Published : 17 Apr 2014 10:56 AM
Last Updated : 17 Apr 2014 10:56 AM
உதய சூரியன் தன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் மேடையில் தோன்றினான். குதிரைகள் தம் முகங்களில் பவ்யத்தைக் காட்டியபடி இருந்தன. கம்பீரத்தையும் கடமையையும் முகத்தில் காட்டியபடி சூரியன் மேடையில் வலம் வந்தார்.
சூரியனாக வந்தவர் பிரத்யும்னா பார்த்தசாரதி. இது நடந்தது மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில். ஷண்மத தெய்வத் திரு நடனங்கள் என்பது அந்த நிகழ்ச்சி. இந்தியக் கலை நல்லுறவுத் துறையும், ஸ்ரீ அரியக்குடி மியூசிக் ஃபெளண்டேஷனும் இணைந்து ஹொரைஸான் என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த வகையில் இது நூறாவது நிகழ்ச்சியாகும்.
மார்ச் 30 அன்று நடந்த இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு இசை மற்றும் கலைக் கல்லூரி தூணை வேந்தர் கலைமாமணி வீணை ஈ. காயத்திரி தலைமை தாங்கினார். மத்திய அரசு நிறுவனமான இந்தியக் கலை நல்லுறவுத் துறை, தென்னகக் கலைகளுக்கு மேலும் நல்லாதரவு அளிக்க வேண்டும் எனத் தனது தலைமையுரையில் அவர் கேட்டுக்கொண்டார்.
நிவேதனம் நாட்டியப் பள்ளியின் நிறுவனர் நிவேதிதா பார்த்தசாரதி குரு பாகவதலு ஸ்ரீ சீதாராம ஷர்மாவிடம் நட்டுவாங்கம் பயின்றர். இவர் வைஜெயந்திமாலா பாலியுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை நிகழ்த்தியதுடன் முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முன்னிலையிலும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
ஸ்ரீ ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட ஷண்மதங்களை முக்கியக் கருத்தாகக் கொண்டது ஷண்மத தெய்வத் திரு நடனங்கள் நிகழ்ச்சி. இதில் ஆறு சமய தெய்வங்களான, செளரம் சூரியன், காணாபத்தியம் கணபதி, சாக்தம் சக்தி, வைஷ்ணவம்- திருமால், சைவம் - சிவன், கெளமாரம் முருகன் ஆகியோர் குறித்த பாடல்களுக்கு நிவேதிதா குழுவினர் அபிநயனம் பிடித்தனர்.
முதலில் கண் கண்ட தெய்வமான சூரியன் வழிபாடு, மல்லாரி, புஷ்பாஞ்சலி, சூரிய காயத்ரியுடன் தொடங்கியது. இளைஞர் பட்டாளமாக ஏழு நாட்டிய மணிகள் ஏழு குதிரைகளாக மல்லாரியுடன் ஜதி போட்டு வந்தார்கள். சூரியன் உட்பட அனைவரின் முகத்திலும் ஒரே வகைப் புன்னகை. மேடையே சூரிய ஒளியில் மின்னியது. சூரியனாக வந்த பிரத்யும்னா பார்த்தசாரதி கம்பீரமாக இருந்தார்.
மேடையில் விநாயகர் தை தை கணபதி என்று நர்த்தனம் ஆடி வந்த அழகைப் பார்த்த பக்தர்களின் கண்களில் நீர் நிறைந்தது. நாட்டியம் முடிந்து விநாயகர் உள்ளே சென்றபோது பார்வையாளர் பகுதியில் இருந்த குழந்தைகள் போகாதே என்று சத்தம் போட்டது நாட்டியத்தின் தத்ரூபத்திற்கு ஓர் உதாரணம். நர்த்தன விநாயகர் ஆடியபடி திரும்பிச் சென்றபோது தொங்கிய நீண்ட பின்னலால் விக்னேஷ்வரியாகக் காட்சியளித்தார் அந்தத் தொந்தியில்லாத கணபதி.
சக்திக்கான பாடலாக சுப்பிரமணிய பாரதியாரின் பாடலான ‘தகதகவென்று ஆடோமோ’ என்ற ரேவதி ராகப் பாடலுடன் ஆதி தாளத்தில் மேடையேறினார் நிவேதிதா. சக்தியாக வந்த அவர் கண்களில் தீப்பொறி பறக்கிறது. அம்மை என்று வருகிற இடத்தில் தாயின் கனிவு கொட்டுகிறது. தாய்மடி சேயாகக் குழந்தையைக் கொஞ்சும் இடத்தில், அக்காட்சியைக் கவிஞன் பாரதி இப்படித்தான் கற்பனை செய்திருப்பான் என்று எண்ணும் விதத்தில் அதனைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தினார் நிவேதிதா. சபாஷ். பாடலில் சிவன் பெயர் வரும் இடத்திலெல்லாம், தன் கணவன் என்பதால் சிவசக்தியின் முகத்தில் வெட்கப் புன்னகை தவழ்ந்தது. இந்நடனத்தில் பாரதியின் கவிச்சொல் அவரது நடனத்தில் பாவமாகப் பேசியது. அந்நேரத்தில் ரந்தினி அரவிந்த் குரலிசை மென்மையாகக் காதுகளுக்கு இனிமை சேர்த்தது.
வைணவத்தில் கிருஷ்ணரை, புரந்தரதாஸர் போல போற்றியவர்கள் யார் இருக்க முடியும்? புரந்தரதாஸரின் தா தக்க திமி என்ற தோடி ராக ரூபக தாள கீர்த்தனத்தில், அலங்கார பூதனாக ஆடி வருகிறார் கிருஷ்ணர். மெல்லிய சரீரம் கொண்டவராகவே புரந்ததாஸரை ஓவியங்களில் கண்டிருக்கிறோம். அவர் தன்னையே கிருஷ்ணராக பாவித்து ஆடிய நடனத்தில் கிருஷ்ணரும் கொழுகொழு என்று இல்லாமல் இயற்கையாகவே ஒல்லியாக இருந்தது கூடுதல் ஆனந்தம். கிருஷ்ணரை இப்படிக் காட்டியது புதுக் கோணம். கிருஷ்ணர் ஏகாந்தமாகவும் சாதுவாகவும் கோபிகைகள் இல்லாமல் வந்தாடியது புதுமையாக இருந்தது.
தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா என்ற பொன்னையாப் பிள்ளையின் ஷண்முகப் பிரியா ராகப் பாடலில் கனிவும் தமிழும் பொங்கி வழியும். இரண்டும் இணைந்து கேட்பவர்களிடம் பக்தியை ஊற்றெடுக்கச் செய்யும். வயலினும் மிருதங்கமும் அற்புதமாகக் கை கொடுக்கக் கண்ணப்ப நாயனார் கதையை அறியாதவர்கள்கூடப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நிவேதிதா பிடித்த அபிநயம் துல்லியமாக இருந்தது.
ஆதி சங்கரர் அமைத்த ஆறு சமயங்களுக்குப் பொதுவான மூர்த்தி கந்த பெருமான் என்று பின்னணி ஒலிக்க, அண்ணாமலை தாசர் இயற்றிய காவடிச் சிந்து, முருகனைப் போற்றிக் கூத்தாட வைத்தது.
பாரதி அனைத்து தெய்வங் களையும் ஒருங்கே அழைத்து நல்லனவற்றை வேண்டிய அகவல் பாடல் ஒலித்தபோது, நிவேதனம் நாட்டியப் பள்ளிக் குழுவினர் மேடையில் அனைத்து தெய்வங்களாகவும் ஆடினார்கள்.
நட்டுவாங்கம் நிவேதிதா பார்த்தசாரதி, பிரத்யும்னா பார்த்தசாரதி, கவிதா சம்பத் ஆகியோரின் தாளக்கட்டு, நிகழ்ச்சிக்கு பலம் சேர்த்தது. பின்பாட்டு ரந்தினி அரவிந்த், இனிமையாகப் பாடினார். தேவையான இடங்களில் வலிமையையும் காட்டினார். நாகை நாராயணனின் மிருதங்கம் தக்க பக்க பலம். சிக்கில் பாலுவின் வயலின் இசை நாட்டியத்துடன் சங்கமமாகிவிட்டது. பத்மினி வெங்கடேசனின் இசை சுநாதம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT