Published : 18 Dec 2014 01:35 PM
Last Updated : 18 Dec 2014 01:35 PM
வருடா வருடம் டிசம்பர் 1-ஆம் தேதியன்று கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் தங்களின் கலை விழாவைத் தொடங்கிவிடுவார்கள். நாரத கான சபா அரங்கம் முதல் நாளே களை கட்டியது. இந்த வருடத்தின் ‘இசைப் பேரொளி’ சாகேதராமன். ‘நடன மாமணி ’அன்வேஷா தாஸ். இருவருமே துடிப்பு மிக்க இளைஞர்கள். இந்த விருது அவர்களின் கலையை மேலும் வளர்க்கும்.
கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நடத்தும் இசை விழாக்கள், ஒரு குடும்பத்தின் திருமண விழாவைப் போல்தான் நடக்கும். வெவ்வேறு இடங்களில் நடத்தப்படும் அவர்களின் எல்லா விழாக்களுக்கும், அரங்கத்தின் பிரதான நுழைவாயிலில் நின்றபடி சபாவின் தலைவர் ஆர். சபாரெத்தினம் புன்னகையோடு வரவேற்பார். ரசிகரோடு ஓர் இனிய பந்தத்தை ஏற்படுத்தும் இந்த நிகழ்வைப் பல வருடங்களாக கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் நடத்திவருகிறது.
இனி நிகழ்ச்சிகளுக்குச் செல்வோம். டிசம்பர் 12-ம் தேதிவரை நாரத கான சபாவிலும் அதன் பின் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 250-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள். இதில் பாட்டு, வாத்திய இசை, நாட்டிய பயிலரங்கம், ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் என்று பலவகை உண்டு. இன்னொரு சிறப்பு, மயிலாப்பூரில் நடந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில், கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள பவன்ஸ் TAG கலையரங்கத்தில் ஏழு நாட்களுக்குத் தமிழ் இசை விழா (டிசம்பர் 26- ஜனவரி1, 2015) நடைபெறும்.
3-ம் நாள் மாலையில் விஜய் சிவாவின் கச்சேரி. ஆரம்பமே படுஜோர். நின்னு ஜூசி (பட்ணம் சுப்ரமணிய ஐயர் சவுராஷ்டிரம்). டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாள் ஆட்டத்தில் முதல் பந்தில் அடித்த பவுண்டரி மாதிரி இருந்தது.
எங்கள் வீட்டில் அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பமாக வசித்தபோது, அத்தைமார்களும் சித்திமார்களும் மற்றும் பெண் குழந்தைகளும் பாடல் பயிற்சி செய்வார்கள். பக்கத்தில் அடுக்களையிலிருந்து ரசத்திற்கு தாளித்துக்கொண்டே எனது பாட்டி, “வாயத் திறந்து பாடுங்கோ. இது போறாது” என்று கத்துவார்கள். சிறுவனாக அப்பொழுது எனக்குப் புரியாத புதிர். ஆனால் வாயைத் திறந்து பாடுவது எவ்வளவு முக்கியம் என்பதை போகப்போக நான் புரிந்துகொண்டேன். விஜய் சிவா, தியாகய்யர் சொல்லியதுபோல், அடிவயிறு, இருதயம், கழுத்து இம்மூன்றினையும் ஒருங்கிணைத்துத் தொய்வில்லாமல் பாடிவருகிறார். அன்றும் தொய்வே இல்லை.
சியாமா சாஸ்திரியின் `நின்னுவினா’ பாடி, அந்த அம்பாளையே நம் கண்முன் நிறுத்திவிட்டார். அன்றைய ராக ஆலாபனைகள் முறையே அடானா, பந்துவராளி, தோடி என அனைத்துமே சிறப்பாக அமைந்தன.
லால்குடி ஜெயராமனின் மகள் விஜயலஷ்மி, அப்பாவின் பெண் என்று நிரூபித்துவிட்டார். வயலின் ஸோலோ மட்டும் வாசிக்காமல் பல கலைஞர்களுக்குப் பக்கவாத்தியமும் வாசித்துவருகிறார். அந்த அனுபவம் அவரின் வாசிப்பில் தெரிகிறது. லால்குடி பாணியிலிருந்து மாறாமலும் இருக்கிறது.
விஜய் சிவா, தன் இசையில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளவர். விருத்தங்களும், அரிய தமிழ்ப் பாடல்களும் நிச்சயம் உண்டு. அன்றும் திருநாவுக்கரசரின் வரிகளை, பிலஹரி, பெஹாக், முகாரி ராகங்களில் விருத்தமாக அளித்துவிட்டு, அப்படியே `என்றைக்கு சிவக்ருபை வருமோ’ (நீலகண்ட சிவன்) பாடி மனதை உருக்கிவிட்டார்.
அருண்பிரகாஷ் (மிருதங்கம்). இவர் ஒரு பாடகரும்கூட. ராகங்களை நன்றாக அறிந்தவர். இசை அமைப்பாளர் எல்.கிருஷ்ணனின் மகன். பக்கவாத்தியமாக மட்டுமே செயல்படுவார். பாடகர்களை தன் வாசிப்புக்கேற்றபடி இழுக்க மாட்டார். ஆனால் அதேசமயம் கச்சேரியைத் தன் வாசிப்பினால் மெருகேற்றும் அபாரமான திறமை கொண்டவர். அன்றும் அவரின் பங்களிப்பு கச்சேரியை மேம்படுத்தியது நிதர்சனமான உண்மை. குருபிரசாத் (கடம்) அருணை நிழலாகப் பின்தொடர்ந்து வாசித்தார்.
அடுத்த நாள் எஸ்.சவும்யா பாட வேண்டிய நிகழ்ச்சி. அவரின் உடல் நலக்குறைவால் ரத்தாகி, அவருக்குப் பதிலாக, அம்மா மகள் இணைப்பில் ஒரு புதிய கூட்டாக மேடையில் சாருமதி ராமச்சந்திரன் சுபஸ்ரீ ராமச்சந்திரனின் கச்சேரி நடைப்பெற்றது.
மூத்த பாடகியாக இருந்தும், ரத்தான நிகழ்ச்சிக்குப் பாடி, நிர்வாகத்தினருக்குக் கைகொடுத்ததற்காக அவருக்குச் சிறப்புப் பாராட்டுக்கள். தன் அனுபவத்தைக் கொண்டே, இரண்டு மணிநேர நிகழ்ச்சியைத் தன் தோளில் சுமந்து வெற்றியும் அடைந்தார். எம்.எல். வசந்தகுமாரியின் குரல் தேனையும் வெண்ணையையும் குழைத்ததுபோல் இருக்கும். சாருமதியின் இசை பட இடங்களில் எம்.எல்.வி.யை நினைக்கவைத்தது. குறிப்பாக ஹம்ஸவிநோதினி ராகத்தை அவர் கையாண்ட விதம், அவரின் இசை முதிர்ச்சியை நிரூபித்தது.
சுபஸ்ரீ ராமச்சந்திரனுக்கு அவரின் அம்மாவைவிட சற்றுக் கனமான சாரீரம். கல்யாணி ஆலாபனையில் தான் யார் என்பதைப் புரியவைத்தார். இருவரும் இணைந்து பாடியது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்தது.
எம்பார் கண்ணன் (வயலின்), நெய்வேலி நாராயணன்(மிருதங்கம்), சந்திர சேகர சர்மா (கடம்) இடம், பொருள், ஏவல் அறிந்து வாசித்தார்கள். புரந்தரதாஸர், அன்னமய்யா, நாரயணதீர்த்தர், பாபநாசம் சிவன் ஆகியோரின் பாடல்களை மட்டுமே கொண்டு நிகழ்ச்சி அமைந்தது ஒரு புதுமை.
மதியம் 2 மணி நிகழ்ச்சியாக இளைஞர் ஜெயந்த்தின் புல்லாங்குழல் கச்சேரி நடந்தது. சிறுவனாக வாசிக்கும்பொழுது இவரைப் பற்றி எனக்குத் தோன்றிய எண்ணம் அன்று உண்மையானது. புல்லாங்குழல் இசைப்பதில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. ஊதுவதில் ஒரு தனித்துவம் வாய்ந்த அழுத்தம் இருக்கிறது. சில சமயம் நம்மை ஊடுருவிச் செல்லும் அளவிற்கு அமைந்துள்ளது, இறைவன் கொடுத்த வரம். அவர் தாத்தா புல்லாங்குழல் வித்வான் சங்கரன் அவர்களின் ஆசியும்கூட. அவரின் தாத்தாவுக்குக் கிடைக்காத நியாயமான அங்கீகாரம் நிச்சயம் இந்த இளைஞருக்கு இன்னும் சில வருடங்களில் கிடைக்குமென்று நம்பலாம். ரீதிகௌள அடதாள வர்ணம் தொடங்கி நிகழ்ச்சி முழுவதும் பாவம் நிறைந்ததாக அமைந்தது சிறப்பம்சமாகும்.
ரிஷபப்ரியா ராகத்தை வீணை பாலச்சந்தர், எம்.எல்.வி. ஆகியோர் கையாளக் கேட்டிருக்கிறேன். அன்று ஜெயந்த் ராக ஆலாபனையை ஒரு குறையும் இல்லாமல் செய்துமுடித்தார். கோடீஸ்வர ஐயரின் `கணநய தேசிக’ தன்னுள்ளே அந்த ஆதித் தாளக்கட்டை இயற்கையாகவே அமைத்துக்கொண்டதாகவும், குதிரை வண்டிச் சவாரியையொத்ததாகவும் இருக்கும். இதை நன்றாக அறிந்த என்.சி.பரத்வாஜ் (மிருதங்கம்) கோர்வைகளை அமைத்த விதம் ஜோராக அமைந்தது. கே.ஜே. திலீப் (வயலின்) மற்றுமொரு இளைஞர், அடுத்த கட்டத்திற்குத் `தான் தயார்’ என்று அறிவிக்கும் விதத்தில் அவரின் ராக ஆலாபனைகள் அமைந்திருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT