Published : 04 Feb 2016 12:23 PM
Last Updated : 04 Feb 2016 12:23 PM

கருடாழ்வார் : பெருமாளின் ஆதர்ச நண்பன்

பிப்.9 திருநாங்கூர் பதினொரு கருட சேவை

ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்திர ரத்தினத்தில் குறிப்பிட்டுள்ளபடி எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுக்கு, கருடன் வாகனம் மட்டுமல்ல கொடி, சகா, ஆசனம், மேல் கட்டி வஸ்திரம், விசிறி, அடிமை எனப் பலவிதமாகவும் இருப்பவர்

ஸ்ரீ கருட பகவான் ஆடி சுக்லபஞ்சமி நன்னாளில் வேதத்திலும் ஜோதிஷ சாஸ்திரங்களிலும் மிகவும் உயர்வாகச் சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இந்தத் திருநட்சத்திரத்தில்தான் கருடாம்சமான பெரியாழ்வாரும் அவதரித்தார்.

பகவான் ஸ்ரீ நரசிம்மரின் திருநட்சத்திரமும் இந்த சுவாதிதான். ஆழ்வார்கள் ஸ்ரீ கருடனை கொற்றப்புள், தெய்வப்புள், காய்சினப்புள், ஓடும்புள் என்று பல விதமாகப் போற்றித் தம் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்..

கருட பஞ்சமியில் திருமணம்

பராங்குசநாயகி ஆகிய நம்மாழ்வார் திருவிருத்தத்தில் எடுத்த எடுப்பிலேயே “புள்ளின் பின் போன தனி நெஞ்சமே” என்று குறிப்பிடுகிறார். பெருமாளுடன் கூடிய ஸ்ரீ கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டுத் துணியை அணிவித்து மல்லி, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை, சம்பக மலர்களால் அர்ச்சனை செய்தல் நலம் பயக்கும்..

கருட பஞ்சமி அன்று மணமான பெண்கள் கருடனைப் பூஜித்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆழ்ந்த அறிவு, பொறுமை, வீரம், சமயோசித சாமர்த்தியம் உள்ளவர்களாக விளங்குவார்கள்.

ஸ்ரீ கருடன் எப்பொழுதும் வைகுந்தத்தில் பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர். ராமபக்த அனுமானைத் திருவடி என்றும் ஸ்ரீ கருடனைப் பெரிய திருவடி என்றும் பக்தர்கள் பெருமையாகவும் உயர்வாகவும் கொண்டாடுகிறார்கள்.

பூமிப்பிராட்டியை மீட்ட விஷ்ணு

ஸ்ரீ கருடாழ்வாருக்கு மாலையில் பூஜை செய்வது மிகவும் சிறந்தது. பெண்களும் குங்குமத்தைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். முன்பு மகாபிரளயம் உண்டானபோது பூமிதேவி கடலில் மூழ்க, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து, ஹிரண்யாட்சனுடன் சண்டையிட்டு, அவனை வென்று பூமிப்பிராட்டியை மீட்டார். இனி எப்பொழுதும் இந்நிலை ஏற்படாது இருக்க பூமியிலேயே பகவான் தங்க நினைத்து கருடனை அனுப்பி கிரீடா பர்வதத்தைக் கொண்டுவரச் செய்து அதன் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலைகளுள் ஒன்றாகக் கூறப்படும் கருடாத்திரி என்ற பர்வதமே கருடாசலம் என்னும் மலையாகும். சிங்கவேள் குன்றமாகிய அகோபிலத்திற்கும் கருடாசலம் என்ற திருப்பெயரும் உண்டு.

எல்லா ஆலயங்களிலும் சம்ப்ரோக்ஷணம் (குடமுழுக்கு) திருவிழா நிகழும்போது விமானத்திற்கு மேலே கருட பகவான் வட்டமிடுவதைப் புனிதமாகக் கருதுவது ஐதீகம்.

சிறகுகளைவிடப் பருத்த உடல், வெண்மையான கழுத்துப் பகுதி, உருண்டையான கண்கள், நீண்ட மூக்குடன் கூடிய ஸ்ரீ கருடன் எடுத்து வந்த அமிர்த கலசத்தில் ஒட்டிக்கொண்டு வந்த தேவலோகப் புல்லே பூவுலகில் விழுந்து விச்வாமித்திரம் என்ற தர்ப்பம் ஆனது. விஷ ஜந்துக்கள் இல்லங்களுக்குள் வராமல் இருக்க கருடக் கிழங்கை வாசலில் கட்டும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது. ஸ்ரீ கருடரின் நிழல் விழும் இடங்களில் பயிர்கள் செழுமையாக விளையும் என்பது நம்பிக்கை.

பறவைகளின் அரசன் கருடன். பக்ஷிராஜன், சுபர்ணன், பன்னகாசனன், புஷ்பப்பிரியன், மங்களாலயன், கலுழன், ஸ்வர்ணன், புள்ளரசு, பெரிய திருவடி எனப் பல பட்டப் பெயர்கள் அவருக்கு உண்டு.

வேதமே உருவானவர் ஸ்ரீ கருடர். அவரது இறக்கைகள் மூன்று வேதங்களையும் குறிப்பன. கருடர் ஒளிமயமானவர். நாகத்தை ஆபரணமாகப் பூண்டவர். வைகுந்தத்தில் இவர் பகவானின் கண்ணாடியாக நிற்கிறார் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால்தான் விஷ்ணு ஆலயப் புறப்பாடு சமயத்தில் கண்ணாடி சேவை நடைபெறுகிறது.

கருடனைச் சேவித்தால் மனதில் ஜபிக்க வேண்டிய மந்திரம் ‘மங்களானி பவந்து’. கருடனின் குரல் கருட த்வனி, இசை நயமிக்கது. மங்களகரமானது. சாம வேதத்திற்கு ஒப்பானது. இந்த ராக ஆலாபனையைத் திருமாங்கல்ய தாரண சமயத்தில் செய்வது மிகவும் சிறந்தது.



கருடன் தந்த திருமண்

பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வைர முடியை விரோசனன் என்பவன் திருடி வெள்ளையம் என்ற தீவில் வைத்திருந்தான். கருடன் சென்று அந்த வைரமுடியை மீட்டுவரும்போது அங்கிருந்து தன்மேல் ஒட்டி வந்த மண்ணைத் திருநாராயணபுரத்தில் உதிர்த்தார். அதுதான் இன்று வைணவர்கள் நெற்றியிலும் உடம்பிலும் இட்டுக்கொள்ளும் திருமண் ஆனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x