Published : 04 Feb 2016 11:27 AM
Last Updated : 04 Feb 2016 11:27 AM
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். கோயில் இருக்கும் இடத்தில் வழிபாடுகள் நடக்கும். உரிய காலங்களில் உற்சவங்கள் நடக்கும். திருவிழாக்கள் நடக்கும். மக்கள் கூட்டத்தால் ஆலயத்தில் பெருகும் அருள், ஆலயத்தைச் சுற்றியிருக்கும் ஊரெங்கும் பரவும். மக்களின் மனங்களில் மகிழ்ச்சி நிலைக்கும். இதுதான் கோயில்களின் சிறப்பு. ஆனால் கோயில்களுக்கு சிறப்பு செய்பவை அந்தக் கோயில்களில் நடக்கும் பூஜைகளும், உற்சவங்களும்தான்.
கோயில்களில் உற்சவங்களை உரிய காலத்தில் நடத்துவதை ஆகமங்கள் வலியுறுத்துகின்றன. உரிய காலங்களில் உற்சவங்கள் நடத்தாவிட்டால் மன்னனுக்கும் குடிமக்களுக்கும் ஆபத்துகள் விளையும் என ஞானேத்திரம் எனும் உபாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீமைகளுக்கு மாறாக நன்மைகளை விருத்தியடையவைப்பதே உற்சவங்களின் சிறப்பாகக் கருதப்படுகிறது. இதனால்தான் கோயில் உற்சவங்கள் காலம்காலமாகப் பெரிதும் போற்றப்படுகின்றன.
ஆறு வகை உற்சவங்கள்
பொதுவாக உற்சவங்களை ஆறு வகையாகப் பிரிக்கின்றனர். அவை, பைத்ருகம் (பன்னிரண்டு நாட்கள்), சவுக்யம் (ஒன்பது நாள்கள்), ஸ்ரீகரம் (ஏழு நாள்கள்), பார்த்திபம் (ஐந்து நாள்கள்), சாத்விகம் (மூன்று நாள்கள்), சைவம் (ஒரு நாள்). பிரமோற்சவமும் உற்சவத்தில் சேர்த்திதான். ஒன்பது நாள்களுக்கு மேல் நடந்தால் அது பிரம்மோற்சவம்.
மாத உற்சவங்கள்
மாதங்கள்தோறும் உற்சவங்களை வகைப்படுத்தியுள்ளனர். சித்திரையில் சைத்ரோத்ஸவம், வைகாசியில் வசந்தோத்ஸவம், ஆனியில் ஆனித் திருமஞ்சனம், ஆடியில் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசியில் நவராத்ரி உற்சவம், ஐப்பசியில் சூரசம்ஹாரம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, மார்கழி மாணிக்கவாசகர் உற்சவம், தை மாதத்தில் புஷ்போத்ஸவம், மாசியில் மக உற்சவம் (பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம்), பங்குனியில் பங்குனி உத்தரம்.
உற்சவத்துக்குத் தொடக்கமாக விநாயகருக்கு விசேஷ அபிஷேகம் செய்து அப்பம், மோதகம் ஆகியவை நிவேதனம் செய்யப்படும். அதன்பிறகுதான் உற்சவம் தொடங்குவதற்கு அறிகுறியாக, கொடி ஏற்றுதல், காப்பு கட்டுதல் போன்றவை நடத்தப்படும்.
தவில் வாத்தியத்துக்குப் பூஜை
தவில் எனப்படும் தாள வாத்தியத்துக்குப் பூஜை செய்வார்கள். அசுர வாத்தியமான இதற்கு செய்யப்படும் பூஜையின் மூலமாக பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சப்தமாதாக்கள், சூரியன், சந்திரன் ஆகியோர் திருப்தி அடைவதாக ஐதீகம். சுவாமியை திருவீதி உலா வரும்போது, ராகம், தாளத்தை கலைஞர்கள வாசிப்பார்கள். உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் காலையும், இரவும், ஆகமங்களில் குறிப்பிட்டிருப்பது போல, பொறுத்தமான வாகனங்களில் சுவாமி அம்பாளுடன் பஞ்ச மூர்த்திகளின் ஊர்வலம் நடைபெற வேண்டும். அந்த நேரத்தில் சுவாமிக்கு முன்பாக, நாகஸ்வர இசை, நாட்டியம், கரகம் போன்ற கிராமிய நிகழ்ச்சிகளும், சுவாமிக்குப் பின்புறமாக வேத பாராயணமும் நடைபெறும். உற்சவத்தின் ஏழாம் நாள் அல்லது ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT