Last Updated : 08 Jan, 2015 02:53 PM

 

Published : 08 Jan 2015 02:53 PM
Last Updated : 08 Jan 2015 02:53 PM

நடனத்தில் முத்திரை பதித்தவர்

தாயே தனது முதல் குரு என்று கூறிப் பேசத் தொடங்கினார் நடனமணி டாக்டர் லஷ்மி ராமசாமி. கட்டுப்பாடுகள் மிகுந்த குடும்பப் பின்னணியில் பிறந்த தனது அம்மாவின் விருப்பம் காரணமாகவே தான் இத்துறைக்கு வந்ததாக தெரிவித்த லஷ்மி ராமசாமிக்கு இளம் வயதிலேயே அமெரிக்கா அளித்து வரும் ஃபுல் பிரைட் ஸ்காலர்ஷிப் (full bright scholarship) கிடைத்தது.

அரங்கேற்றத்தை திருநெல்வேலியில் முடித்து சென்னை வந்த பின் சித்ரா விஸ்வேஸ்வரனிடம் நடனம் கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது நடனப்பள்ளியான சிதம்பரம் அகாடமி ஆஃப் பெர்பாஃமிங் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தில் நடன ஆசிரியர் ஆனார். ஸ்ரீமுத்துக்கிருஷ்ண சாமி மிஷன் அறக்கட்டளையில் காலை ஐந்து மணிக்குத் தொடங்கும் நடனவகுப்பில் சேர்ந்தார்.

“சித்ரா அக்காவிடம் செல்லும் வரை நடனம் என்பது உடல் அசைவுகள் என்றே நினைத்திருந்தேன். ஒரு முறை அவர் நிகழ்த்திய நாட்டிய நாடகத்தில் சீதையாக பாத்திரம் ஏற்ற நான், பயிற்சியினை முடித்து திரும்பிப் பார்த்தால், அக்கா முகத்தில் திருப்தி இல்லை. திருத்திக் கொள்வதற்காக மீண்டும் மீண்டும் கேட்டபொழுது, புத்தகம் படிக்கச் சொன்னார்.

வால்மீகி ராமாயணத்தில் சீதை அக்னி பிரவேசம் முடிந்து வெளியே வந்தபோது, கையைக் கூப்பியபடி இருந்ததாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார். கைபாவத்தைத் திருத்திக்கொள்ள இந்த வழிகாட்டுதல் உதவியது. கலையைக் கற்கும்பொழுது படிக்கும் பழக்கமும் சேர்ந்தே வருகிறது என்பதை இந்நிகழ்ச்சி உணர்த்தியது” என்றார்.

“சிவனை குறிக்க ஜடாமுடி தரித்து, நெற்றியில் விபூதியும், கழுத்தில் பிளாஸ்டிக் பாம்பும் போட்டுக் கொண்டால் உருவ அமைப்பைக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் உடல் மொழியில் கொண்டு வருதல் என்பது குரு தரும் பயிற்சியால் மட்டுமே முடியும்.

இது அரிசியில் இருந்து கல்லை நீக்குவது போல நேர்த்தியைத் தரும். பரத நாட்டியத்தில் `கரானா’ வகையை டாக்டர் பத்மா சுப்பிரமணியனிடம் கற்றேன்” என்றார். இவரது மற்றொரு குரு கலாநிதி நாராயணன். தமிழ் இலக்கிய நுணுக்கங்களை இவருக்குக் கற்றுத் தந்த குரு டாக்டர் எஸ். ரகுராமன்.

‘ஷல் வீ நோ நாட்டியா’ என்ற புத்தகத்தை எழுதிய இவர், அண்ணாமலை, அழகப்பா பல்கலைகழகங்களுக்கும் பாடப்புத்தகங்கள் எழுதியுள்ளார். மத்திய அரசு நிதியுதவி திட்டத்தில் சிலப்பதிகாரம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார்.

“அமெரிக்காவிற்கு ஃபுல் பிரைட் ஸ்காலர்ஷிப்பில் (full bright scholarship) ‘கலை மற்றும் கலாசார நிர்வாகம்’ என்பது குறித்துப் படிக்கச் சென்றேன். சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. இங்கு நிர்வாகம் என்பது நடனத்தைப் பொறுத்தவரை, நடன இயக்கம், லைட்ஸ், மேடை அமைப்பு, மைக், இசை என பல பகுதிகளைத் தனித்தனியாகக் கொண்டிருந்தது.

ஆனால் இந்தியாவில் நடனம் ஆடுபவரே அனைத்தையும் செய்கிறோம் என்று நான் கூறியதைக் கேட்ட அமெரிக்க டீச்சர் ஆச்சரியம் அடைந்து கலை நிர்வாகத்தை இந்தியாவிற்கு வந்து தான் கற்க விரும்புவதாகக் கூறினார்” என்கிறார் பன்முகத் திறன் கொண்ட நடனமணி டாக்டர் லஷ்மி ராமசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x