Published : 02 Jun 2016 04:49 PM
Last Updated : 02 Jun 2016 04:49 PM
எகிப்து தேசத்திலுள்ள அலெக்சாண்ட்ரியா நகரத்தின் பிரம்மாண்டமான நூலகம் தீக்கிரையான கதை நமக்குத் தெரியும். ஒரே ஒரு புத்தகம்தான் அந்த விபத்தில் காப்பாற்றப்பட்டது. அதை ஒரு குடியானவன் சில செப்பு நாணயங்கள் கொடுத்து விலைக்கு வாங்கினான். அதன் பக்கங்களுக்கிடையே ஒரு பட்டுத் துணி இருந்தது. அதில் ஒரு உரைகல் பற்றிய ரகசியம் எழுதிவைக்கப்பட்டிருந்தது.
அந்த உரைகல் ஒரு சிறிய கூழாங்கல் என்றும், அதன் மீது எந்த உலோகப் பொருளை வைத்து உரசினாலும் அது பொன்னாக மாறிவிடுமென்றும் எழுதப்பட்டிருந்தது. அந்த அற்புத உரைகல் கருங்கடலின் கரையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கே ஆயிரக்கணக்கான கூழாங்கற்கள் கிடக்குமென்றும், அந்தக் கூழாங்கற்கள் அனைத்தும் சில்லென்று இருக்குமென்றும், அற்புத உரைகல்லோ வெதுவெதுப்பாக இருக்குமென்றும் அந்தக் குறிப்பு கூறியது.
அந்தக் குறிப்பைப் படித்த குடியானவன் தனது சில உடைமைகளை விற்றான். கருங்கடலின் கரையில் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டான். கருங்கடலின் கரையில் முகாமிட்டுக் கூழாங்கற்களைப் பொறுக்கி பரிசோதிக்கத் தொடங்கினான்.
கூழாங்கல்லை எடுத்துப் பார்க்கும்போது, சாதாரண கூழாங்கல் என்று தெரிந்துகொண்ட பிறகு அதை கீழே போட்டுவிட்டால் திரும்பத் திரும்ப கூழாங்கற்களைப் பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். அற்புதக் கூழாங்கல்லைக் கண்டுபிடிப்பது சிரமமாகிவிடும் என்பதால் சாதாரண கூழாங்கற்களைக் கடலில் எறிந்துவிடலாம் என்று திட்டமிட்டான்.
கூழாங்கற்களைப் பொறுக்கத் தொடங்கினான். இப்படியாக நாட்கள் கழிந்தன. வாரங்கள் ஆகின. மாதங்கள் ஆகின. மூன்று வருடங்களைக் கடந்தும் அற்புத உரைகல்லைத் தேடியபடி இருந்தான். குளிர்ச்சியாக இருக்கும் சாதாரண கூழாங்கற்களை காலை முதல் மாலை வரை எறிந்துகொண்டே இருந்தான்.
ஒரு நாள் காலையில் அவன் ஒரு கூழாங்கல்லை எடுத்தபோது அது வெதுவெதுப்பாக இருந்தது. ஆனால் திரும்பத் திரும்ப ஏமாந்துபோய் கடலில் எறியும் பழக்கம் அவனுக்கு இருந்ததால் அற்புத உரைகல்லைக் கண்டுகொண்டதை உணராமல் அதையும் தூக்கிக் கடலில் எறிந்துவிட்டான்.
பழக்கம்தான் அவனை அந்த அற்புதக் கல்லைக் கடலில் தூக்கியெறியச் செய்துவிட்டது. இப்படித்தான் மனம் இயங்குகிறது. நம்பிக்கை என்பது அந்த அற்புத உரைகல் தான்.
மிக அரிதாகவே நம்பிக்கையான ஒரு மனிதரை நாம் காண்கிறோம். வெகு அரிதாகவே அன்பான ஒரு இதயத்தை நாம் பார்க்கிறோம். அன்றாடம் நாம் சாதாரண கூழாங்கற்களையே அதிகம் பார்க்கிறோம். அவையெல்லாம் சில்லென்று குளிர்ந்து இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT