாரணமாக எடுத்துச் சொல்வார்கள். இவரின் அவதார நன்னாள் மாசி மாதம், மக நட்சத்திரம். இந்த நன்நாள், இந்த ஆண்டில் கும்பகோணம் மகாமத்தன்று, அதாவது 22.02.2016 அன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT