Published : 16 Jan 2015 10:12 AM
Last Updated : 16 Jan 2015 10:12 AM
நீங்கள் இப்பொழுது பெற்றுவரும் கல்வி முறையில் சில நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் கெடுதல்களே மிகுதியாக உள்ளன. அந்தக் கெடுதல்கள் நல்ல அம்சங்கள் யாவற்றையும் மறைக்கும்படி அவ்வளவு அதிகமாக உள்ளன. முதலாவது அது நம் மக்களுக்கு ஆண்மையளிக்கக்கூடியதாக இல்லை. அது முற்றிலும் எதிர்மறைத் தன்மையானதாக உள்ளது.
எதிர்மறை உணர்ச்சியை உண்டுபண்ணும் கல்வி அல்லது பயிற்சி மரணத்தைவிடக் கொடியதாகும். ஒரு குழந்தை பள்ளிக்குச் சென்றதும் அதன் தகப்பனார் ஒரு முட்டாள் என்று முதற் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இரண்டாவது, அதன் பாட்டனார் பைத்தியக்காரர் என்றும், மூன்றாவதாக அதன் ஆசிரியர்கள் வெளிவேஷக்காரர்கள் என்றும், நான்காவதாக நம் சாஸ்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் கற்பிக்கப்படுகிறது. அந்தக் குழந்தை பதினாறு வயதை அடையும்பொழுது எதிர்மறை உணர்ச்சியின் வடிவமாக, உயிரற்ற எலும்பற்ற வஸ்துவாக ஆகிவிடுகிறது.
நம் நாட்டில் மிக உயர்ந்த மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்ற விவரம் நமக்கு உணர்த்தப்படுவதே இல்லை. ஆக்கக் கருத்து எதுவும் நமக்கு கற்பிக்கப்படுவதில்லை. நமது கைகளையும் கால்களையும் எப்படிப் பயன்படுத்துவது என்பதுகூட நமக்குத் தெரியாது. ஆங்கிலேயர்களின் மூதாதையர்களைப் பற்றிய எல்லாப் புள்ளிவிவரங்களையும் நாம் தெளிவாக அறிகிறோம்.
ஆனால் நமது சொந்த மூதாதையர்களைப் பற்றி அக்கறைப்படாத பரிதாப நிலை உள்ளது. நாம் பலவீனத்தைத்தான் கற்றுக்கொண்டிருக்கிறோம். நாம் தோற்கடிக்கப்பட்ட மக்களினமாதலால் “நாம் பலவீனர்கள். நமக்கு எதிலும் சுதந்திரமில்லை” என்று நாமே நம்பும் நிலைக்கு இழிந்துவிட்டோம். இந்நிலையில் `சிரத்தை’யை இழக்காமல் எப்படி இருக்கமுடியும்?
கல்வியென்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக்கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாக்குகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும்.
கருத்துக்கள் ஜீரணமாக வேண்டும். நீங்கள் ஐந்தே கருத்துக்களை நன்றாக ஜீரணித்துக் கிரகித்து அவற்றை உங்களது வாழ்க்கையிலும் ஒழுக்கத்திலும் நிறைந்ததாகச் செய்வீர்களாயின் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனைவிடப் பெரிய கல்விமான் ஆவீர்கள். ஆகையால் நமது லட்சியம் நம் தேசத்துக் கல்வி, ஞானமனைத்தையும் பெறுவதாக இருக்க வேண்டும். நமது தார்மிக லௌகிக, ஞானம் அனைத்தும் அடங்கிய அந்தக் கல்வி ஞானத்தை சத்தியமானவரையில் நமது தேசிய வழிகளில் தேசிய அடிப்படைகளில் நாம் கைக்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT