Published : 11 Dec 2014 03:27 PM
Last Updated : 11 Dec 2014 03:27 PM

அல்குர்ஆன் ஒளியில் கிறிஸ்துவின் பிறப்புச் செய்தி!

உலகெங்கும் ஏசு கிறிஸ்துவின் பிறப்புக் கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த டிசம்பர் மாதத்தில், திருக்குர்ஆன் தரும் கிறிஸ்துவின் பிறப்புச் செய்தி ஒன்றை அறிந்து, இங்கே காணலாம்.

உலக மக்களை நேர்வழிப்படுத்த வந்த ‘நபி’என்ற இறைத்தூதர்களில் ஒருவராகவும், இறைத் தூதர்களில் வேதம் வழங்கப்பட்ட ‘ரசூல்’என்ற உயர் அந்தஸ்தைப் பெற்றவராகவும் கிறிஸ்துவை குர் ஆன் உயர்வுபடுத்துகிறது.

வேதங்கள் வழங்கப்பட்டு ரசூல் என்ற உயர் அந்தஸ்தைப் பெற்ற இறைத் தூதர்கள் நால்வரே. மோஸஸ் என்ற மூசா நபிக்கு தவ்றாத் வேதம் (பத்துக் கட்டளைகள்); தாவீத் என்ற தாவூத் நபிக்கு சபூர் வேதம் (சங்கீதம்); ஜீஸஸ் என்ற ஈசா நபிக்கு இன்ஜீல் வேதம் (விவிலியம்); இறுதித் தூதரான முகம்மது நபிக்கு அல்குர் ஆன்.

இறைத் தூதர்களையும், அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட மூல வேதங்களையும் விசுவாசம் கொள்வது ஒரு முஸ்லிம்மின் நம்பிக்கை ஆகும்.

குர்ஆன் வாசிப்பில் ஏசு பற்றியும், அன்னை மரியம் பற்றியும் பல தகவல்களைப் பெறலாம். குறிப்பாக, மரியத்தின் தந்தை இம்ரானின் பெயரில் அமைந்துள்ள ‘ஆலஇம்ரான்’ (இம்ரானின் சந்ததிகள்) என்ற 3-வது அத்தியாயமும், அன்னை மரியத்தின் பெயரில் அமைந்துள்ள ‘சூரத்து மர்யம்’ என்ற 19-வது அத்தியாயமும் ஏசு குறித்தும் மரியம் குறித்தும் நிறையவே பேசுகின்றன.

குர்ஆனின் இந்த வரலாற்றுப் பதிவில் அன்னை மரியத்தின் பிறப்பு தரும் செய்தி ஒன்றும், ஏசு கிறிஸ்துவின் பிறப்பு தரும் செய்தி ஒன்றும் உலக மாந்தர் அனைவரும் போற்றிப் பின்பற்றுவதற்கு உரியனவாக அமைந்துள்ளன.

மரியத்தை அவரது தாயார் கன்னா கர்ப்பத்தில் தாங்கி இருந்தபோது, இறைவனிடம் ஒரு வேண்டுதல், நேர்ச்சை வைத்தார். “இறைவா! எனக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொடு. அந்த ஆண் குழந்தையை நான் முழுமையாக இறைப்பணிக்கே அர்ப்பணிப்பேன்”.

ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை! ஆண் குழந்தை பிறந்தால் இறைப்பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற தனது எண்ணம் நிறைவேறவில்லையே என்று கன்னா வருந்தினாள். பின்னர், இறைவனே இக்குழந்தையின் மகத்துவத்தை நன்கு அறிந்தவன் என்று மனதில் அமைதி கொண்டு, அக்குழந்தைக்கு மர்யம் எனப் பெயர் சூட்டி இறைக்காவலில் வளர்த்தாள். (அல்குர்ஆன் 3 : 33-37)

ஆமாம்… ஆண் குழந்தையை விரும்பிய கன்னாவுக்கு இறைவன் வழங்கிய ‘மர்யம்’ என்ற அந்தப் பெண் குழந்தைதானே, ‘கலிமத்துல் மினல்லாஹ்’ (அல்குர்ஆன் 3 : 39) என்னும் இறைவனின் வாக்கான ஈசாவைச் சுமக்கும் பாக்கியம் பெற்றது!. அகிலத்து மாதர்களில் உன்னதம் பெற்ற முதல் பெண்மணி என்று அன்னை மரியத்தை அல்குர் ஆன் உயர்வுபடுத்திப் பேசுகிறது!

எனவே, “பெண் குழந்தைகள் பிறந்தால் வெறுக்காதீர்! அங்கீகரித்துப் போற்றிப் பேணி வளருங்கள்! மகத்துவம் வாய்ந்த அந்தப் பெண் மக்களே உலகை நேர் வழிப்படுத்திய உன்னதர்களைத் தந்தவர்கள்!” என்ற மாண்பான செய்தியை, அன்னை மரியத்தின் பிறப்புச் செய்தியாக அல்குர்ஆன் தருகிறது. இதுபோன்றே, ஓர் அற்புதமான செய்தியை ஏசு கிறிஸ்துவின் பிறப்புச் செய்தியாக குர்ஆன் பதிவுசெய்துள்ளது.

மரியம் ஆண் துணையின்றி இறையருளால் கருவுற்று ஏசு பாலகனைப் பெற்றெடுக்கிறார். இஸ்ரவேலர்கள் அவரது கற்பின் மீது களங்கம் சுமத்திப் பேசுகின்றனர். இதனால் அன்னை மரியம் வேதனையுற்றபோது, தனது தாயின் வேதனையைப் போக்கும் விதத்திலும், தாயின் கற்பை உலகுக்கு நிரூபிக்கும் விதத்திலும் மரியத்தின் மடியில் பச்சிளம் குழந்தையாகத் தவழ்ந்த ஏசுபாலகனை இறைவன் பேசவைத்த அதிசயத்தை திருக்குர்ஆன் கூறுகிறது.

குழந்தை ஏசு பேசிய செய்திகள்: நான் இறைவனுடைய மகத்தான ஓர் அடியான்; வேதம் கொடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் ஒருவன்; இறைவனது கட்டளைகளை இம்மண்ணுலகில் நிலை நிறுத்த வந்தவன்; நான் எனது தாய்க்கு நன்றி செலுத்துபவனாக இருப்பேன்; எனது பிறப்பு முதல் மறுமைவரை என் மீது சுபசோபனம் நிலை பெற்றிருக்கும் (அல்குர்ஆன் 19 : 27 – 33).

ஏசுபிரான் பச்சிளம் குழந்தையாக இருந்தபோது பேசிய மேற்கண்ட இறை வசனங்களில், நாம் கிறிஸ்து பிறப்புச் செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அற்புதமான வாழ்வியல் படிப்பினை ஒன்றுள்ளது. அதுதான், “நான் என் தாய்க்கு நன்றி செலுத்துபவனாக இருப்பேன்” என்பதாகும். ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டு உலக மாந்தர் அனைவரும் தங்கள் தாய்மார்களுக்கு நன்றி செலுத்துபவர்களாக வாழ்வோம்!

“ நீ இருப்பதற்கு என் வயிற்றில் ஒரு அறை இருந்தது. ஆனால் நான் இருப்பதற்கு உன் வீட்டில் ஒரு அறை கூடவா இல்லை?” என்று கேட்கின்ற முதியவர்கள் இன்று அதிகரித்துவருவது யதார்த்தமான வேதனை.

“பெற்ற தாய் தந்தையரை அவர்களது இறுதிக் காலம்வரை மிக மகிழ்வோடு பாதுகாப்போம்! முதுமையைக் கொண்டாடுவோம்!” என்று உறுதி எடுப்பதே, அல்குர் ஆன் ஒளியில் கிறிஸ்துவின் பிறப்புச் செய்தி தரும் படிப்பினை.

கட்டுரையாளர், உத்தமபாளையம்,
ஹாஜிகருத்த ராவுத்தர் கல்லூரியின்
தமிழ்ப் பேராசிரியர். தொடர்புக்கு : 9364266001 ab.samad@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x