Published : 10 Apr 2014 04:08 PM
Last Updated : 10 Apr 2014 04:08 PM
நெல்லை மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருக்குறுங்குடி. 1500 வருடம் பழமையான இந்த புண்ணிய க்ஷேத்திரம், 108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்த தாகும். வராஹப் பெருமான் தனது பிரம்மாண்டமான உருவத்தைக் குறுக்கியது இந்தத் தலத்தில் என்பதால் திருக்குறுங்குடி ஆயிற்று.
வாமன க்ஷேத்திரம் என்ற பெருமை வாய்த்ததால், குறியவன் வசிக்கும் குடில் எனும் அர்த்தம் தொனிக்கக் குறுங்குடி என்று பெயர் பெற்றது. வராஹ மூர்த்தியின் மடியிலிருந்து பூமிப் பிராட்டி கைசிக மஹாத்மியத்தை இத்தலத்தில் உபதேசம் பெற்று, பின் பூவுலகில் ஆண்டாளாக அவதரித்துப் பெருமாளின் பெருமையைப் பரப்பியதால், ஆண்டாளின் அவதாரக் காரணத் தலம் திருக்குறுங்குடி. நம்மாழ் வாரின் பெற்றோர்களான காரியும், உடைய நங்கையும் இத்தலத்தில் வந்து புத்திர பாக்கியம் வேண்டிப் பிரார்த்தித்ததால், திருக்குறுங்குடி நம்பியின் அம்சமாக நம்மாழ்வார் அவதரித்தார். எனவே இத்தலத்தில், நம்மாழ்வாருக்குத் தனி சன்னதி இல்லை. திருமங்கை ஆழ்வார் பரமபதம் அடைந்த தலமும் இதுவே.
இத்தலத்தில், பெருமான் ஐந்து நிலைகளில் சேவை சாதிக்கிறார். நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி மற்றும் மலை மேல் நம்பி என்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நம்பி கோவிலின் மூலவர், நின்ற திருக்கோலத்தில் உள்ள வடிவழகிய நம்பி. ஒரு முறை பார்த்தவர் திரும்ப திரும்பப் பார்க்க வருவர் என்று சொல்லும் அளவிற்குச் சிவந்த திருமேனியுடன், தாமரையை ஒத்த விசாலமான செவ்வரி ஓடிய கண்களுடன் காட்சி தருகிறார். இந்த வடிவத்தில் மனதைப் பறிகொடுத்த நம்மாழ்வார், திருவாய்மொழி ஐந்தாம் பத்தில் இவ்வாறு கூறுகிறார்:
எங்ஙனயோ, அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்,
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும், செல்கின்றது என் நெஞ்சமே!
தாயார் இங்கு குறுங்குடி வல்லி நாச்சியார் என்ற பெயரோடு அருள் பாலிக்கிறார். பக்கம் நின்ற சிவன் எனும் சிவன் சன்னதியும் இங்கு உள்ளது. கோட்டை மதில் சுவரைப் போன்று உயரமான சுற்றுச் சுவர். அருமையான சிற்பங்கள் கோவில் உள்ளேயும், வெளி மண்டபத்திலும் உள்ளன. கரண்ட மாடு பொய்கை என்ற புஷ்கரணியும், தல விருட்சமான பனைமரமும் உள்ளேயே அமைந்துள்ளன.
நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி என்ற மூன்று கோலங்களையும் கோவிலுக்குள்ளே தரிசிக்கலாம்.
மங்களாசாசனம்
இத்தலத்தைப் பெரியாழ்வார், திருமழிசை யாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய நால்வர் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமழிசை ஆழ்வார் தனது திருச்சந்த விருத்தத்தில்,
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்,
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்!
என்று பொய்கையின் வளத்தைப் பாடியுள்ளார்.
ஸ்ரீ இராமானுஜர்
ஸ்ரீ இராமானுஜர் பல திவ்ய தேசங் களை மங்களாசாசனம் செய்து வரும்போது, திருக்குறுங்குடி வந்தார். அவரிடம் நம்பி, அவரை ஆசாரியனாகக்கொண்டு, தான் சிஷ்யனாக இருக்க விருப்பம் தெரிவித்து, அவருக்கு திவ்ய ஆசனம் அளித்தார். இராமானுஜரும், நம்பிக்கு த்வய மந்திரோபதேசம் செய்து, “ஸ்ரீ வைஷ்ணவ நம்பி” என்று தாஸ்ய நாமம் கொடுத்தார். திருவட்டாறு, திருவெண்பரிசாரம் போன்ற திவ்யதேசங்களைக் கடந்து, திருவனந்தபுரம் சென்ற இராமானுஜரை, அங்குள்ள நம்பூதிரி களின் வேண்டுகோளுக்கு இரங்கி, பெருமாள் இராமானுஜரைத் திருக்குறுங்குடியில் விட்டுவிடுமாறு தனது கருடனைப் பணித்தார். கருடனும், திருக்குறுங்குடியில் உள்ள திருவட்டப்பாறையில் விட்டுவிட்டார்.
காலையில் கண்விழித்த இராமானுஜர், திருக்குறுங்குடியில் இருந்ததைக் கண்டு வியந்து, அனுஷ்டானம் முடித்த பின், திருமணக் காப்பிடத் தனது சிஷ்யனான வடுக நம்பியை அழைத்தார். நம்பி, வடுக நம்பியாக வேடம் பூண, இராமானுஜரும் அவருக்கு திருமண் காப்பிட்டார். நம்பியை சேவிக்க சன்னதிக்கு சென்ற இராமானுஜர், வடுக நம்பியை தன்னருகே காணாமல் தேடிய போது, தம்மால் இடப்பட்ட திருமண் காப்பு, நம்பியின் திருநெற்றியில் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.
கைசிக புராணம்
நம்பாடுவான் என்பான் இத்தலத்திற்கு அருகே ஒரு கிராமத்தில் வசித்தான். தினமும் அதிகாலையில் நீராடிவிட்டு, திருக்குறுங்குடி பெருமானைப் பலவாறு பண்ணிசைத்துப் பாடி மகிழ்ந்தான். கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியன்று கோவிலுக்கு சென்றபொழுது, ஒரு பிரம்ம ராட்சசன் அவனைத் தடுத்து, “ நீ எனக்கு உணவாக வேண்டும்” என்றான். அவனோ நான் பெருமாளை வழிபட்டு வந்த பின் உனக்கு உணவாகிறேன் என்றான். பிரம்ம ராட்சசன் அதை நம்பவில்லை. நம்பாடுவான் பல விதமான சத்தியம் செய்தபோதும் பிரம்ம ராட்சசன் நம்பவில்லை. இறுதியாக, நம்பாடுவான் கீழ்க்கண்ட வாறு சத்தியம் செய்தான்.
நான் திரும்ப வராவிட்டால், “எவன் ஒருவன், பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனுக்கு ஈடாக மற்றொரு தெய்வத்தை நினைப்பானோ, அவன் அடையும் துர்க்கதியை நானும் அடையக் கடவேன்” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், பிரம்ம ராட்சசன் நம்பாடுவான் நம்பியைச் சேவித்து சீக்கிரம் வருமாறு பணித்தான்.
நம்பாடுவான் கைசிகப் பண்ணை இசைத்து நம்பியைப் பாடிய போது, கொடிமரம் சற்று விலகி எம்பெருமானின் தரிசனம் கிடைக்கப் பெற்றான். பிறகு, தான் சத்தியம் செய்தபடி பிரம்ம ராட்சசனை நோக்கி சென்றபோது, நம்பியே ஒரு முதியவராக தோன்றி அவனை வழிமறித்து, பிரம்ம ராட்சசனின் பசிக்கு இரையாகாமல் வேறு வழி செல்லுமாறு கூறினார். ஆனால், சத்திய விரதனான நம்பாடுவான் அதை மறுத்து, வாக்களித்தபடி பிரம்ம ராட்சசனை நோக்கிச் சென்றான்.
பிரம்ம ராட்சசனுக்கு மீட்சி
நம்பாடுவானின் நேர்மையால் மகிழ்ந்த பிரம்ம ராட்சசன்,” நீ பெருமானை நோக்கிப் பாடிய பாடல்களின் பலனை எனக்கு கொடுத்தால், உன்னை விட்டுவிடுகிறேன்” என்றான். நம்பாடுவான் ராட்சசனை நோக்கி, நான் சத்தியம் செய்தபடி தவறாமல் வந்துவிட்டேன். நீ என்னை ஆகாரமாக்கிவிடு. அழகிய நம்பியைப் பாடிய பலனைத் தர முடியாது என்றான். அப்பொழுது பிரம்ம ராட்சசன், நீ நம்பியைப் பாடிய பலத்தில் கால் பாகமாவது தந்து என்னை இந்த ராட்சச ஜன்மத்தில் இருந்து கரையேற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்கச் சரணடைந்தான். அந்த ராட்சசனை அன்புடன் அணைத்த நம்பாடுவான், “நீ எப்படி இவ்வாறு மாறினாய்?” என்று கேட்க, பிரம்ம ராட்சசன் தனது கதையைக் கூறினான்.
“நான் சரக கோத்திரத்தைச் சேர்ந்த ஸோம சர்மா. ஒரு யக்ஞத்தைத் தவறாகச் செய்து, அது முடிவதற்குள் இறந்துவிட்டதால், இவ்வாறு அலைகிறேன்” என்றது. மேலும், உனது தரிசனத்தாலும், ஸ்பரிசத்தாலும், எனக்கு முன் ஜன்ம ஞானம் உண்டானது என்றும் கூறியது.
நம்பாடுவானும் அழகிய நம்பியைக் கைசிகம் என்ற பண்ணினால் பாடின பலனைத் தர, ராட்சசன் சுய உருவம் பெற்றான். இந்தப் புராணம் திருக்குறுங்குடியில் பிரதி வருடம் கைசிக ஏகாதசியன்று நம்பாடுவான் சரித்திர நாடகமாக நடத்தப்படுகிறது. இதில் நம்பாடுவான், பிரம்ம ராட்சசன், நம்பிக் கிழவன் ஆகிய மூன்று பாத்திரங் களே நடிப்பர். நடிப்பவர்கள் 10 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கிறார்கள். விரதம் அனுஷ்டிக்காமல் வேஷம் பூண்டால் அவர்களுக்குக் கெடுதல் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த புராணத்திலிருந்து, நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் விஷ்ணு பக்தனான ஒருவரின் தரிசனத் தாலும், ஸ்பரிசத்தாலும் எம்பெருமான் அருளுக்குப் பாத்திரமாகி, வீடுபேறு அடையலாம் என்ற உண்மை காட்டப்படுகிறது.
நாமும் திருக்குறுங்குடிச் நம்பியை சேவித்து, நம்பாடுவான் பெற்ற பேற்றை பெறுவோமாக!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT