Published : 31 Dec 2015 11:12 AM
Last Updated : 31 Dec 2015 11:12 AM
திருவாரூரில் பிறந்தால் முக்தி! சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி! காசியில் இறந்தால் முக்தி! ஆனால் ‘நினைத்ததுமே முக்தி’ என்ற மகிமை பெற்றது திருவண்ணாமலை. இவ்வளவு சிறப்புகள் கொண்ட இத்திருத்தலம் பாலயோகியாக இங்கு வந்து தவசிரேஷ்டராகி, மகாஞானியாக அருள்பாலித்த பகவான் ரமண மகரிஷிகள் வாழ்ந்து மறைந்த சிறப்பையும் பெற்றது!
‘ஆத்மா அழிவில்லாதது’ என்ற ஆத்ம சாட்சாத்காரத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து நம்மை வழிநடத்த அவர் வடிவெடுத்தார். பகவான் அருளிய உபதேச நூல்களில் எளிமையும், அரும்பொருளும் நிரம்பிய ‘அருணாசல அட்சர மணமாலை’ என்னும் நூற்றியெட்டுக் கண்ணிகள் கொண்ட துதிப்பாடல் மிகச்சிறப்பு பெற்றதாகும். மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய அன்பு, உடலுழைப்பு, பக்தி, ஞானம், மனிதநேயம் போன்ற நன்னெறிகளாய் வாழ்ந்து காட்டி, அவற்றைத் தன் வாக்காய், நல் உபதேசமாய் இத்துதிப்பாடலில் அழகாக எடுத்தியம்பியும் உள்ளார்.
“கீழ் மேல் எங்கும் கிளர் ஒளிமணி என்
கீழ்மையைப் பாழ்செய் அருணாசலா!” (அட்சர மணமாலை)
என் அறியாமை என்னும் இருளை உன் அருள் ஒளியால் அழித்து அருள வேண்டும் என்று பகவான் இறைவனை வேண்டுவது போல பகவானின் அன்பர்களும் பகவானை வேண்டுகிறார்கள்.
ஞானியின் லட்சணங்கள் யாவை?
தக்காருக்குத் தக்கபடி நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும் சமத்காரமாகவும் பரிவுடனும் ஆணித்தரமாகவும் பகவான் கூறும் உபதேசங்கள் அனைத்திலும் ஞான விசாரத்தின் உண்மை பொதிந்திருக்கும்.
ஒரு அன்பர் பகவானிடம், “சுவாமி! ஞானியை எப்படி அடையாளம் கண்டுகொள்வது? ஞானியின் லட்சணங்கள் யாவை?” என்று கேட்டார்.
அதற்கு பகவான்,“ ஒரு ஞானியை மற்றொரு ஞானிதான் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்களால் ஒருவரை ஞானி என்று புரிந்துகொள்வது கடினம். ஞானி அகத்தே, ‘தான் கர்த்தா அல்ல’ என்பதை அறிவான். மறைத்துக்கொண்டு அஞ்ஞானியைப் போல் நடந்துகொள்வான். சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவனாகத் தன்னைக் காட்டிக்கொண்டு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவோ அதிசயப்படும்படியாகவோ செய்ய அவன் விரும்புவதில்லை! எல்லாக் கர்மங்களிலும் தானே ஈடுபட்டுக்கொண்டு மற்றோரையும் ஈடுபடுத்த வேண்டும். இதுவே ஞானியின் லட்சணம்” என்றார்.
மற்றொரு அன்பர், “சுவாமி! என்னை ஒருவர் திட்டிக்கொண்டே இருக்கிறார். காரணமில்லாமல் அவர் அடிக்கடி திட்டுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கோபம் வருகிறது. என்ன செய்வது?” என்றார் வேதனையுடன். “நீயும் அவருடன் சேர்ந்துகொண்டு உன்னையே திட்டிக்கொள்” என்றார் ரமணர்.
“ உன்னைத் திட்டுபவன் உன் உடலைப் பார்த்துதானே திட்டுகிறான். கோப தாபங்களுக்கு இருப்பிடமான இந்த உடலைவிட நமக்குப் பெரிய விரோதி யார்? ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால், அவர் நம்மைத் தட்டி எழுப்புகிறார் என்றே அதற்குப் பொருள்! நம்மைத் திட்டுபவர் நமக்கு நண்பரே! அப்படி இல்லாது நம்மைப் புகழ்ந்து முகஸ்துதி செய்வோர் நடுவில் நாம் இருந்தால் ஏமாந்துதான் போவோம்.” என்றார். அகந்தை முடிச்சுகளில் ஒன்றான கோபத்தை வெல்ல பகவான் கூறிய எளிய உபதேசம் இது.
நீ வந்த வழியே போ
இப்படித்தான் ஒரு அன்பர், “சுவாமி! எனக்கு மோட்சம் வேண்டும். அதற்குப் பல வேதாந்தப் புத்தகங்களைப் படித்தும் பல பண்டிதர்களிடம் விளக்கும் கேட்டும் குழப்பம் தீரவில்லை. தாங்கள்தான் சரியான மார்க்கத்தைக் காட்டி அருள வேண்டும்.” என்று வேண்டினார்.
“நீ வந்த வழியே போ” என்றார் ரமணர்
நான் யார்? நான் என்ற எண்ணம் எங்கிருந்து உதிக்கிறது? என்று கவனித்து அவ்வழியே சென்றால் மோட்சம் கிட்டும். இதுவே அவர் காட்டிய எளிய மார்க்கம்.
ரமணரைப் பற்றிக் கேள்விப்பட்டு குஞ்சு சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலைக்கு வந்தார். ஆசிரமத்துக்கு வந்து அவரைப் பார்த்ததும் மெய்சிலிர்த்து நின்றார். விழுந்து வணங்கினார். ரமணரின் அருட்பார்வை அவர் மீது நிலைத்து நிற்க உள்ளே ஒரு அமைதியும் ஆனந்தமும் தோன்றுவதை அவர் உணர்ந்தார்.
அன்று ஆசிரமத்தில் யாரும் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் ரமணர், தானே கூழ் தயாரித்துத் தட்டில் விட்டு சூடாற்றினார். பின்பு அருகிலிருந்த கூடையைத் திறந்தார். உள்ளிருந்து நான்கு நாய்க்குட்டிகள் ஓடிவந்தன. பகவான் அருகிலிருந்த குஞ்சு சுவாமிகளிடம் நான்கையும் பிடிக்கச் சொன்னார்.
அடுத்து ஒவ்வொன்றாக விட்டுவிடு என்றார். மனதின் ஆசாபாசங்களை ஒவ்வொன்றாக விட்டுவிட வேண்டும் என்று குஞ்சு சுவாமிகள் புரிந்துகொண்டார். நாய்க்குட்டிகளில் ஒன்று சிறுநீர் கழித்தது. அதைத் துடைக்கச் சொன்னார் பகவான் ரமணர். மாசு இன்றி மனதைச் சுத்தமாகத் துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதாகத் தோன்றியது. இந்த மூன்று வாக்கியங்களையும் பகவான் அளித்த உபதேசமாகவே எடுத்துக்கொண்டார் குஞ்சு சுவாமிகள்.
“ எங்கே நினைப்பு தோன்றுகிறதோ அங்கே பார்! மனதை உள்முகப்படுத்தி, நீ யார் என்று விசாரி” என்ற தாரக மந்திரத்தை அன்பர்களுக்கு மீண்டும் மீண்டும் உபதேசம் செய்யும் பகவானது அருகிருந்து ஆன்மிக சாதனை செய்து உயர்ந்தவர் குஞ்சு சுவாமிகள்.
‘வேதாந்தத்தே வேரற விளங்கும் வேதப்பொருள் அருள் அருணாசலா’ என்று பகவானை வேண்டும் அன்பர்கள் வேண்டியபடி கிடைப்பதே பகவானின் அருள் உபதேசம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT