Last Updated : 25 Dec, 2014 04:35 PM

 

Published : 25 Dec 2014 04:35 PM
Last Updated : 25 Dec 2014 04:35 PM

சேரிக்கும் சேர வேண்டும்

உலகின் மாபெரும் இசை விழாக்களில் ஒன்றைச் சென்னை நடத்துகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் - அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமாகவும் இசை, நடன விழாக்கள் நடைபெறுகின்றன என்பது பலரது ஆதங்கம். இந்த நிலை மாற வேண்டும் என்று நினைப்பவர்களில் சிலர் செயலூக்கத்துடன் இதற்குத் தீர்வுகாண முனைந்திருக்கிறார்கள். இதன் விளைவாக முதல் முறையாகக் குடிசைப் பகுதி ஒன்றில் கர்னாடக இசைக் கச்சேரி இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது.

எலியட்ஸ் கடற்கரை அருகில் ஊரூர் ஆல்காட் குப்பம் என்ற மீனவர் கிராமத்தில் இம் மாதம் 29, 30 ஆகிய இரு நாள்களில் இசை, நடன விழாக்கள் நடத்தப்படுகின்றன. ஊரூர் ஆல்காட் குப்பத்தின் மக்களும் அங்குள்ள பஞ்சாயத்து அமைப்பு, கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் கூட்டு முனைப்பாக இந்த இசை விழா நடைபெறுகிறது.

குறிப்பிட்ட சிலருக்கான ஒன்றாகவும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நிகழ்த்தப்படுவதாகவும் இசை முடங்கிவிடக் கூடாது எனத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கர்னாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவும் சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமனும் இந்த முயற்சிக்குப் பின்னணியில் இருக்கிறார்கள். பி. உன்னிகிருஷ்ணன், ஆர். குமரேஷ் போன்ற முன்னணி இசைக் கலைஞர்களும் இதில் பங்குபெறுகிறார்கள். பாட்டு மட்டுமின்றிப் பல்வேறு கலை வடிவங்களும் இந்த இரண்டு நாள் விழாவில் இடம்பெறும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கலையுலகில் இதுவரை எழுப்பப்பட்டிருந்த படிநிலைச் சுவர்களைத் தகர்த்து எல்லாத் தரப்பு ரசிகர்களையும் இந்தக் கலைகள் சென்றடையும் என்ற நம்பிக்கையை நித்யானந்த் ஜெயராமன் வெளிப் படுத்துகிறார். செயற்கையான பிரிவுகளைத் தாண்டிக் கலை பெருவாரியான மக்களைச் சென்றடைய இது உதவும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஊரூர் ஆல்காட் குப்பம் கிராமத்தில் தூய்மைப் பணியையும் மேற்கொள்ளவிருக்கிறோம் என்றும் நித்யானந்த் ஜெயராமன் குறிப்பிடுகிறார்.

மேட்டுக்குடியினருக்கான கலையாகவே இருந்துவரும் இசையைப் பிற இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் இந்த முயற்சி மேட்டுக்குடியினரின் கலையையே அனைவருக்குமான கலையாக மாற்றும் முயற்சியாக முடிந்துவிடக் கூடிய அபாயம் இருக்கிறதே என்று கேட்டதற்கு, “அந்த அபாயம் இருப்பதை நாங்களும் உணர்ந்திருக்கிறோம். எங்கள் நோக்கம் ஒரு கலையைச் சிறிய வட்டத்திலிருந்து விடுவித்து வெளியே கொண்டுவருவது. மற்ற கலைகளுக்கும் இதில் முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் ஒரு குறீப்பிட்ட வடிவம் மையத்துக்கு வருவதைத் தவிர்க்கிறோம்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x